உதய் பாடகலிங்கம்
நகைச்சுவைப் படங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்? இந்த கேள்விக்கான பதில் ரசிகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.
‘சிரிக்க வைக்க வேண்டும்’, ‘நகைச்சுவை புதிதாகத் தெரிய வேண்டும்’, ‘வாழ்வின் அவலங்களைக் கூட, வேறொன்றாகப் பார்க்க வைக்க வேண்டும்’ என்று அவர்கள் சொல்லும் பதில்கள் இன்னும் கூட நீளும்.
ஆனால், அப்படிப்பட்ட திறனைக் கொண்ட படைப்புகளை வெறுமனே ‘துணுக்கு தோரணங்களாக’ கையாண்டவர்களும் உண்டு. முகம் நிறைய பவுடர் அப்பிக்கொண்டு ‘அமெச்சூர்’ நாடக மேடையில் ஏறியது போல, அப்படங்கள் படம்பிடிக்கப்பட்டதும் உண்டு.
அவற்றில் இருந்து விலகி, பல ‘கிளாசிக்’ அந்தஸ்து கொண்ட நகைச்சுவைத் திரைப்படங்கள் தமிழில் நிறைய. அவற்றுள் ஒன்றாகத் திகழ்வது ‘முண்டாசுப்பட்டி’. ’ராட்சசன்’ ராம் குமார் இயக்கிய இத்திரைப்படம் 2014, ஜுன் 13 அன்று வெளியானது. இன்றோடு அது வெளியாகிப் பத்தாண்டுகள் ஆகிறது.
காண முடியாத கிராமம்!
‘முண்டாசுப்பட்டி’ என்ற பெயருக்கு ஏற்ப, அங்கு வசிப்பவர்கள் தலையில் ‘முண்டாசு’ கட்டும் வழக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர். காரணம், அவர்கள் வணங்கும் வானமுனி சாமிக்கு முண்டாசு கட்டப்படுவதுதான்.
அந்த சாமியின் சிலையைக் கோயிலில் இருந்து திருடச் சிலர் முற்பட்டபோது, விண்ணில் இருந்து விழுந்த கல்லொன்று அவர்களைத் தாக்குகிறது. சிலை இருந்த இடத்தை அந்த கல் நிரப்புகிறது. அதனைப் பார்த்த அவ்வூர் மக்கள், வான முனியே தங்களைக் காத்ததாக நம்பத் தொடங்குகின்றனர்.
அந்த ஊரில் ஒரு வினோத வழக்கமுண்டு. புகைப்படம் எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையே அது. அதனால், அவர்கள் தங்கள் வீடுகளில் இறந்தவர்களை மட்டுமே புகைப்படம் எடுக்கின்றனர்.
அந்த வகையில், ஊர் தலைவரின் வீட்டில் இருக்கும் பெரியவரைப் புகைப்படம் எடுக்கின்றனர் கோபி (விஷ்ணு விஷால்), அழகுமணி (காளி வெங்கட்). தீ விபத்தில் அவர்கள் நடத்திவரும் ஸ்டூடியோ எரிந்துவிட, அதில் அந்த நெகட்டிவ் பிலிமும் கருகிவிடுகிறது.
‘அந்த புகைப்படம் இல்லாவிட்டால் அவ்வூர் மக்கள் கொன்றே விடுவார்கள்’ என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் திகைக்கின்றனர். அதன்பிறகே, அவர்களுக்கு அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற முனீஸ்காந்தின் நினைவு வருகிறது.
அவரும் அந்த பெரியவர் போன்ற தோற்றமுடையவர்தான். அதனால், அவருக்கு மரணமடைந்த பெரியவர் போன்று ஒப்பனை செய்து புகைப்படம் எடுக்கின்றனர்.
அந்த உண்மை அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்துவிட, கோபியும் அழகுமணியும் ஊரை விட்டு ஓடுகின்றனர். அவர்களை ஊர்க்காரர்கள் பிடித்துவிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, ஊருக்காகக் கிணறு தோண்டுமாறு அவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்தில் தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால், ஊர் தலைவரின் மகள் கலைவாணியை (நந்திதா ஸ்வேதா) காதலிப்பதற்காகவே அவர்களிடம் வேண்டுமென்றே பிடிபட்டதாகச் சொல்கிறார் கோபி. மெல்லக் கலைவாணியிடம் தனது காதலையும் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில், வானமுனி கோயிலில் சிலைக்குப் பதிலாக உள்ள கல் காணாமல் போகிறது. கோபியும் அழகுமணியும் அதனைத் திருடியவர்களிடம் இருந்து மீட்கின்றனர். அதையடுத்து, ஊர் பஞ்சாயத்தில் கோபி என்ன கேட்டாலும் கொடுப்பது என்று முடிவாகிறது. அவரோ, கலைவாணியைப் பெண் கேட்கிறார். அடுத்த நிமிடமே, கலைவாணிக்கும் கோபிக்கும் திருமணம் நடக்கிறது.
அந்த நேரத்தில், அங்கு வரும் முனீஸ்காந்த் ‘வானமுனி கோயிலில் கல்லைத் திருடியதே கோபியும் அழகுமணியும் தான்’ என்று சொல்கிறார். அவர் சொல்லி முடிக்கும் முன்பே கலைவாணி, கோபி, அழகுமணி மூவரும் அங்கிருந்து ஓடத் தொடங்குகின்றனர்.
அவர்கள் முண்டாசுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் பிடிபட்டார்களா என்பதைச் சொல்வதோடு படம் முடிவடைகிறது.
உண்மையைச் சொன்னால், முண்டாசுப்பட்டி போன்ற ஒரு கிராமத்தை நாம் எங்கும் காண முடியாது. அதேநேரத்தில், வினோதமான கிராமம் என்ற பெயரில் நாம் பத்திரிகைகளில் படிக்கும் கிராமங்களைப் பிரதியெடுக்கும் வகையிலேயே படத்தில் அந்த ஊரைக் காட்டியிருப்பார் இயக்குனர் ராம்குமார்.
நகைச்சுவையின் இன்னொரு கிளை!
நகைச்சுவையில் பல ரகம் உண்டு. மனதுக்குள் சிரித்துக்கொள்வது, லேசாகப் புன்னகைப்பது, பற்கள் தெரியச் சிரிப்பது, விழுந்து புரண்டு சிரிப்பது, கண்ணில் நீர் வரும் அளவுக்குச் சிரியோ சிரியென்று சிரிப்பது என்று பலவிதமாக நகைச்சுவைப் படங்கள் நம்மில் விளைவுகளை உண்டுபண்ணும். அந்த வகையில், கிளாஸ் மற்றும் மாஸ் ரசிகர்களை ஒருசேரத் திருப்திப்படுத்திச் சிரிக்க வைக்கும் வகையில் அமைந்தது ‘முண்டாசுப்பட்டி’.
புகைப்படம் எடுக்க வந்த குடும்பத்திடம் ‘ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்று சொல்லும் கோபி, நண்பன் அழகுமணியோடு சேர்ந்து ‘சகலகலா வல்லவன்’ மூன்று காட்சிகளையும் பார்த்துவிட்டு நள்ளிரவில் கடைக்குத் திரும்புவார். அப்போதும், அந்த குடும்பம் அப்படியே ’போஸ்’ கொடுத்தவாறு காத்திருக்கும். அது போன்ற காட்சிகள் தொடங்கி முனீஸ்காந்த், ஆனந்தராஜ், சூப்பர்குட் சுப்பிரமணி தோன்றும் ‘வெடிச்சிரிப்பு’ காட்சிகள் வரை ‘முண்டாசுப்பட்டி’யில் நகைச்சுவை விருட்சத்தின் விதவிதமான கிளைகளைக் காண முடியும்.
விஷ்ணு விஷால், நந்திதா இதில் நாயகன் நாயகியாக நடித்தாலும், படத்தில் நடித்த இதர கலைஞர்களுக்கும் திரையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். வில்லனின் அடியாட்கள், ஊர் பிரமுகராக வரும் மீசைக்காரர், அவரது மனைவியாக வருபவர், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களாக வருபவர்கள் தொடங்கி கிளைமேக்ஸில் நாயகனை சைக்கிளில் துரத்தும் முதியவர் வரை பல பாத்திரங்கள் இதில் நம்மைச் சிரிக்க வைக்கும்.
பி.வி.ஷங்கரின் கண்கவர் ஒளிப்பதிவு, லியோ ஜான் பாலின் கனகச்சிதமான படத்தொகுப்பு, ஷான் ரோல்டனின் எளிமையான, ஈர்க்கக்கூடிய இசை, காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு அமைந்த கோபி ஆனந்தின் கலை வடிவமைப்பு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ் என்று அனைத்துமே ரசித்து ரசித்து இழைக்கப்பட்டதாக இருக்கும்.
படத்தின் கிளைமேக்ஸ் டைட்டிலில் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பெயர் வரும்போது பின்னணி இசையில் இடி இடிப்பது போன்ற ‘எபெக்ட்’ சேர்க்கப்பட்டிருக்கும். அதற்கேற்ப வார்த்தைகள் தோன்றும்போது ‘ப்ளாஷ்’ எபெக்ட் பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாகச் சில அம்சங்களைச் சேர்த்திருப்பதுதான் ‘முண்டாசுப்பட்டி’யின் மீது பெருங்கவனத்தைக் குவிக்கக் காரணமானது. பணியாற்றும் ஒவ்வொருவரும் ரசித்துத் தங்களது வேலையைச் செய்தால் மட்டுமே, அப்படியொரு சினிமா உருவாகும்.
அந்த வகையில், ராம் குமார் மக்கள் மனம் நெகிழவும், சிரிக்கவும், ரசிக்கவும் ‘முண்டாசுப்பட்டி’யைத் தந்தார். அந்த படைப்பாக்கத் திறனே, அவர் ‘ராட்சசன்’ தந்தபோது ‘அவரா இவர்’ என்ற மலைப்பை உருவாக்கியது. அதற்கடுத்த படம் உருவாவதில் கால தாமதம் நேரிட்டாலும், அதுவும் நிச்சயம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம். காரணம், கலையை ரசித்துச் செயலாற்றும் எவருக்கும் அந்தக் கலை நிச்சயமாகக் கைவந்தே தீரும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆயுத பூஜை தொடர் விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
டாப் 10 செய்திகள் : மோடி இத்தாலி பயணம் முதல் நீட் தேர்வு குளறுபடி விசாரணை வரை!