வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை உடனடியாக சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு சினிமா இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ. கௌதமன் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவண்ணாமலை ஆரணி வட்டம் படைவீடு கிராமத்தில் அமைந்திருக்கும் மாமன்னர்கள் சம்புவராயர்களின் குலதெய்வமான அம்மையப்பர் ஆலயத்தின் குடமுழுக்கு நிகழ்வில்,
இன்று (நவம்பர் 12) பங்கெடுத்த இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான வ.கௌதமன் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “13 மற்றும் 14ஆம் நூற்றாண்டில் படைவீட்டினை தலைமையிடமாக கொண்டு மானத்தோடும் வீரத்தோடும் ஆண்ட சம்புவராய மன்னனுக்கு மணிமண்டபம் கட்டி சிலை அமைக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும், “வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் தரவுகளுடன் முறையிட வேண்டும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,
தற்போது உயர்சாதிகளுக்கென 10 சதவீதம் இட ஒதுக்கீட்டில் எந்த ஓரு தரவும் இல்லாமல் ஒதுக்கீடு செய்தது நேர்மையற்றது.
இந்த தீர்ப்பு முரண்பட்ட தீர்ப்புகளாக உள்ளன. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்து சமூகநீதியினை நிலைநாட்ட வேண்டும்.
அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் தமிழர் குடிகள் தலைநிமிர்ந்து வாழ தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் கௌதமன்.
காலம் தாழ்த்தாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயர்சாதிகளுக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
இதே நிலை நீடித்தால் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட சாதியினருக்குள்ள இட ஒதுக்கீட்டையும் ஒன்றிய பி.ஜே.பி அரசு பறிக்க தயங்காது எனவும் எச்சரித்தார் இயக்குனர் வ. கௌதமன்.
–வேந்தன்
பிரதமர் வரவேற்பில் பிடிஆர் மிஸ்ஸிங்: தவிர்த்தாரா… தவிர்க்கப்பட்டாரா?
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!