2012 ஜெயலலிதாவுக்கு வார்னிங் பெல்… 2024 மம்தாவுக்கு மைக் ஆஃப்… மாநில உரிமைக்கு டெல்லி தரும் மரியாதை!

Published On:

| By Aara

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தான் பேசிக் கொண்டிருக்கும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளி நடப்பு செய்திருக்கிறார்.

இன்று (ஜூலை 27) டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். திமுக சார்பில் தமிழகத்தைப் புறக்கணித்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்டங்கள் தோறும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூடாரத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே முதல்வராக மம்தா பானர்ஜி கருதப்படுகிறார்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வெளியே வந்த மம்தா பானர்ஜி,

“நிதி ஆயோக் கூட்டத்தில் எனக்கு பேச ஐந்து நிமிடங்கள்தான் அனுமதிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் பேச முயன்றபோது என் மைக் ஆஃப் செய்யப்பட்டது. இது மேற்கு வங்காள மக்களையும், மாநில முதல்வர்களையும் அவமதிக்கும் நடவடிக்கை. அதனால் நான் வெளிநடப்பு செய்துவிட்டேன்” என்று கூறினார்.

இதே போல கடந்த 2012 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டிசம்பர் 27 ஆம் தேதி தேசிய வளர்ச்சி சபை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பத்து நிமிடத்தில் தன் பேச்சை முடிக்கச் சொன்னதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

“தேசிய வளர்ச்சி சபை கூட்டத்தில் மாநில முதலமைச்சர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. நாங்கள் எங்கள் பார்வையிலான கருத்துகளை எடுத்து வைக்க அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டு நலனுக்கும் நாட்டு நலனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகளை பேசுவதற்காக நான் தயாரிப்புகளோடு இங்கே வந்தேன். ஆனால் என்னிடம். பத்து நிமிடம்தான் பேசுவதற்கு அனுமதி என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டு பிரச்சினைகளை பற்றி நான் பத்து நிமிடத்துக்கும் மேல் பேசியபோது உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இது எனக்கு அவமானமாக ஆகிவிட்டது.

நான் இதற்கு முன் எத்தனையோ முதல்வர்கள் மாநாடுகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டதே இல்லை.

காங்கிரஸ் கட்சிக்கு இணக்கமான மாநில முதல்வர்கள் 30 நிமிடங்கள், 35 நிமிடங்கள் வரை கூட பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால் அப்போதெல்லாம் அவர்களின் பேச்சை இடைமறித்து மணி ஒலித்ததில்லை.

ஆனால், பத்து நிமிடங்களில் நான் மூன்றில் ஒரு பகுதி உரையை மட்டுமே நிறைவு செய்திருந்த நிலையில்…. மணி ஒலித்து உரையை முடிக்குமாறு கேட்டார்கள்.

அதனால் நான் எனது மீத உரையை வாசித்ததாக கருதிக் கொள்ளுமாறு கூறிவிட்டு முடித்துவிட்டேன். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தேன். மாநில முதல்வர்களின் குரலை ஒடுக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அப்போது டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார் ஜெயலலிதா.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இப்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். 12 வருடங்கள் கழித்து மோடி பிரதமராக இருக்கும்போது மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதே காரணத்தை சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறார்.

மன்மோகன் சிங் ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில உரிமைகளுக்கு 10 நிமிடம் என்றால், மோடி ஆட்சியில் வெறும் 5 நிமிடங்கள்தான். மாநில உரிமைகளுக்கான குரல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது,

ஆரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

PARIS 2024 OLYMPICS: ஆரம்பமே அதிர்ச்சி… 10மீ ஏர் ரைபில் பிரிவில் வெளியேறிய இந்தியா

சாவர்க்கர் குறித்து பேச்சு… நெட்டிசன்கள் ட்ரோல்… வருத்தம் தெரிவித்த சுதா கொங்காரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share