கெசட்டில் 10 சட்டங்கள்: 415 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சம் என்ன?

Published On:

| By Aara

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தொடர்பான கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இப்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தாமதம் ஏற்பட்டதால் பலரும் கவலை தெரிவித்தனர். அந்தக் கவலையைப் போக்கும் விதமாக இப்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்கள் பற்றி தமிழ்நாடு அரசு அரசிதழிலும் (கெசட்) வெளியிட்டுள்ளது. 10 laws gazette: 415-page supreme court judgment what says

இந்நிலையில் தீர்ப்பின் முக்கிய அம்சம் குறித்து விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் எம்.பி.யுமான ரவிக்குமார் தனது சமூக தளப் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

” 415 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் தமிழ்நாடு அரசு இயற்றிய 10 சட்ட மசோதாக்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தது ஏன் என்பதை உச்ச நீதிமன்றம் விளக்கியிருக்கிறது. பேரறிவாளன் வழக்கில் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நீண்ட காலம் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார். அதன் பிறகு எந்த முகாந்திரமும் இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பினார். இந்த விஷயத்தில் ஆளுநர் செய்த நீண்ட தாமதத்தைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 142 வழங்கி உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

அதுபோலவே இப்போதும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு அவை சட்டம் ஆகிவிட்டதாக இந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், “ அரசமைப்புச் சட்ட அதிகார அமைப்புகள் என்பவை அரசமைப்புச் சட்டத்தால் படைக்கப்பட்டவை, அதனால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. எந்தவொரு அதிகாரமும், அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதிலோ அல்லது துல்லியமாகச் சொன்னால், அதன் கடமைகளை நிறைவேற்றுவதிலோ, அரசமைப்புச் சட்டக் கட்டுப்பாட்டை மீற முயற்சிக்கக்கூடாது. ஆளுநர் அலுவலகமும் இந்தக் கட்டளைக்கு விதிவிலக்கல்ல. அரசமைப்புச் சட்ட வரம்புகளுக்கு அப்பால் செல்ல எந்தவொரு அதிகார அமைப்பும் முயற்சிக்கும் போதெல்லாம், நீதித்துறையானது சீராய்வு அதிகாரத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அரசமைப்புச் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அதிகாரத்தை மீண்டும் கொண்டு வரவும், அரசமைப்புச் சட்டக் காவலராகச் செயல்படவும் இந்த நீதிமன்றத்திற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உள்ள எங்கள் அதிகாரத்தை நாங்கள் சாதாரணமாகவோ அதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்காமலோ பயன்படுத்தவில்லை. மாறாக, ஆளுநரின் நடவடிக்கைகள் – முதலில் மசோதாக்கள் மீது நீண்டகாலமாக செயலற்றத் தன்மையைப் பின்பற்றுவது; இரண்டாவதாக, ஒப்புதலை எளிமையாக நிறுத்தி வைப்பதாக அறிவித்து, மசோதாக்களை போதிய காரணம் இல்லாமல் திருப்பி அனுப்புவது;10 laws gazette: 415-page supreme court judgment what says

மூன்றாவதாக.. இரண்டாவது முறை அனுப்பப்படும்போது மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது – அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறையைத் தெளிவாக மீறுவதாகும். எனவே பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிப்பதாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.
இது எங்களின் அரசமைப்புச் சட்ட ரீதியான கடமையாகும். எங்கள் பார்வையில் சொன்னால், ஆளுநரின் செயலற்றத் தன்மை,

இந்தத் தீர்ப்பையும் அவர் மதிக்காமல் அலட்சியம் செய்யும் சாத்தியம் ஆகியவற்றை உணர்ந்து , இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு இனி எந்த தாமதமும் இல்லாமலும், மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லாமலும் முழுமையான நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான்.” என்றும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தீர்ப்பு வெளியாகிவிட்டதால் ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்குமேலும் பதவியில் நீடிக்க மாட்டார் என நம்புவோம். தமது கட்சிக்குப் புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதைவிடவும் இது முக்கியமானது என்பது நிச்சயம் மாண்புமிகு உள்துறை அமைச்சருக்குத் தெரிந்திருக்கும்” என்று கூறியுள்ளார் ரவிக்குமார் எம்.பி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share