இட ஒதுக்கீடு தொடர்பாக கோட்டையில் ஒரு வழக்கறிஞரைப் போல முதல்வர் ஸ்டாலினுக்கு வகுப்பெடுத்தேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று (டிசம்பர் 12) தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டார். அவருடன் ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நிறுவனர் ராமதாஸ், “வன்னியர் சமுதாயம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள 324 சமுதாயங்களும் முன்னேற வேண்டும் என்பதற்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. சுமார் 46 ஆண்டு காலம் போராடியும் இன்னும் முழுமையான இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை.
பக்கத்து மாநிலமான கேரளாவில், ஈழவாஸ் என்ற சமுதாயத்திற்கு 14% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் விளைவாக, அச்சமுதாயத்தைச் சேர்ந்த பலர் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
எனவே எல்லா மக்களும் வாழ வேண்டும். அதற்காக ஒவ்வொரு சமுதாயமும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு குறித்து கோட்டையில் முதலமைச்சரைச் சந்தித்து, 35 நிமிடம் ஒரு வழக்கறிஞரைப் போல எப்படி, யார் யாருக்கு பிரித்துக் கொடுப்பது என வகுப்பெடுத்தேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டிலுள்ள 324 சாதிகளையும் ஆறு தொகுப்புகளாகப் பிரித்து அவர்களுக்குரிய இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். இதைச் செய்தால் அந்தப் பெருமை முதலமைச்சர் ஸ்டாலின் தம்பியைச் சேரும். அவர் வரலாற்றில் இடம்பெறுவார்.
முதல்வர், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களுக்குச் சென்று, அங்கு சமூக முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான முயற்சிகளைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு அதிகாரிகள் குழுவை அனுப்ப வேண்டும்.
தேர்தல் ஆண்டு வருவதற்குள்ளே, அதாவது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு குறித்த உத்தரவை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
