புனேவில் மதுபோதையில் கார் ஒட்டி சென்று விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவன் ரிமாண்ட் ஹோமில் கடைபிடிக்க வேண்டிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியின் கல்யாணி நகர் என்ற இடத்தில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை அதிவேகமாக சென்ற போர்ஷோ ரக கார் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதிகள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரை இயக்கி வந்தது 17 வயது சிறுவன் என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து காரை இயக்கிய சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுத்தொடர்பாக பேசிய புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார், “மகாராஷ்டிராவை பொறுத்தவரை மது அருந்தும் வயது 25 தான். ஆனால், சிறுவனுக்கு 17 வயது தான் ஆகிறது. இது மிகப்பெரிய குற்றமாகும். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், புனே அமர்வு நீதிமன்றத்தில் இதுத்தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “300 வார்த்தைகள் கொண்ட சாலை விபத்துகள் மற்றும் தீர்வு என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.
15 நாட்கள் போக்குவரத்துறை காவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” எனத் தீர்ப்பு வழங்கி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை பிரபல கட்டுமான தொழிலதிபர் விஷால் அகர்வாலை புனே காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, விஷால் அகர்வால் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியதை சிறார் நீதி வாரியம் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து சிறுவனின் ஜாமீனை ரத்து செய்து ஜூன் 5 வரை நீதிமன்ற காவல் வழங்கியது. இதன் காரணமாக, சிறார் குற்றவாளிகளுக்கான ரிமாண்ட் ஹோமில் அச்சிறுவன் தற்போது உள்ளார்.
சிறார் குற்றவாளிகளுக்கான ரிமாண்ட் ஹோமில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “ காலை 8 மணி முதல் 10 மணி வரை போஹா, உப்புமா, முட்டை மற்றும் பால் காலை உணவாக வழங்கப்படும். பின்னர் ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து தினசரி பிரார்த்தனை அமர்வு கூட்டம் நடைபெறும்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். தொடர்ந்து, 1 மணி முதல் மாலை 4 மணி வரை ஓய்வு அளிக்கப்படும். 4 மணிக்கு ஸ்நாக்ஸ் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் டிவி பார்க்க வேண்டும். இரண்டு மணி நேரம் வாலிபால், ஃபுட்பால் விளையாட வேண்டும்.
இரவு 7 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். இரவு 8 மணிக்கு அவர்கள் தூங்கும் தங்குமிடத்திற்கு சிறுவர்கள் சென்றுவிடுவார்கள்” என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குட் நியூஸ்: தமிழகத்தில் கூகுள் பிக்சல் என்ட்ரி!
வீக் எண்ட் சுப முகூர்த்த ஸ்பெஷல் பஸ்கள்: எங்கெங்கே? எப்போது?