இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் ரூ.1.50 லட்சம் கோடி அளவில் மேட்ச் பிக்சிங்… பிரபல அரசியல் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

By christopher

|

Published on 15 Sep 2025, 9:21 PM

1.50 lakh cr Match fixing in Ind-Pak asiacup match

ஆசியக்கோப்பைத் தொடரில் நேற்று சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது பரம வைரியான பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

அப்போது கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்த கேப்டன் சூர்ய குமார் யாதவ் உட்பட இந்திய அணி வீரர்கள் யாரும், பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைக்குலுக்காமல் சென்றது சர்ச்சையானது.

இதுதொடர்பாக பேசிய சூர்யகுமார், “இந்த வெற்றியின் மூலம் சரியான சந்தர்ப்பம், நேரம் ஒதுக்கி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நின்றுள்ளோம். நாங்கள் விளையாட மட்டுமே இங்கு வந்தோம். பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலளித்தோம். சில விஷயங்களுக்கு விளையாட்டுத் திறனுக்கு அப்பாற்பட்டவை.

ADVERTISEMENT

ஆபரேஷன் சிந்தூரில் மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்திய எங்கள் அனைத்து ஆயுதப்படைகளுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம். அவர்கள் தொடர்ந்து நம் அனைவரையும் ஊக்குவிப்பார்கள் என்று நம்புகிறோம், மேலும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மைதானத்தில் அவர்களுக்கு அதனை வழங்குவோம்” என்றார்.

இதற்கிடையே தங்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்தத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவை புறக்கணித்தார். மேலும் கை குலுக்காதது குறித்து இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இது ஒருபுறம் என்றால், உத்தவ தாக்கரே ஆதரவு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ள மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைச் சுற்றி ஒரு குறிப்பிடத்தக்க சர்ச்சையைத் தூண்டியுள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது வெட்கக்கேடானது. ஆனால் இந்திய அரசாங்கமே அதை நடத்த அனுமதி அளித்தது. பாகிஸ்தானுடன் விளையாடும் முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது

பாஜக மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷாவின் செல்வாக்கின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களை நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட கட்டாயப்படுத்தியது.

நேற்றைய போட்டியின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,000 கோடி கிடைத்தது. மேலும் மேட்ச் ஃபிக்சிங்கின் மூலம் கிடைத்த ரூ.1.50 லட்சம் கோடி ரூபாயில் ரூ.50,000 கோடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளது. IMF, ADB மற்றும் உலக வங்கியிடம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க வேண்டாம் என்று சொன்னீர்கள். காரணம் அந்தப் பணம் பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று அதனை வேண்டாம் என்று வாதிட்டிர்கள். ஆனால் நேற்று அமித் ஷாவின் மகன் பாகிஸ்தானுக்குப் பணம் கொடுத்தார். அவர்களது பயங்கரவாதத்தை வலுப்படுத்த நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நம்மைத் தாக்கி அரசியல் ஆதாயம் பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.

எனினும் மேட்ச் பிக்சிங் நடந்ததற்கான ஆதாரங்களை சஞ்சய் ராவத் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel