மாலை நேரம். வானத்தின் நிறம் மாறிக்கொண்டே வந்தது. அதற்குக் காரணம், இரண்டு பெரிய மழை மேகங்கள்தான். அதில் ஒன்றின் பெயர் மிட்டு, மற்றொன்றின் பெயர் டிட்டு. மிட்டுவை விட டிட்டு கொஞ்சம் பெரிய மேகம். அதனால் மிட்டுக்கு கொஞ்சம் கர்வம் உண்டு. ஆனாலும் எப்போது டிட்டுவை விட்டுகொடுக்காது மிட்டு. பெரிய பறவை வந்து மோத வரும்போது டிட்டுவோடு மோதி, மின்னலை வரவைத்து அந்தப் பறவையை மிரட்டும்.
இரண்டு மேகங்களும் கடலில் ஆவியாகி வந்த நாளிலிருந்து ஓர் ஆசை இருந்தது. தான் நீராக இருந்த கடலை திரும்பவும் ஒருமுறை சென்று பார்க்கவேண்டும். நீராக இருந்தபோது குட்டிச் சுறா மீன் செதிலில் அடிபட்டு ரத்தம் கசிய வந்தது. அதனுடைய அம்மா சுறாதான் பத்திரமாகப் பாதுகாத்து காயத்தை ஆற்றியது. அது, மீண்டும் நன்றாக நீந்துவதைப் பார்க்கும்முன் தான் ஆவியாகிவிட்டதைச் சொல்லி எப்பவும் டிட்டு வருத்தப்படும்.
மிட்டுவுக்கும் ஒரு கவலை உண்டு. மிட்டு இருந்த இடத்தின் அருகே ஒரு மீனவன் எப்போதும் மீன்பிடிக்க வருவான். ஏனென்றால், மிட்டு இருந்த இடத்தில் ஏராளமான மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்தும். அதனால், அவன் திசை மாறாமல் சரியாக வருவான். பத்து நாட்களுக்கும் மேலாக அவன் வராமலே இருந்துவிட்டான். பதினொன்றாவது நாளாக வந்த அவன் ரொம்ப சோகமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான். மிட்டு தன்னிடம் நீந்திய நண்டுவிடம் ‘அந்த மீனவன் ஏன் சோகமாக இருக்கிறான் என்பதைக் கேட்டு வா…’ என்றது. நண்டுவும் ‘சரி’ என்றது. ஆனால் ‘இன்று முடியாது நாளை கேட்டுச் சொல்கிறேன்’ என்றது. அடுத்த நாளுக்குள் மிட்டு ஆவியாகி மேகமாகிவிட்டது.
இந்தக் கதைகளை மிட்டுவும் டிட்டுவும் தினமும் பேசி வருத்தப்படும். அன்றைக்கும் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தபோது கடும் வேகத்தில் காற்று வீசியது. வழக்கமாக கடல் இருக்கும் திசையிலிருந்து காற்று வீசும். ஆனால், அன்றைக்கு கடலை நோக்கி காற்று வீசியது. இரண்டு மேகங்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன. இன்று நிச்சயம் கடலைப் பார்த்துவிடலாம். அங்கேயே மழையாகப் பொழிந்தால் இரு மேகங்களின் ஆசையைத் தீர்த்துக்கொள்ளலாம் என ஆவலாக இருந்தன. காற்றும் வேகமாக வீசியது. ஆனால் கடலுக்கு அரை கிலோமீட்டருக்குமுன் மேகங்கள் சென்றபோது காற்று வேகம் குறைந்ததால் மேகங்கள் அங்கேயே நிற்க வேண்டியதாயிற்று. அந்தச் சூழ்நிலையில் மேகம் தன்னை மழையாகப் பொழியவேண்டும். ஆனால் மிட்டுவும், டிட்டுவும் தங்கள் ஆசை நிறைவேறாததால் மழையாக மாறாமல் பிடிவாதமாக நின்றன.
இரண்டு மேகங்களும் இருந்த இடத்தின் கீழே ஒரு அப்பார்ட்மெண்ட் இருந்தது. ஒரு சிறுமி அம்மாவுக்குத் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி மொட்டை மாடிக்கு வந்தாள். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள். மழை மேகங்களைப் பார்த்ததும் உற்சாகமாக சத்தமிட்டாள். ஓடி, ஆடி விளையாண்டாள். இடையிடையே நிமிர்ந்து மேகத்தைப் பார்த்தாள். மழை பெய்தால் நனைவதற்காகக் காத்திருந்தாள். ஆனால், மேகங்கள் மழையாக மாறுவதில்லை என்று பிடிவாதமாக இருந்தன. அந்தச் சிறுமி ரொம்ப நேரமாக மழை பெய்யாததால் சோகமாகி, அங்கே கிடந்த உடைந்த ஸ்டூல்மேல் உட்கார்ந்தாள். வீட்டுக்குள்ளேயிருந்து அவளை அம்மா கூப்பிடும் சத்தம்வேறு கேட்டது. கடைசியாக என்பதுபோல அந்தச் சிறுமி மேகங்களைப் பார்த்தாள். அந்தச் சிறுமியின் பார்வையைப் பார்த்த மேகங்களின் பிடிவாதம் விலகி, உடனே மழையாக மாறி அவளை நனைத்தன.
