டிஜிட்டல் இடைவெளி

Published On:

| By Balaji

இது ஏற்றத்தாழ்வான உலகம். இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சுமார், 700 கோடி மக்கட்தொகையைக் கொண்ட இன்றைய உலகில், 120 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். ஆனால், வெறும் 100 கோடிப்பேர் உலகின் மொத்த உற்பத்தியில் 72 விழுக்காட்டை அனுபவிக்கின்றனர். மீதமுள்ள 580 கோடி மக்களுக்கு வெறும் 28 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. இதுதான் அந்த இடைவெளி. இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன.

இந்த இடைவெளிகளில் முக்கிய இடைவெளி-டிஜிடல் இடைவெளி. அதாவது, தகவல்-தொழில்நுட்ப இடைவெளி.

நவீன உலகம் என்பது தகவல் தொழில்நுட்பம் சார்ந்தது. தகவல் தொழில்நுட்ப வசதியை அணுகும் வசதி கொண்டவர்கள், வசதி இல்லாதவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இந்த டிஜிட்டல் இடைவெளி குறித்து, ஐக்கிய நாடுகள் அவையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உலகம் முழுவதும் விரிவான ஆய்வு நடத்தியது. அப்போது, இந்த இடைவெளி அப்படியே பொருளாதார இடைவெளியுடன் பொருந்திப்போவதைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, வளர்ந்த பணக்கார நாடுகளுக்கும், வளரும் ஏழை நாடுகளுக்குமான இடைவெளியாக இது வெளிப்படுகிறது.

அதனால்தான், ‘2015க்குப் பிந்தைய உலக வளர்ச்சிகுறித்த புதிய செயல்திட்டத்தை வெளியிட்ட ஐ.நா. தலைமைச் செயலரின் உயர்மட்டக் குழு, உலகில் ஏற்றத்தாழ்வுகள் குறைய வேண்டுமானால் ஏழை நாடுகளின் மக்களுக்கு மின்சாரம், உள்கட்டமைப்பு போன்ற அடிப்படை வசதிகளுடன், நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளும் அவர்களுக்குச் சென்றுசேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதற்கான அடிப்படை, உலகம் முழுவதும் மேற்கொண்ட ஐ.நா. தொழில்நுட்பக் குழுவின் 2014 சர்வே ஆகும். வரலாற்றில் முதன்முறையாக டிஜிட்டல் இடைவெளி குறித்து இவ்வளவு விரிவான ஆய்வுகள் மேற்கொண்டது இதுவே முதன்முறை.

இதில், தொலைபேசி வசதிமுதல் இணையம், ஸ்மார்ட்போன் வசதிவரை மக்களிடம் எவ்வாறு சென்று சேர்ந்துள்ளது என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

இணைய வசதியைப் பொறுத்தவரை, இங்கிலாந்து நாட்டில் 88% மக்கள் இணைய வசதி பயன்படுத்துகிறார்கள். இதேபோல, கனடாவிலும் 88% வீடுகளில் இணைய வசதி உள்ளது. அடுத்து ஜெர்மனியில் 84% மக்களிடம் இணைய வசதி உள்ளது. அடுத்துதான் அமெரிக்கா வருகிறது 80%.

இந்தியாவைப் பொருத்தவரை, துருக்கி 44%, சீனா 40%, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ நாடுகளுக்கும் கீழே உள்ளது. இந்தியாவில் 12% மக்களுக்கே இணைய வசதி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share