தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காகப் போடப்பட்ட பிளாஸ்திரி பேண்டை கத்தரிக்கோலால் அகற்றும்போது, பணியிலிருந்த செவிலியர் அலட்சியமாகச் செயல்பட்டதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த கணேசன், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் பிரியதர்ஷினிக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த பிரியதர்ஷினி பிரசவத்துக்காக தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 25ஆம் தேதி பிரியதர்ஷினிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்திலேயே பிறந்துவிட்டதால் குழந்தைக்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகக் கூறிய டாக்டர்கள், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர். சத்துக்காகக் குழந்தைக்குக் கையில் வென்ஃப்ளான் (venflon) வைத்து, அதில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. இதையடுத்து குழந்தையின் உடல்நிலை தேறியதால், தாயையும் சேயையும் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து குழந்தையின் கையிலிருந்த வென்ஃப்ளான் மற்றும் பிளாஸ்திரியை அகற்றுவதற்காக செவிலியர் கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார். அப்போது அவர் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் குழந்தையின் கை கட்டை விரல் துண்டானது. இதைப் பார்த்த குழந்தையின் பெற்றோர் கணேசனும் பிரியதர்ஷினியும் பதறினர். பின்னர் துண்டான கட்டைவிரலைச் சேர்த்து வைத்து தையலிட்டுக் கட்டுப்போட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள கணேசன், “குழந்தை தேறிடுச்சுனு சொல்லி, வீட்டுக்கு அனுப்புறதுக்காக கையிலிருந்த பிளாஸ்திரி மற்றும் ஊசியை நர்ஸ் அகற்றினாங்க. அப்போ குழந்தையைப் பார்க்காம வேற எங்கேயோ பார்த்தபடி கத்தரிக்கோலால் வெட்டினாங்க. அதுல குழந்தையோட கை கட்டை விரல் துண்டாகிடுச்சு. நாங்க துடிதுடிச்சுப் போயிட்டோம். இது முற்றிலும் அலட்சியத்தால நடந்த தவறு. இப்போ துண்டான விரலை இணைச்சு தையல் போட்டிருக்காங்க. ஆனா, மருத்துவர்கள் இதுவரை வேற எந்த விளக்கமும் எங்ககிட்ட கொடுக்கல. எங்க புள்ளைக்கு நடந்தமாதிரி வேற யாருக்கும் நடக்காதபடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார் கண்ணீரும் கோபமுமாக.
செவிலியர்கள் தரப்பினரோ, “பச்சிளம் குழந்தையின் கையில் போடப்பட்டுள்ள பிளாஸ்திரியைக் கத்தரிக்கோல் பயன்படுத்திதான் நீக்குவார்கள். ஆனால், இந்தத் தவறு துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டது. இதற்கு காரணமான செவிலியர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்” என்று தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிக்குமார், “குழந்தையின் விரல் துண்டாகவில்லை, சதைப்பகுதி வெட்டப்பட்டுள்ளது. அதை விரலுடன் இணைத்து தைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது. விரலுக்கு ரத்தம் ஓட்டம் செல்வதை வைத்தே அப்பகுதி சேருமா என்பது இரண்டு நாட்களில் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
.�,