விமர்சனம்: அசுரன்!

Published On:

| By Balaji

சுமி கிருஷ்ணா

எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை மையக்கருவாக வைத்து, தனுஷ்-வெற்றிமாறனின் வெற்றிக் கூட்டணி எடுத்துள்ள அசுரன் திரைப்படம் தியேட்டர்களுக்கு வந்துவிட்டது. வெக்கை நாவல் பல்வேறு பாராட்டுகளையும், சிறப்புகளையும் பெற்றது. ஆனால், இதனை சினிமா ரசிகர்களுக்காக எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் தனது மகன் சிதம்பரத்துடன்(கென் கருணாஸ்) சிவசாமி(தனுஷ்) ஒருபுறமும், முகமெங்கும் பயம் மிளிர சிவசாமியின் மனைவி(மஞ்சு வாரியர்) அவரது அண்ணன்(பசுபதி) மற்றும் மகளுடன் மறுபுறமும் தப்பிச்செல்வதாக அசுரன் திரைப்படம் தொடங்குகிறது. அந்த முதல் காட்சியில் பார்வையாளர்களுக்குள் கடத்தப்படும் உணர்வுகளும், அடுத்து ஏதோ நடக்கப்போகிறது என்ற பீதியும் இறுதிக் காட்சி வரை தொடர்கிறது. சிவசாமிக்கு ஏன் இந்த நிலை?

ADVERTISEMENT

தன்னிடம் இருக்கும் சிறிதளவு நிலத்தை வைத்து விவசாயம் செய்து பிழைக்கும் சிவசாமியின் வாழ்க்கை மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று அமைதியுடன் நகர்கிறது. ஊரின் பெரும் பணக்காரரான வடக்கூரானும் அவரது தம்பிகளும் சிவசாமியின் நிலத்தை வாங்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு அவரது குடும்பம் மறுக்க, கேட்டுப்பெற முடியாததை பிடுங்கி எடுக்க முயல்கின்றனர். சிவசாமியின் மூத்த மகன் இதை எதிர்த்து, கொலைக்கு ஆளாகிறார். அண்ணன் மிகக் கொடூரமாக கொலை செய்யப்படுவதைப் பார்க்கும் சிவசாமியின் 16 வயதாகும் இளைய மகன் சிதம்பரம், வடக்கூரானை கொலை செய்கிறான்.

வடக்கூரானின் ஆட்களும், காவல்துறையும் சிவசாமியின் குடும்பத்தைத் தேட ஆரம்பித்ததும் அந்த பகை அவர்களை எப்படி எல்லாம் பின்தொடர்ந்தது, சிவசாமியின் குடும்பம் என்ன ஆனது, அவர்கள் தப்பித்தார்களா என்பதை விறுவிறுப்பான அசுரன் படத்தின் மீதிக்கதை விளக்குகிறது.

ADVERTISEMENT

வட சென்னை, மாரி-2 படங்களின் மூலம் மெட்ராஸ் விருந்தை சாப்பிட்ட தனுஷ் ரசிகர்களுக்கு அசுரன் திரைப்படம் ஒரு கிராமத்து விருந்தாக அமைந்திருக்கிறது. தனுஷின் நடிப்புப் பசிக்கும், அசுரன் திரைப்படம் நல்ல விருந்து. அப்பா-மகன் கேரக்டர்களில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக முடிவாகி, பின்னர் அப்பா கேரக்டரை மட்டும் தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. தனுஷின் இந்த முடிவினால், கென் கருணாஸ் என்ற நல்ல கலைஞனை தமிழ் சினிமா அடையாளம் கண்டிருப்பதால் தனுஷுக்கு கூடுதல் பாராட்டுக்களை அளித்தே ஆகவேண்டும்.

ADVERTISEMENT

ஒரு கொலைகாரனையே அமைதியாகக் கொலை செய்துவிட்டு நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன் என்று அப்பாவியாக பதில் கூறும் இடத்தில் துவங்கி படம் முழுக்க தன்னை பார்வையாளர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறார் கென் கருணாஸ். 16 வயது சிறுவனுக்கு உரிய பதற்றம், கோபம், பயம் என அனைத்து விதமான உணர்வுகளையும் சரியான அளவில் வெளிக்காட்டுகிறார்.

பெண்களை பயப்படுபவர்களாகவும், ஆண்களை அவர்களைப் பாதுகாக்கும் ஹீரோக்களாகவும் காலம் காலமாக காட்டி வந்த தமிழ் சினிமா பெண்களுக்கும் இப்போது எதிர்த்து நிற்க வாய்ப்பளித்திருக்கிறது. அந்த விதத்தில் ஒரு தாய்க்கே உரிய கோவத்தையும், பாசத்தையும், வீரத்தையும் சிவசாமியின் மனைவியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் நேர்த்தியாக வெளிக்காட்டியுள்ளார். மூத்தமகனாக வரும் டீ.ஜே காட்சிகளால் பரிதாபத்தையும், நடிப்பாற்றலால் பாராட்டையும் பெறுகிறார். பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி என ஒவ்வொரு பாத்திரமும் மனதிலிருந்து அகல மறுக்கிறது.

அடக்குமுறையைப் பார்த்து பயப்படும் சிவசாமியின் பிளாஷ்பேக் கதையும் அதில் கூறப்பட்டிருக்கும் விஷயமும் ஒரு சாதாரண மனிதன் அவனது உரிமை மறுக்கப்படும் போது கிளர்ந்து எழுகிறான் என்பதையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எந்த ‘சாதி’யின் பெயரையும் பயன்படுத்தாமல் சாதிய அடக்குமுறையைப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். அடக்குமுறைக்கு ஆளாக்கப்படும் அவர்களின் கோபமும் சோகமும் நெஞ்சைக் கனமாக்கி ஏசி தியேட்டரிலும் வெக்கையை உணரவைக்கிறது. ஆனாலும், அடிபட்டவன் தன் வலியை விளக்குவதற்கும், அதை வேடிக்கைப் பார்த்து நின்றவன் விளக்குவதற்குமான வித்தியாசம் படத்தில் இருக்கும் உணர்வும் ஏற்படுகிறது.

ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கும் வெற்றிமாறனுக்கு, படத்தின் தீவிரத்தை தனது இசை மூலம் இன்னும் தீவிரப்படுத்தி உதவியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். தமிழக மக்களுக்கு இப்படிப்பட்ட படம் தேவை என உணர்ந்து தயாரித்திருக்கும் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டப்பட வேண்டியவர். சிவசாமியின் அசுரவதம் அழிவுகளையும், பிரச்சனைகளையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதையும், கல்வியே அனைத்திற்குமான தீர்வு என்பதையும் உணர்த்துகிறது.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share