தென் சென்னைக்கு இன்னும் மருத்துவம் பார்க்க வேண்டும்! -டாக்டர் ஜெயவர்தன் எம்.பி. பேட்டி

Published On:

| By Balaji

ஆரா

காலை 6.30 மணிக்கு பிரச்சார வேனில் ஏறிவிட்டால் தென் சென்னையின் சந்து பொந்துகள் இண்டு இடுக்குகள் எல்லாம் சுற்றி மக்களைப் பார்த்து வாக்கு சேகரித்துவிட்டு மதியம் 2 மணிக்கு பட்டினப்பாக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு வருகிறார். குளித்து சாப்பிட்டு ஒரு மணிநேரம் ஓய்வுக்குப் பின்பு மீண்டும் மூன்று மணிக்குக் கிளம்பிவிடுகிறார். மீண்டும் வீடு திரும்பும்போது இரவு 11 மணி.

தேர்தல் களத்தில் இடைவிடாமல் சுழலும் தென் சென்னை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை சந்திக்க இரு நாட்கள் முயன்றோம். நேரம் பிடிபடாமல், மதிய இடைவேளையில் உணவுக்கான நேரத்தைச் சுருக்கிக் கொண்டு அரை மணிநேரம் நம்மோடு அமர்ந்தார்.

ADVERTISEMENT

வெயிலின் தாக்கம், அலைச்சல் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உற்சாகத்தோடு தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலத்தின் கேள்விகளை எதிர்கொண்டார் இளம் எம்.பி.யும், இளம் எம்பி. வேட்பாளருமான ஜெயவர்தன்.

ADVERTISEMENT

**கடந்த ஐந்தாண்டுகளாக எம்.பி.யாக இருந்து தென் சென்னை தொகுதிக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?**

ஐந்து ஆண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை, தொலை நோக்குத் திட்டங்களை முடிக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் 84% பங்கெடுத்தவன் என்ற முறையில் பல விவாதங்கள், தனி நபர் கேள்விகளில் என் பங்கினை குறைவில்லாமல் செய்து முடித்துள்ளேன். நாடாளுமன்றம் நடக்காத நேரங்களில் நான் அனேகமாகத் தொகுதிக்குள்தான் இருக்கிறேன். இவ்வாறாக நாடாளுமன்றம், மத்திய அரசின் அமைச்சகங்கள், தொகுதி என்று இந்த மூன்று புள்ளிகளை மையமாக வைத்தே எனது கடந்த ஐந்தாண்டு காலம் கடந்திருக்கிறது.

ADVERTISEMENT

110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதியோருக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவமனை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தென் சென்னையில் அமைய வேண்டும் என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி திட்டத்தைப் பெற்று வந்தேன். இதன் பெரும்பாலான பணிகள் முடிந்து இன்னும் 5% பணிகள்தான் பாக்கியிருக்கின்றன. இன்னும் இரண்டு, மூன்று மாதத்தில் செயல்படத் தொடங்கும்.

சென்னையின் ரயில் நிலையங்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் அலுவலக நேரத்தில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. கூட்ட நெரிசலை சமாளிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் டபுள் டிஸ்சார்ஜ் பிளாட்ஃபார்ம் அதாவது ரயிலின் இரு புறங்களிலும் இறங்கி ஏறக்கூடிய வசதி செய்து தந்தால் வசதியாக இருக்கும் எனத் திட்டமிட்டேன். இதற்காக நாடாளுமன்றத்திலும், ரயில்வே அமைச்சகத்திலும் தொடர்ந்து முறையிட்டு அழுத்தம் கொடுத்து சென்னையின் அனைத்து ரயில் நிலையங்களிலும் டபுள் டிஸ்சார்ஜ் பிளாட்ஃபார்ம் அமைக்க நிதி வாங்கிவிட்டோம். அந்த வகையில் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட மாம்பலம் ரயில் நிலையத்தில் டபுள் டிஸ்சார்ஜ் பிளாட்ஃபார்ம் அமைக்கப்பட்டு அது திறந்து வைக்கப்பட்டு, பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதேபோல புதிய நடைமேம்பாலங்கள், ரயில் நிலையங்களில் சிசிடிவி வைப்பதற்கான நிதியையும் போராடிப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.

சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் டெக்னாலஜி என்ற புகழ்பெற்ற அரசு நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் அதுவும் எனது தொகுதியான தென் சென்னையில்தான் அமைந்திருக்கிறது. இதன் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்ற வேண்டுமென்று மத்திய அரசு முடிவு செய்தது. நான் இதை எதிர்த்துப் போராடினேன். மத்திய ரசாயனத்துறை அமைச்சராக இருந்த மறைந்த அனந்தகுமார் அவர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கி, சிபெட் தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது என்று வாதாடினேன். அதன் பயனாக மத்திய அரசின் முடிவு மாற்றப்பட்டு சிபெட் தலைமை அலுவலகம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்படுகிறது.

இதேபோல சென்னையில் இருக்கும் உவர்நீர் மீன் வளர்ப்புக்கான ஆராய்ச்சி நிலையத்தையும் மத்திய அரசு மூட முடிவெடுத்தபோது நான் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகனை சந்தித்து அந்த முடிவையும் திரும்பப் பெற வைத்தேன். இப்போது அந்நிறுவனம் தென் சென்னையில் தொடர்ந்து இயங்குகிறது.

**தென்சென்னையின் குறிப்பிடத்தக்க இயற்கை ஆதாரம் என்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். அந்தத் தகவமைப்பைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?**

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பாற்றவோ மேம்படுத்தவோ வேண்டும் என்றால் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுதாகச் செயல்படுத்திட வேண்டும். ஏனென்றால் பெருங்குடி குப்பைக் கிடங்கு சதுப்பு நிலத்தில்தான் உள்ளது. இங்கிருந்து 100 சதவிகித குப்பைகள் பெருங்குடிக்குதான் போகின்றன. அவ்வாறு போகும்போது சதுப்பு நிலம் பாதிப்பு அடைகிற சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே திடக்கழிவு மேலாண்மைக்கென ஒரு பெருந்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், நமது முதலமைச்சர் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தினேன். இந்நிலையில் 1,200 கோடி ரூபாய் செலவில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது பெருங்குடியை அடைகிற குப்பைகளில் 80% குறைக்கப்படும். மீதி இருக்கும் 20% குப்பையில் இருந்து வேஸ்டு டு எனர்ஜி என்ற சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத ஒரு பிளான்ட்டை அமைக்க 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிட்டிருக்கிறோம்,.

இது இரண்டும் மிகப்பெரிய திட்டம். ஓரிரு வருடங்களில் முடியக்கூடிய திட்டம் இல்லை. இத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது சதுப்பு நிலங்கள் முழுமையாகக் காப்பாற்றப்படும்.

இதைத் தவிர பல்வேறு நீர் வழித் தடங்கள் சதுப்பு நிலங்களில் சென்று சேர்கின்றன. அந்த நீர் வழித் தடங்களில் பல தனியார் நிறுவனங்கள் கழிவு நீரை விடுவதால் அவை சதுப்பு நிலத்தைச் சென்றடைந்து மாசு ஏற்படுத்துகின்றன. இதைத் தடுக்க நீர் வழித் தடங்களில் கட் அண்ட் கவர் டிரைனேஜ் எனப்படுகிற வகையில் ஊராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டு சதுப்பு நிலங்களில் கழிவு நீர் சென்று சேர்வது தடுக்கப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் நடைபெற்றுவருகிறது. இப்போது கூட கோவிலம்பாக்கத்தில் இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மேலும் சதுப்பு நிலங்களைக் காக்கின்ற வகையில் தேவையற்ற செடிகளை அகற்றுவது, காம்பவுன்ட் சுவர் எழுப்புவது போன்ற பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் பங்கீட்டில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தோடு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

**உங்கள் தந்தை ஜெயக்குமார் அமைச்சராக இருக்கிறார். அவர் உங்களுக்கு பலமா, பலவீனமா?**

என் தாத்தா திரு.துரைராஜ் அவர்கள் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்டு சென்னை மாநகராட்சியின் முதல் வார்டு உறுப்பினராக தேர்தலில் வென்றவர். என் தந்தையார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்து அம்மாவால் கண்டெடுக்கப்பட்டவர். நானும் அரசியலில் இருக்கிறேன்.

என்னுடைய விஷயத்தில் வாரிசு அரசியல் என்ற வார்த்தையே பொருந்தாது. ஏனென்றால் நான் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்டேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு அம்மாவின் இல்லத்தில் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நானும் சென்றேன். ‘உனக்கு என்ன தொகுதி வேணும்ப்பா?’ என்று அம்மா என்னிடம் கேட்டார். நான் ஆச்சரியப்பட்டு நின்றேன். எனக்கு 25 வயதுதான், அம்மா மீண்டும் என்னிடம் கேட்டார். ‘அம்மா நீங்க எந்தத் தொகுதி விரும்புறீங்களோ அந்தத் தொகுதியில நிக்கிறேன்மா’ என்று சொன்னேன். மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேட்டார். நான் மீண்டும் அதே பதிலைச் சொன்னேன். மீண்டும் அம்மா என்னிடம், ‘உனக்கு என்னப்பா தொகுதி வேணும். கேளு?’ என்றார். அப்போது நான் ஒரு தொகுதியைச் சொன்னேன். அந்தத் தொகுதி அப்போது கூட்டணிக்குக் போய்விடும் என்ற ஒரு நிலைமை இருந்தது (ஆனால், பின்னர் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது). அதனால், ‘இந்தப் பையனை எப்படியும் தேர்தலில் நிறுத்தணும்’ என்று சொல்லி எனக்கு தென் சென்னையைக் கொடுத்தார்கள். அந்த அளவுக்கு என் மீது பாசம் வைத்திருந்தார் அம்மா.

**நீங்கள் விரும்பிக் கேட்ட தொகுதி எது?**

”ஆப்வியஸ்லி வட சென்னைதான்.”

**நீங்கள் உங்கள் தொகுதியான வட சென்னையைக் கேட்டு ஜெயலலிதா தென் சென்னையைக் கொடுத்தாக சொல்கிறீர்கள். அதேநேரம் தென் சென்னை தொகுதியில் இதற்கு முன் பாஜக போட்டியிட்டது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக தலைவர் தமிழிசை தென் சென்னையைக் கேட்டதாகவும் அதிமுக தலைமையிடம் உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறீர்கள் என்று பேசப்படுகிறதே?**

தொகுதி உடன்பாட்டினைப் பொறுத்தவரையில் கூட்டணி அமைத்திருக்கக் கூடிய கட்சிகள் எல்லாம் பேசி சாதகபாதகங்கள் எல்லாம் ஆராய்ந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவெடுக்கப்பட்டு அதன் பிறகே இந்தத் தொகுதியில் இன்னார் நிற்கிறார் என்று அறிவிக்கப்படுகிறது. அந்த வகையிலே இந்தத் தொகுதியில் கழகத்துக்காக யார் யார் எப்படிப் பணியாற்றினார்கள், கொடுக்கப்பட்ட வாய்ப்பை மக்களுக்காக எப்படி பணியாற்றப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். கூட்டணி என்னும்போது குறிப்பிட்ட சில தொகுதிகளைப் பலர் கேட்கக்கூடும். அதுபற்றியெல்லாம் எங்கள் தலைமைக் கழகம் பேசி முடிவெடுத்துதான் அறிவித்திருக்கிறது.

**கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?**

மிக நல்ல முறையிலே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக மக்கள் நலம் பயக்கும் இந்த கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதில் அதிமுகவும், கூட்டணிக் கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும் மிக ஆரோக்கியமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. எனவே இந்தக் கூட்டணி நிச்சயம் வெல்லும்.

**காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முக்கியமான ஒரு வேட்பாளராக மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவராக இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?**

காங்கிரசைப் பொறுத்தவரையில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன் மூலமாக வெற்றிபெற முயலக் கூடிய கட்சியாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு வித்திட்டது யார்? காங்கிரஸ் ஆட்சிதானே? எனவே நீட் தேர்வை ரத்து செய்வோமென்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையானது மட்டுமல்ல, ஏமாற்று வித்தையும்கூட. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி, எங்கள் நிலைப்பாடு. மாநில அளவில் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்திருப்பது திசை திருப்பும் நடவடிக்கை.

**தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அமமுக சார்பாக நிற்கும் இசக்கி சுப்பையா இவர்களில் யார் உங்களுக்கு சவால்?**

தேர்தல் களத்தில் யார் எதிர்த்து நின்றாலும் சரி. களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு அம்மா வகுத்துத் தந்திருக்கக் கூடிய நெறிமுறைகளை மனதில் கொண்டு நாங்கள் செயல்பட்டாலே போதும். எதிர்த்து யார் நின்றாலும் கண்டிப்பாக அவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள். எனவே அம்மாவின் வழியைத் தவறாது பின்பற்றும் எனக்கு யாரும் சவாலாகத் தெரியவில்லை.

**ஒரு வேட்பாளராகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?**

தேர்தல் ஆணையம் என்பது நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக முனைப்பாகச் செயல்பட வேண்டிய தன்னாட்சி அமைப்பு. அதனால்தான் அவர்களுக்கு முழுத் தன்னாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தேர்தல் ஆணையம் மீது எந்த அரசியல் சாயமும் பூசக் கூடாது. திமுகவைப் பொறுத்தவரை ஆபரேஷன் ப்ளூ ஸ்கை என்ற பெயரில் மக்களுக்கு பணம் கொடுத்து அதன் வாயிலாக வாக்குகளை பெற்று வெற்றி பெற முயல்கிறார்கள். ஊழல் செய்த பணத்தை மக்களுக்குக் கொடுத்து அதன் மூலம் அதிகாரத்தைப் பிடித்து மீண்டும் ஊழல் செய்வதுதான் திமுகவின் திட்டம். எனவே இதனைக் கண்டறிந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

**சென்னையின் குடிநீர் பிரச்னையை சமாளிக்க உங்களின் செயல்பாடுகள் என்ன?**

எதிர்வரும் காலத்தில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அவசியமானது. ஏற்கனவே 100 எம்எல்டி (ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர்) கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இது தவிர 150 எம்எல்டி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் இசைவைப் பெறத் தீவிரமாக முயன்றேன். இந்த இசைவைப் பெறுவதில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்வி எழுப்பிவந்திருக்கிறேன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரைத் தொடர்ந்து வலியுறுத்தி ஜெர்மனி நிறுவனத்தின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இப்போது டெண்டர் விடும் அளவில் இருக்கிறது. இது தவிர நெமிலி அருகே உள்ள பேரூரில் 6 ஆயிரத்து 25 கோடி ரூபாய் செலவில் 450 எம்எல்டி அளவிலான கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் எதிர்காலச் சென்னையின் குடிநீர்த் தேவையில் பெரும் பங்கு வகிக்கும்.

**மருத்துவர் எம்.பி.யாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சுகாதாரப் பணிகள் என்ன?**

ஈசிஆர் சாலையில் 24 மணி நேர மருத்துவமனை, அவசர மருத்துவமனை, இலவச மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒன்றரை வருடம் முன்பு திறந்து வைத்துள்ளேன். ஈஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் திறந்து வைத்துவிடுவேன். பெருங்குடியில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை இரண்டரை மாதம் முன்பு திறந்து வைத்தேன். நாடாளுமன்றத் தொகுதியில் புறநகர் மருத்துவமனைக்கு 33 கோடி ரூபாய் நிதியும் வாங்கியாகிவிட்டது, நிலமும் கண்டறியப்பட்டுவிட்டது. விரைவில் பள்ளிக்கரணையில் அதற்கான பணிகள் தொடங்கும்.

**உங்களை ஏன் மீண்டும் தென் சென்னை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்?**

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சதுப்பு நில மேம்பாட்டுத் திட்டங்கள், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், வெள்ள வடிகால் திட்டங்கள் எல்லாமே ஐந்து வருடத்துக்குள் முடிகிற திட்டங்கள் அல்ல. இவற்றுக்காக நான் மத்திய அரசின் பல மையங்களில் போராடி நிதியைப் பெற்றுள்ளேன். இத்தகைய திட்டங்கள் இந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்த வேகத்தைவிட அதிக வேகமாக நடக்க வேண்டுமென்றால் மீண்டும் என்னையே நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்திட வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன். இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்னுடைய முதல் பதவிக் காலத்தில் பல அரிய செயல்களை நான் செய்துள்ளேன். இந்த நீண்ட காலத் திட்டங்கள் தென்சென்னைக்குத் தொடர்ந்து கிடைத்திட மக்கள் என்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு மாண்புமிகு முதல்வரும், மாண்புமிகு துணை முதல்வரும் கொடுக்கும் சுதந்திரமும் ஊக்கமும் என் செயல்பாடுகளைச் சிறப்பானவையாக மாற்றியுள்ளன.

**மருத்துவர் பணிகளை மேற்கொள்கிறீர்களா?**

(சிரிக்கிறார்) என் தொகுதியான தென் சென்னைக்கு மருத்துவம் பார்க்கவே இந்த ஐந்து வருடங்கள் போதவில்லை. அதனால் தொழில் முறையிலான மருத்துவப் பணிகளை பார்க்க நேரமில்லை. மக்களின் மருத்துவராகத் தென் சென்னையில் இன்னும் பல பணிகள் பாக்கியிருக்கின்றன. எனவே தென் சென்னையின் மருத்துவராக மக்கள் தொடர்ந்து வாய்ப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே நிறைவு செய்தார் ஜெயவர்தன்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share