தென் இந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் – குழந்தைத் திருமணத்திலிருந்து மீண்டு வென்ற கதை!

Published On:

| By Balaji

பெண்கள் பிரிவில் போடவும்

தென் இந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் – குழந்தைத் திருமணத்திலிருந்து மீண்டு வென்ற கதை!

ADVERTISEMENT

உலகெங்கும் 70 கோடிக்கும் மேலான இளம்பெண்கள் 18 வயதுக்குள் குழந்தைத் திருமணமாவதாக யுனிசெப் ஆய்வு கூறுகிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் ஆவர்.

செல்வி. தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெருமையை உடையவர். 14 வயதில் திருமணமாகி, பணத்திற்காக தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்த நினைத்த கணவனிடமிருந்து தப்பி, முதலில் ஓடும் பேருந்தின்முன் குதித்து தற்கொலை செய்ய நினைத்தவர், பின்னர் தன் முடிவை மாற்றிக்கொண்டு மைசூர் வந்து சேர்ந்திருக்கிறார்.

ADVERTISEMENT

அழுதபடி மைசூர் தெருவில் நின்றுகொண்டிருந்த செல்வியை மீட்டு, மைசூரில் உள்ள ‘ஒடநாடி’ என்ற பெண்கள் காப்பகத்தில் சேர்த்திருக்கிறார் ஒருவர். இங்கு வந்து சேர்ந்த பின் தான் செல்வியின் வாழ்க்கை மாறியுள்ளது. தற்போது ஒரு டாக்சி நிறுவனத்திற்கு தலைவர் மட்டுமல்ல, தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல்கொடுக்கும் தன்னார்வலரும் கூட.

பெரும் மாற்றத்தைச் சந்தித்த இவரது வாழ்க்கையை ‘டிரைவிங் வித் செல்வி’ என்ற ஆவணப்படமாக தயாரித்திருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த எலிசா. 2004ல் முதன்முதலாக செல்வியை காப்பகத்தில் சந்தித்த எலிசா. செல்வி இன்று தனது சொந்தக்காலில் நிற்பது பெருமை அளிக்கிறது. பத்து ஆண்டுகளாக செல்வியை பார்த்து வருகிறேன். நிச்சயம் ஏதோ ஒன்றிருக்கிறது என்பதை உணர்ந்தேன். செல்வியின் வாழ்வு பல்வேறு வழிகளில் மாறிக்கொண்டிருந்தது. எனவே அவரது வாழ்வை படமாக்க காத்திருந்தேன். இப்போது இந்த ஆவணம் முழுமையானதாக உள்ளது” என்கிறார் எலிசா.

ADVERTISEMENT

காப்பகத்துக்கு வந்து சேர்ந்தபோது செல்விக்கு எந்த வேலையும் தெரிந்திருக்கவில்லை. முதலில் அழகுக்கலை சார்ந்த திரெட்டிங் போன்ற பயிற்சி பெற்றிருக்கிறார். காப்பக இயக்குனரின் தொடர் ஊக்குவிப்பால் இரு சக்கர வாகனம்கூட இயக்கத்தரியாதவர், டிரைவிங் கற்றுக்கொண்டு ஓட்டுனராக பணிபுரிந்து, இன்று டாக்சி நிறுவனத்தின் முதலாளியாகியுள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு வாகனப் பயிற்சி அளித்தவர் ‘டிரைவிங் உனக்கு வரவில்லை. வேறு ஏதாவது தொழிற்கல்வியை கற்றுக்கொள்’ என அறிவுரை செய்திருக்கிறார். பின்னர் தான் மேற்கொண்ட கடும்முயற்சியால் ட்ரைவிங் வசப்பட்டிருக்கிறது.

டாக்சி டிரைவராக பெண்ணை பார்த்ததும் பலரும் ஆச்சர்யத்துடனே பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஒரு டிரைவர் என்பதைவிடவும் டாக்சி டிரைவராக இருப்பது கடினம் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டுள்ளார் செல்வி. ஆரம்பத்தில் தனது பயணிகளுடன் சகஜமாக பேசிப்பழக சிரமப்பட்டிருக்கிறார். சமயங்களில் எந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்பதைத்தவிர வேறெதுவும் பேசாதிருந்திருக்கிறார். ஆண் பயணிகளைவிட பெண் பயணிகளுடன் தான் அதிக சிரமங்கள் எழுந்துள்ளன. பின்னர் தன்னை மாற்றிக்கொண்டு தொடர் பயணிகளை சம்பாதித்திருக்கிறார்.

பணம் சம்பாதிப்பதைத் தாண்டி டிரைவிங் தனக்கு மன நிறைவைத் தருவதாகச் சொல்லும் செல்வி, அடுத்த பயணி யார் அவர் எங்கு பயணிப்பார் என யோசிப்பது ஒரு சாகச பயணமாக இருக்கிறது என்கிறார்.

பின்னர் விஜி என்கிற டிரைவரை மணந்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவரது வாழ்க்கையைப் பற்றிய ‘டிரைவிங் வித் செல்வி’ ஆவணப்படம் தற்போது வடஅமெரிக்காவில் திரையிடப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் எலிசாவோடு சேர்ந்து பத்து நாட்கள் பேருந்துப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்தப் பயணத்தில் தன்னைப்பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்புவதோடு மட்டுமின்றி பாலியல் வன்முறை மற்றும் பெண்ணுரிமை குறித்து பேசவிருக்கிறார். சுமார் பத்து லட்சம் பெண்களுக்கு இத்திரைப்படம் காண்பிக்கப்படும் என நம்பிக்கை தருகிறார். தன் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிபெற்ற செல்வி இன்று பல பெண்களுக்கு நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share