சிறப்புக் கட்டுரை: வலுப்பெறும் பிற்போக்குத்தனம், வலுவிழக்கும் பொருளாதாரம்!

Published On:

| By Balaji

நா.ரகுநாத்

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஓவியப்போட்டி ஒன்றில் கலந்துகொண்டேன். கொடுக்கப்பட்ட தலைப்பு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’. தமிழ்ப்புத்தகத்தில் இருந்த படத்தைத்தான் வரைந்தேன். இந்தியாவின் படத்தை வரைந்து, அதற்குள் ஒரு கோயிலை வரைந்தேன். அதன் நுழைவு வாயிலை சிலுவை வடிவிலும், கோபுரத்தின் உச்சியில் பிறையையும் வரைந்து முடித்ததும் எதையோ பெரிதாக சாதித்தது போன்ற ஓர் உணர்வு. ஓவியம் மிகவும் சுமாராக இருந்ததால் பரிசு கிடைக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கருத்தாக்கமும், அந்தக் கருத்தாக்கத்துக்குப் பின் இருந்த சிந்தனையும் என்னுள் தங்கிவிட்டன.

ADVERTISEMENT

என்னுள் தங்கிவிட்ட அந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி எனக்கு 20 வயது ஆகும் வரை நான் ஆழமாகச் சிந்திக்கவே இல்லை. 2014 பொதுத் தேர்தல் நேரத்தில்தான் எனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. சமகால இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றைப் படிக்கத் தொடங்கியபோது இந்தியாவின் பன்முகத்தன்மையின் ஆழத்தையும் மேன்மையையும் உணரத் தொடங்கினேன். வேற்றுமையில் ஒற்றுமையைக் காப்பதே இந்தியக் குடியரசு, இந்த நாட்டு மக்களுக்குச் செய்துகொடுத்த உறுதிமொழி என்று என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

அந்த முயற்சியில் இந்தியக் குடியரசு பலமுறை தோற்றுள்ளது என்பதையும் புரிந்துகொண்டேன். எத்தனை முறை தோற்றாலும் அந்த முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் தொடர இந்த நாட்டின் முற்போக்கு சக்திகள் இடைவிடாது உழைத்து வருவதையும் அறிந்துகொண்டேன். இந்த முயற்சிகளுக்கெல்லாம் மிகப்பெரிய முட்டுக்கட்டை போடும்விதமாக 2014 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரிய வெற்றி அமைந்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை என்றால் அது மிகையாக இருக்காது.

ADVERTISEMENT

எந்த மாற்றத்துக்காக வாக்களித்தோம்?

மதவாதத்தைக் கையில் எடுக்காமல், ‘விகாஸ்’, அதாவது, வளர்ச்சி என்னும் பதாகையை மட்டுமே உயர்த்திப்பிடித்துக்கொண்டு நரேந்திர மோடி பரப்புரை செய்வது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. உண்மையில் இவர்கள் யார், இவர்களின் ‘அஜெண்டா’ என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள், கட்டமைக்கப்பட்ட அந்தப் பிம்பத்துக்குப் பின்னால் இந்திய சமுதாயத்தையும், இந்தியக் குடியரசையும் முற்றிலுமாக மாற்றியமைக்கும் வியூகம் தயாராக இருப்பதை உணர்ந்து எச்சரிக்கை மணி அடித்தனர். ஆனால், இந்தியா ‘மாற்றத்துக்கு’ வாக்களித்தது. எந்த மாற்றத்துக்கு நாம் வாக்களித்தோம் என்பது ஐந்தரை ஆண்டுகளுக்குப்பின் அப்பட்டமாகத் தெரிகிறது. வரலாற்றாசிரியர் முகுல் கேசவன் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் அரசியல் பொதுப்புத்தி வலதுசாரித் தன்மையை நோக்கி நகர்ந்துவிட்டது.

பொருளாதாரம் இவர்களுக்கு பொருட்டே அல்ல

பொருளியல் மாணவனாகிய நான், 2018இன் பிற்பாதியில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும், மோடி அரசின்கீழ் பொருளாதாரத்தின் செயல்பாடு மற்றும் மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனப் பார்வையோடு திறனாய்வு செய்து எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் ஒரு தார்மீகக் கோபம்தான் என்னை எழுதுவதற்கு உந்தித் தள்ளியது. பொருளாதாரத்தைப் பற்றி எழுதிவந்த நான், பாஜகவின் அரசியல், இந்திய அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நிகழ்த்திய தாக்குதல்களையும், இந்திய சமுதாயத்தில் ஏற்படுத்திவரும் நச்சுத்தன்மைகொண்ட மாற்றங்களையும் கண்டு தனிமையில் ஆத்திரம் கொண்டிருந்தாலும், அவற்றைக் கடுமையாக விமர்சித்து ஒருமுறைகூட எழுதவேயில்லை.

ADVERTISEMENT

ஆனால், ஜனநாயக முறைகள்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையை சமீபத்திய நிகழ்வுகள் அசைத்துப் பார்த்துவிட்டன. காஷ்மீர் விவகாரம், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை (Citizenship Amendment Bill) நிறைவேற்றுவதில் பாஜக காட்டிய உறுதியும் தீவிரமும், இவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என்பது கவலையையும் அச்சத்தையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. 2014இல் இவர்கள் ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு சமூகத்தில் நிகழ்ந்துள்ள பிற்போக்குத்தனமான மாற்றங்களை இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது, பொருளாதாரம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்ற முடிவுக்கு வராமல் இருக்க முடியவில்லை.

மத விவகாரங்களே முக்கியம்

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும், எந்த மொழி இந்தியாவின் தனித்துவமான அடையாளமாக இருக்க வேண்டும், மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்த வகையில் எதிர்வினையாற்ற வேண்டும், எந்தெந்த நாடுகளை நாம் வெறுத்து நம் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் – நாட்டைப் பிளவுபடுத்தும் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, நாடு சந்திக்கும் தலையாய சவால்களாக அவற்றை முன்னிறுத்தி, இந்த கேள்விகளுக்கான பதில்களையும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களே முடிவுசெய்து நாட்டு மக்கள் மீது திணிக்கும் போக்கு நாளுக்கு நாள் வலுவடைந்துகொண்டே இருக்கிறது. பொருளாதாரமோ நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டே போகிறது. பொருளாதாரத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அது அவர்களுடைய ‘லிஸ்ட்’டிலேயே இல்லையே!

பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வலதுசாரி ‘சிந்தனையாளர்’ ஸ்வபன் தாஸ்குப்தா, “பொருளாதாரம் என்பது ஒருபோதும் இந்தியாவின் வலதுசாரியினரின் முன்னுரிமையாக இருந்ததே இல்லை; அது அவர்களுக்கு வெறும் கொசுறு மட்டுமே. மதச்சார்பின்மை பற்றிய விவாதங்களைக் கொண்டுதான் மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவு பெருகியது; அதுவே அவர்களுடைய அரசியல் அஜெண்டாவையும் தீர்மானித்தது” என்று Awakening Bharat Mata: The Political Beliefs of the Indian Right எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா என்ன?

சமுதாயச் சீரழிவுகள் பொருளாதாரத்தை பாதிக்கும்

நான் மதிக்கும் பொருளாதார நிபுணர் ஒருவர், சமீபத்தில் ‘தி வயர்’ இணையப் பத்திரிகைக்கு ஒருமணிநேர நேர்காணல் ஒன்றை அளித்தார். நேர்காணலின் இறுதியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்த விதம் எனக்கு மிகவும் வேதனை அளித்தது. ‘அச்சம் சூழ்ந்துள்ள சூழலே நாட்டில் நிலவுகிறது. அரசை விமர்சிக்கவும், மாற்றுக்கருத்து தெரிவிக்கவும் மக்கள் அச்சப்படுகின்றனர். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு ‘நான் ஒரு பொருளாதார நிபுணர். எனக்காக மட்டும்தான் நான் பேச முடியும். அந்த வகையில், என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்ய நான் அச்சப்படவில்லை’ எனும் பாணியில் பதில் அளித்தார்.

தனக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால், நாட்டில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று பொருள்கொள்ள முடியுமா? அரசியல் தளத்தில், சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகளைப் பொருளாதாரம் பற்றி பேசுபவர்களும் எழுதுபவர்களும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? அந்தச் சீரழிவுகள் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாதா? ஒரு குடிமகன்/குடிமகள் என்ற முறையில் இந்தச் சீர்கேடுகளை எதிர்த்துப் பேசும் கடமை அவர்களுக்கு இல்லையா?

இந்தக் கேள்விகளையெல்லாம் எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அரசியல் சாசனம் உட்பட பல சட்டங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்திய சமுதாயத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரும்போது, ‘எனக்கு சட்டத்தில் நிபுணத்துவம் இல்லை’ என்று காரணம் சொல்லி நான் தப்பித்துக்கொள்வது சரியா? இந்த நாட்டின் குடிமகனாக நான் இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் போனால், நான் என்னுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டதாக ஆகிவிடாதா? தொடர்ந்து அசௌகர்யமான கேள்விகளை எழுப்ப என்னைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம் என்னும் விடைதான் கிடைத்தது.

அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்?

கடந்த சில வாரங்களாக இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் நெருக்கடி பற்றியும், இந்திய மக்களின் பொருளாதார நிலை குறித்தும் மின்னம்பலம் இணையப்பத்திரிகையில் எழுதி வரும் நான், திறந்தவெளியில் மலம் கழிப்பதாலும், காற்று மாசுபடுவதாலும் அடுத்த தலைமுறையினர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதைப்பற்றிதான் இந்த வாரம் எழுத நினைத்தேன். ஆனால், புதன்கிழமை இரவு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்னும் செய்தியைப் படித்ததும், ‘அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய அரசியல் விழுமியங்களை விட்டுச் செல்லப் போகிறோம்? சாதி-மதம்-இனம்-மொழியால் மேலும் பிளவுபட்ட ஒரு சமுதாயத்தையா அவர்களிடம் ஒப்படைக்கப் போகிறோம்?’ என்ற கேள்விகள்தான் எழுந்தன.

இந்திய அரசியல் சாசனத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், எத்தகைய சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும் பற்றிய முற்போக்குப் பார்வை ஒன்றை அது முன்வைத்தது. அதை அடைவதற்கு நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பயணத்தை நாம் தொடர்ந்து மேற்கொள்வதைத் தடுக்கும் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம்கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share