நா. ரகுநாத்
(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி)
பொருளியலில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு பெற்ற மூவரும், தங்களுடைய சோதனை அடிப்படையிலான ஆய்வுமுறை வழியே பொருளியல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்று பலராலும் பாராட்டப்படுகிறார்கள். ஆனால், பொருளியல் பற்றி இவர்களுடைய அணுகுமுறை, வறுமையைப் புரிந்துகொள்ள இவர்கள் பயன்படுத்தும் ஆய்வுமுறை இவ்விரண்டும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன.அந்த விமர்சனங்களில் சிலவற்றை மட்டும் நாம் அலசுவோம்.
அரசியலைக் கடந்த அறிவியல்?
இவர்கள் தங்களுடைய அணுகுமுறை மிகவும்“ அறிவியல் பூர்வமானது” (scientific) என்று கூறுகின்றனர். இதன் உள்ளார்ந்த பொருள், எங்களுடைய ஆய்வுமுறை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதே. இவ்வுலகில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஏதேனும் உண்டா என்ன? குறிப்பாக, வறுமை என்பது அரசியலுக்கு அப்பால் இருக்கவே முடியாது. ஒரு சமூகத்தில் வறுமை என்பது அச்சமூகத்தின் அரசியல் செயல்முறைகளால், சமூக-பொருளாதார உறவுகளால் கட்டமைக்கப்படும் ஒன்று. அந்நிலையில் இருந்து வெளியே வருவதற்கும், தங்களை ஒதுக்கி வைத்திருந்த சமூக-பொருளாதார அமைப்பைத் தகர்ப்பதற்கும் அரசியல் எனும் கருவியையே உலகின் பல பகுதிகளில் பல்வேறு சமயங்களில் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பாரபட்சமின்றி இருந்தால் துல்லியமாக இருக்க முடியுமா? ஒரு பகுதியில் சோதனை மேற்கொள்வதற்காக அங்குள்ள மக்கள் தொகையில் சராசரியாக ஒரே மாதிரியான பண்புகள், குணாதிசயங்கள் கொண்ட ஒரு பகுதியினரை மாதிரியாக (sample) எடுத்துக் கொண்டு, அவர்களை treatment group மற்றும் control group என்று இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். Treatment group இல் உள்ளவர்களுக்கு மட்டுமே இடையீடு (intervention) வழங்கப்படும். ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டுள்ளதால், யாரை எந்த குழுவில் சேர்ப்பது என்பதில் எவ்வகைப் பாரபட்சமும் இருக்காது (unbiased) என்பது இவர்களுடைய வாதம்.அந்த இரண்டு குழுக்களில் உள்ள நபர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும் பல காரணிகளைக் “control” செய்தால்தான், இவர்கள் கொடுக்கும் இடையீட்டின் விளைவாக மட்டுமே treatment group இல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று நாம் சொல்ல முடியும். அப்படி அனைத்து காரணிகளையும் control செய்வது சாத்தியமா? ஒரு உதாரணத்தைக் கொண்டு இதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

கணக்கில் கொள்ளத் தவறிய காரணிகள்
சென்னையில் ஒரு குடிசைப்பகுதியில் இரத்தச்சோகை (anaemia) பரவலாக உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதனை சரிசெய்ய ஐயோடின், இரும்புச்சத்து உள்ள உப்பு –double-fortified salt – அப்பகுதி மக்களுக்கு வழங்கினால் எதிர்பார்த்த தாக்கம் ஏற்படுமா என்று சோதனை செய்ய வேண்டும். மேற்கூறிய சோதனைமுறை பின்பற்றப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதன்படி ஒரு குழுவினருக்கு இந்த உப்பு வழங்கப்படும்; மற்றொரு குழுவினருக்கு உப்பு வழங்கப்படாது. இந்த இரு குழுவினரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பண்புகள் கொண்டவர்களாக இருப்பதால், வழங்கப்பட்ட உப்பைப் பயன்படுத்திய குழுவினர்களுக்கு ஓராண்டுக்கு பிறகு இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் போனால், அதற்குக் காரணம் அந்த உப்பு மட்டுமே என்ற முடிவுக்கு வர முடியும் என்பதே இந்த அணுகுமுறையின் சிறப்பு என்று இந்த சோதனைகளை நடத்துபவர்கள் தர்க்கம் செய்கின்றனர்.
சரி, இந்த இரு குழுவில் இருப்பவர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும் ஒரு காரணியாக அந்த பகுதியில் இருக்கும் அம்மா உணவகம் இருக்கிறது என்று ஒரு உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். அங்கு இரும்புச்சத்து உள்ள கறிவேப்பிலை சாதத்தை இரு குழுவினரும் அடிக்கடி சாப்பிடுகிறார்கள்; அதுவும் அவர்களின் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்ய உதவி இருக்கக்கூடுமே! அப்படியென்றால், சோதனையை வடிவமைத்து நடத்துபவர்கள் இந்த காரணியைக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டால், அவர்கள் வழங்கிய இடையீடான உப்பின் காரணமாக மட்டும்தான் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் போனது என்று ஆணித்தரமாக சொல்ல முடியாமல் போகும்.
பாரபட்சமும் துல்லியமும்
இது ஒரு எளிய உதாரணமே. உண்மையில் இதை விட மிக முக்கியமான, ஆனால் கண்ணுக்குத் தெரியாத காரணிகள் சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களின் நடவடிக்கையை பாதிக்கும். அவற்றை எல்லாம் control செய்ய இயலாது என்றால், பாரபட்சமில்லாமல் இருக்க முடியும் என்றாலும், சோதனையின் முடிவுகள் துல்லியமானதாக (precise) இருக்காதே! இதில் மிக முக்கியமாக அறம் சார்ந்த ஒரு பிரச்சனை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு குழுவினருக்கே double fortified salt வழங்கப்படுகிறது. ஆனால், இவர்கள் பாரபட்சமின்றி எதேச்சையாக நபர்களை இரு குழுவில் பிரித்தபோது, உப்பு பெறாத மற்றொரு குழுவினரில் மிகவும் கடுமையான இரத்தச்சோகை உள்ள நபர்கள் இருந்தால் இந்த சோதனை காலம் முடியும் வரை அவர்களுடைய ஆரோக்கியம் இன்னும் மோசமாகாமல் இருப்பதை யார் உறுதி செய்வது? குழு பிரிப்பதில் பாரபட்சமின்றி நடந்து கொள்வது, எதிர்மறைத் தாக்கங்கள் அல்லது விளைவுகளை ஏற்படுத்தாது என்று எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.
சோதனையின் முடிவுகளை பொதுமைப்படுத்திவிட முடியுமா?
ஒரு சோதனையின் முடிவுகளை பொதுமைப்படுத்திவிட முடியுமா? தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் மேற்கொள்ளும் ஒரு சோதனையையே இன்னொரு பகுதியில் மேற்கொண்டால், அவ்விரண்டின் முடிவுகளும் ஒரேமாதிரியானதாக இருக்கும் என்று உறுதியாக சொல்லவே முடியாது. ஏன், அந்த பகுதியிலேயே இருவேறு காலகட்டத்தில் ஒரே சோதனையை மேற்கொண்டாலும் முதன்முறை கிடைத்த அதே முடிவுகள் வருவதற்கான சாத்தியக்கூறு குறைவாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது, ஒருசோதனையின் முடிவுகளின் புள்ளியியல் மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டு, அதனை மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ அரசு கொள்கையாக மாற்றினால் அது அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதன் அடிப்படையில் சொல்வது?
ஒவ்வொரு பகுதிக்கும் பிரத்தியேகமானஅரசியல், கலாச்சார, சமூக-பொருளியல் வரலாறு உண்டு. அதன் பின்னணியில்தான் அப்பகுதி மக்களின் பண்புகள், நடவடிக்கைகள் பரிணமித்துள்ளன. இந்த சோதனைகளை வடிவமைத்து நடத்துபவர்கள், முதலில் அந்த வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்வதில் அதிக நேரம் செலவிட்டால்தான், தங்களுடைய ஆய்வுமுறை அறிவியல் பூர்வமான, பாரபட்சமற்ற ஒன்றாக இருந்தாலும், அதிலும் குறிப்பிடத்தக்க குறைகள் உள்ளன என்பதை உணர முடியும் என்று 2015 ஆம் ஆண்டு பொருளியலுக்கான நோபல்பரிசு பெற்ற ஆங்கஸ் டீடன் போன்ற மூத்த அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற சோதனை ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகிறது. அவ்வளவு செலவு செய்து மேற்கொள்ளப்படும் சோதனைகள் வழங்கும் ஆதாரங்கள் அந்த ஒரு பகுதிக்கு, அந்த ஒரு முறை மட்டுமே பொருந்தும் என்றால், இந்த ஆய்வுமுறையின் பயன்பாட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
’பெரிய’ கேள்விகளைக் கேட்பதில்லை!
தற்போது நிலவும் முதலாளித்துவ அமைப்பிற்குள் ஆங்காங்கே சிறுசிறு இடையீடுகள் மூலம் இந்த அமைப்பை அச்சுறுத்தாத ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு மட்டுமே இவர்களின் ஆய்வுமுறை பொருத்தமாக உள்ளது; இந்த அமைப்பு இழைக்கும் அநீதிகளைக் கேள்வி கேட்கும் திறன் இந்த ஆய்வுமுறைக்கு இல்லை எனும் குற்றச்சாட்டைப் புறந்தள்ளிவிட முடியாது.
உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும் செல்வக் குவிப்பு ஏற்படுவதால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அசுர வேகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால் உலகெங்கும் பிற்போக்குவாதிகள் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதுவரை கண்டிராத அளவிற்கு சிலரிடம் மட்டும் ஏன் செல்வம் குவிந்துள்ளது, அதனால் பெரும்பான்மை மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், செல்வமுள்ளவர்களின் ஆடம்பர நுகர்வுப் பழக்கங்கள் உலகில் பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தும்போது அதனை நாம் எப்படி எதிர்கொள்வது போன்ற, ‘பெரிய’ கேள்விகளைக் கேட்காமல் சமகாலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது இயலாத காரியம்.இவற்றையெல்லாம் சோதனைகள் வழியே “control” செய்துவிட முடியாது!
ஒரு கிராமத்தில் பல குடும்பங்களில் உழைக்கும் வயதில் இருப்பவர்கள் வேலை தேடி புலம் பெயர்ந்தால், குழந்தைகளை தாத்தா-பாட்டியிடம் விட்டுச் செல்வார்கள். அந்த சூழலில், தாத்தாவின் பெயரில் வரும் ஓய்வூதியப் பணத்தைப் பாட்டியின் பெயரில் வருமாறு செய்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தை தொடர்ந்து பள்ளிக்கு செல்வதற்கு வாய்ப்புண்டா என்று சோதனை செய்பவர்களால், அந்த ஓய்வூதியத்தை அரசு ரூ. 200 லிருந்து ரூ. 500 ஆக ஏன் உயர்த்த மறுக்கிறது என்று சோதனை செய்து பார்த்து சொல்ல முடியுமா?
பொருளியல் ஆய்வாளர்களிடையே இந்த விவாதம் ஆக்கப் பூர்வமான திசையில் தொடர்ந்தால் மானுடம் முன்னேறும் என்று நம்புவோம்.
கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com