சிறப்புக் கட்டுரை: புலம்பெயர்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு: இந்தியா எப்படி சமாளிக்கும்?

Published On:

| By Balaji

நா. ரகுநாத்

பொருளியல் துறையில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்ளோ மற்றும் மைக்கேல் கிரேமர் எனும் மூன்று மேம்பாட்டுப் பொருளியல் (Development Economics) ஆய்வறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. பொருளியல் துறையில் இவர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை [வறுமை நோய்க்குக் கொள்கை மருந்து](https://minnambalam.com/k/2019/10/18/15/nobel-prize-for-poverty-eradication), [முதலாளித்துவத்துக்கு முட்டுக்கொடுக்கும் நோபல் வறுமை ஒழிப்பு](https://minnambalam.com/k/2019/10/19/14) எனும் கட்டுரைகளில் சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தோம்.

ADVERTISEMENT

நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுஃப்ளோ எழுதியுள்ள “Good Economics for Hard Times: Better Answers to Our Biggest Problems” எனும் புத்தகம் வெளிவந்தது. இந்தp புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தைச் சமாளிக்க நல்ல பொருளாதாரத் தீர்வுகள் அவசியம். பொய்யான, தவறான தகவல்கள் வேகமாகப் பெருகிப் பரவிவரும் இந்த நேரத்தில், தரமான, திடமான ஆதாரங்களை நேர்மையாகப் பகுப்பாய்வு செய்து மக்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய தீர்வுகளைப் பொருளியல் நிபுணர்கள் வழங்க வேண்டும். அந்த முயற்சியின் ஒரு பகுதியே இந்தப் புத்தகம்’ என்று இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இந்தப் புத்தகம் எதைப் பற்றிப் பேசுகிறது?

தவிர்க்கமுடியாத பல முக்கியமான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளை விரிவாகவும் ஆழமாகவும் அலசுகிறது இந்தப் புத்தகம். புலம்பெயர்வு, பன்னாட்டு வர்த்தகத்தின் சாதக-பாதகங்கள், வேகமிழக்கும் உலகப் பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் வேலைகள் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கம், உலகெங்கும் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் விளைவுகள், அந்த ஏற்றத்தாழ்வை மட்டுப்படுத்த அரசுகள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி இந்தப் புத்தகம் விளக்குகிறது.

ADVERTISEMENT

வேலை சார்ந்த புலம்பெயர்வு மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்கள் என்பதால், அவற்றைப்பற்றி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் விவாதத்தை, இந்தியாவில் நாம் காணும் போக்கோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம்.

புலம்பெயர்வு – கதையாடலும், கள நிதர்சனமும்

மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்கள் உள்நாட்டு மக்களின் வேலைகளைப் பறித்து விடுகின்றனர்; உள்நாட்டு மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு அரசாங்கம் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு உதவுகிறது; புலம்பெயர்ந்து வருபவர்களால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றன – இதுபோன்ற கதையாடல்தான் உலகின் பல நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அரசியல் ஆதாயத்துக்காகச் சிலரால் கட்டவிழ்க்கப்பட்டு, பிரபலமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், இவ்வாறு சொல்லப்படுபவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பது தெளிவாகிவிடும்.

ADVERTISEMENT

புலம்பெயர்ந்து வருபவர்களைப் பற்றித் தவறான புரிதல் கற்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், புலம்பெயர்ந்து வருபவர்கள் மீது இனம் மற்றும் மதம் சார்ந்த வெறுப்பு தூண்டிவிடப்படுகிறது. 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் புலம்பெயர்பவர்களின் பங்கு, உலகின் மொத்த மக்கள்தொகையில் வெறும் 3 விழுக்காடு மட்டுமே. ‘அவர்கள் நாட்டைவிட இந்த நாட்டில் பொருளாதார வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இங்கு புலம்பெயர்ந்து வந்து நம்முடைய பொருளாதார வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கின்றனர்’ எனும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறது இந்தப் புத்தகம். ஆனால், அவர்களுடைய இந்தக் கோபம் மற்றும் வெறுப்பின் காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

கடந்த முப்பதாண்டுகளாகப் பொருட்கள், சேவைகளின் உற்பத்தி இரண்டுமே வளர்ந்த நாடுகளிலிருந்து, அதிக மக்கள்தொகையும் அதன் விளைவாக குறைந்த உற்பத்திச் செலவும் கொண்ட சீனா, இந்தியா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகளுக்கு மடைமாற்றப் பட்டுவிட்டது. உற்பத்தி இங்கு நடந்தாலும், லாபத்தில் பெரும்பகுதி வளர்ந்த நாடுகளுக்குச் சென்றுவிடும். அங்குள்ள உழைப்பாளி மக்களுக்கு அதிகமான கூலி/சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் மூலதனம் வளரும் நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டது. இதனால் வளர்ந்த நாட்டுத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். அந்த நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் உண்மைக்கூலி கடந்த இந்த முப்பதாண்டுகளாகத் தேக்கம் கண்டுள்ளது. மீதமிருக்கும் பொருளாதார வாய்ப்புகளையும் வெளிநாட்டவர்கள் பறிக்க வந்துவிட்டதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

உண்மையில், பொருளாதாரம் சார்ந்த காரணங்களுக்காக மட்டும் மக்கள் புலம்பெயர்வதில்லை. தாங்கள் வாழும் நாட்டில் இயல்புநிலை என்பதே சீர்குலைந்து போய்விட்டதால், இனியும் அங்கு வாழவே முடியாது என்ற நிலை ஏற்படும்போதுதான் பலர் புலம்பெயர்கின்றனர். தெரிந்த ஊர், தெரிந்த மக்கள், சேர்த்துவைத்த உடைமைகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதிய நாட்டுக்குப் புலம்பெயரும் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் புலம்பெயர்வு – வேலை தேடி நகரும் உழைப்பாளி மக்கள்

இந்தியாவை எடுத்துக்கொண்டால், வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இங்கு வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. சொல்லப்போனால், வெளிநாட்டில் பிறந்து தற்போது இந்தியாவில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2001-2011 காலத்தில் 62 லட்சத்திலிருந்து 53 லட்சமாகக் குறைந்தது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இவர்களின் பங்கு வெறும் 0.4 விழுக்காடு மட்டுமே.

ஆனால், நாட்டுக்குள் ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலை தேடி புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. 2011-2015 காலத்தில் வேலை தேடி தங்கள் சொந்த ஊரைவிட்டு சுமார் 10 கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கை 2016-2017 தெரிவிக்கிறது. வேலை தேடி சொந்த மாநிலத்திற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்கள் வெறும் எட்டு விழுக்காடு மட்டுமே. வேலைக்காகப் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்பவர்களில் 47 விழுக்காடு மக்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பல நூற்றாண்டுகளாகப் புலம்பெயர்பவர்களின் புகலிடமாக விளங்கி வந்த மாநிலம் மேற்கு வங்கம். இன்று அம்மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலை தேடி அங்கிருந்து கிளம்பி, வெளியே புலம்பெயரும் போக்கைப் பார்க்க முடிகிறது.

புலம்பெயர்பவர்களில் பெரும்பகுதியினர் வேலை தேடி சூரத், மும்பை, புது டெல்லி சுற்றியுள்ள பகுதிகளுக்கும், தென்மாநிலங்களுக்கும் நகர்கின்றனர். புலம்பெயரும் இடத்தில் அவர்களுக்குக் கிடைப்பது நல்ல ஊதியமோ, நிரந்தரமான வேலையோ அல்ல. குறைந்த கூலிக்கு கடின உழைப்பைச் செலுத்த வேண்டிய பணிகளில் அவர்கள் அமர்த்தப்படுகின்றனர். இந்தப் போக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் கண்கூடாகத் தெரிகிறது. என்ன பாதுகாப்பு இருக்கிறது அவர்களுக்கு?

இந்தப் போக்குகள் நமக்குச் சொல்லும் சேதி என்ன தெரியுமா? நாட்டில் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் வேகமான பொருளாதார வளர்ச்சி, அதிகளவில் ஏழை மக்களைக்கொண்ட பல கிழக்கு மற்றும் வடமாநிலங்களுக்குள் குறிப்பிடும்படியாக எந்த நன்மையையும் பயக்கவில்லை என்பதே. அந்த மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் வேலை தேடி மேற்கு மற்றும் தென்மாநிலங்களுக்குப் புலம்பெயர்கின்றனர். மாநிலங்களுக்கு இடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, இந்தியக் கூட்டாட்சியின் எதிர்காலத்தைப் பற்றி பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மாநிலங்களுக்கிடையே நிதிப்பகிர்வை எந்த கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்வது எனும் கேள்வி ஆட்சியாளர்களுக்கும், பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பவர்களுக்கும் பெரும் சவாலாக இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி.

பொருளாதார ஏற்றத்தாழ்வும், அரசின் பொறுப்பும்!

‘பெரும்பான்மை மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் பணியைச் சந்தை பார்த்துக்கொள்ளும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. உலகின் பல நாடுகளில் விண்ணைத்தொடும் அளவுக்கு ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் போக்கை நாம் பார்க்கிறோம். அதன் விளைவுகளை மட்டுப்படுத்த அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம். அரசாங்கம் அதன் பொறுப்பை உணர்ந்து, வளங்களை மறுபகிர்வு செய்யும் முயற்சியை மேலும் தாமதிக்காமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்று அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுஃப்ளோ இந்தப் புத்தகத்தில் எழுதுகின்றனர். அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வை அங்கீகரித்து, அதைப்பற்றி வெளிப்படையாக எழுதியதற்கே அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

பொதுவாக பொருளியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் வறுமை, ஏற்றத்தாழ்வு பற்றி பேசுவதோ, எழுதுவதோ மிக மிக அரிது. இந்தியாவில் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் முப்பது – நாற்பது ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களும் ஐந்நூறு பக்கப் புத்தகம் எழுதினாலும் அதில் பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி விவாதிப்பதே இல்லை. சந்தையின் வழிகாட்டுதலின்படி வேகமாக வளரும்போது ஏற்றத்தாழ்வு ஏற்படுவது இயல்புதான் என்று அவர்கள் நியாயப்படுத்துவதை நாம் பார்க்க முடிகிறது. ஏற்றத்தாழ்வு மேலும் அதிகரிக்காமல் இருக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்று இவர்களா கொள்கை சார்ந்த அறிவுரை வழங்கப் போகிறார்கள்?

பொருளாதார ஏற்றத் தாழ்வின் ஐந்து முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் ஐந்து முக்கிய அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்:

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை விட, மூலதனம் வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ஈட்டும் வருமானத்தின் வளர்ச்சி அதிகமாக இருப்பது
  • நாட்டு மக்களின் வருமானம் வளரும் வேகத்தைவிட, சொத்துக்குவிப்பின் வேகம் அதிகமாக இருப்பது
  • பொருளாதாரத்தில் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added) கூலி/சம்பளம் பெறுபவர்களுக்குக் கிடைக்கும் பங்கு சரிந்துகொண்டே வருவது
  • நாட்டின் வெவ்வேறு பகுதிகள்/மாநிலங்களுக்கு இடையே பொருளாதார வேறுபாடுகள் அதிகரிப்பது
  • பாலினப் பாகுபாடுகளுக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு

இவை ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். மொத்த மதிப்புக் கூட்டலில் உழைக்கும் மக்களின் பங்கு குறையும்போது, லாபத்தின் பங்கு அதிகரிக்கிறது. மூலதனம் வைத்திருப்பவர்களுக்குதான் அந்த லாபம் சென்று சேரும் என்பதால், லாபத்தின் பங்கு உயரும்போது சொத்துக்குவிப்பின் அளவும் வேகமும் அதிகரிக்கும். நாட்டின் எந்த பகுதியில் மூலதனம் முதலீடு செய்யப்படுகிறதோ, மற்ற பகுதி மக்கள் வேலைவாய்ப்பைத் தேடி அங்கு வருவார்கள். பெரும்பாலும் வேலை தேடிப் புலம்பெயர்பவர்கள் ஆண்களே எனும்போது, பெண்கள் வீட்டுவேலைகள் செய்து, குழந்தைகள் மற்றும் முதியோர்களை கவனித்துக்கொண்டு, குறைவான கூலிக்குக் கிடைக்கும் வேலையையும் செய்துகொண்டு குடும்பச்சுமையை முழுவதுமாக சுமக்கின்றனர். அவர்கள் வீட்டில் செய்யும் பணிகளைப் பல சமுதாயங்கள் வேலை என்று அங்கீகரிப்பதே இல்லை. அவர்கள் செய்யும் வேலைகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கினால் முதலாளித்துவத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை (Universal Basic Income) உறுதி செய்யும் திட்டத்தைச் சிறப்பாக வடிவமைத்து அரசுகள் செயல்படுத்தினால், வளரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை மட்டுப்படுத்த முடியும் என்பது இந்தப் புத்தகத்தின் பரிந்துரை. முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்கான பரிந்துரையாகவும் இதை நாம் புரிந்துகொள்ளலாம்.

கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம்கொண்டவர். தற்போது பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயிற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share