எஸ்.வி.ராஜதுரை
இந்திய வரலாற்றை ‘ஓர் இந்தியனின் நோக்குநிலை’யிலிருந்து எழுதுவதில் உதாரண புருஷராக ‘வீர்’ சாவர்க்கர் விளங்குகிறார் என்று அமித் ஷா கூறியிருப்பதால், அப்படிப்பட்ட வரலாற்று நூல் மீது கவனம் செலுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
1857ஆம் ஆண்டில் வட இந்தியாவின் சில பகுதிகளில், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இருந்த இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த நிகழ்வை , பொதுவாக ‘சிப்பாய் கலகம்’ என்றழைக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி பல்வேறு கருத்துகளும் விளக்கங்களும் சொல்லப்பட்டு வருகின்றன. அந்தக் கிளர்ச்சியின் 150ஆண்டு நிறைவையொட்டி இந்தியாவின் புகழ்பெற்ற வார ஏடான, ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ சிறப்பிதழைக் கொண்டு வந்தது. இந்திய அரசியல் தலைவர்கள், வரலாற்றாசிரியர்கள் எனப் பல தரப்பட்டவரும் 1857ஆம் ஆண்டுக் கிளர்ச்சி பற்றிய தத்தம் கருத்துகளைக் கூறியுள்ளனர். அது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கீழே இருந்து தோன்றிய கிளர்ச்சி!
பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இந்திய சிப்பாய்கள் நடத்தப்பட்டு வந்த விதம், பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டல், அவர்களுடைய ஆக்கிரமிப்புகளின் விரிவாக்கம், கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்றச் செயல்பாடுகள், சுதேசி மன்னர்கள் ஆண்டு வந்த நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதற்காக குழந்தைப் பேறுகள் இல்லாதவர்கள் தத்து எடுத்துக் கொள்வதைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டன . ( இது சுதேசி மன்னர்களை மட்டுமின்றி, நிலமும் சொத்தும் வைத்திருந்த ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பாதித்தது), மத விவகாரங்களில் தலையிட்டமை என்ற பல்வேறு காரணங்களால் அதிருப்தியும் எரிச்சலுமடைந்திருந்த பல்வேறு வர்க்கங்களையும் சாதிகளையும் சேர்ந்த மக்களின் ஆதரவு அந்தக் கிளர்ச்சிக்கு இருந்தது.
எனவே அதை ‘கீழே இருந்து தோன்றிய கிளர்ச்சி’ என்று சொல்லலாம்; சுவீகார முறை தடை செய்யப்பட்டதால் பிரிட்டிஷாரால் பதவி பறிக்கப்பட்ட, அல்லாது அவர்களால் ஓய்வூதியம் தரப்படாதவர்களும் சமஸ்தான ஆட்சியாளர்கள் என அங்கீகரிக்கப்படாதவர்களும் அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கத் தொடங்கினர். எனினும், அந்த சிப்பாய்களின் தன்னெழுச்சியிலோ, பின்னர் அவர்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களிடமோ ‘இந்திய தேசிய உணர்வு’ இருந்தது, இந்திய தேசியத்தின் வெளிப்பாடாகவே அந்தக் கிளர்ச்சியைக் காண வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்வது கடினம்.

ஏனெனில் அப்போது ‘இந்துஸ்தான்’ என்பது ஒரு நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்பட்டு வந்ததேயன்றி, ‘தேசம்’ என்று நவீனகாலத்தில் பொருள் கொள்ளப்படக்கூடிய ஓர் அரசமைப்பாக இருக்கவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனிதான், ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யுடன் இந்திய மக்களை ‘இந்துக்கள்’ என்றும் ‘முஸ்லிம்கள்’ என்றும் பாகுபடுத்தியிருந்தது. ‘ ஜாதியை ஒழித்துக்கட்டுதல்’ (Annihilation of Caste) என்னும் புகழ்பெற்ற உரையில் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்: “முதலாகவும் முக்கியமானதாகவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்து சமூகம் என்பதே ஒரு கட்டுக்கதைதான் என்பதைத்தான். ‘இந்து’ என்ற பெயரே ஒர் அந்நியப் பெயர்தான். உள்ளூர் மக்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக முகமதியரால் அந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட பெயர்தான் ‘இந்துக்கள்’ என்பது.முகமதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் ‘இந்து’ என்ற சொல்லே காணப்படவில்லை”
இந்தக் கருத்தும் ஓர் இந்தியனால் ‘இந்திய நோக்கு நிலை’யிலிருந்து எழுதப்பட்டதுதானே அல்லவா?
ஹிந்து பற்றி மஹா பெரியவர்
’மஹாபெரியவர்’ என்று கூறப்படும் காஞ்சி சங்கராச்சாரியார்கூட ’தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவரது கட்டுரைகளின் தொகுப்பின் முதல் பாகத்தில் கூறியுள்ளார். ”நமக்கு சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்ற பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது…நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்ற பொதுப் பெயரைத் தந்து இன்று இந்திய தேசம் என்ற ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்”.
ஆக, இதுவும்கூட ‘ ஓர் இந்தியனால், இந்தியனின் நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்ட வரலாறு’ என்று அமித் ஷா ஏற்றுக் கொள்வார் என்று நம்பலாம்.
தேசியத்துக்கு அடிப்படையிட்ட காங்கிரஸ்
சிப்பாய்களின் எழுச்சி தோற்கடிக்கப்பட்ட பின், பிரிட்டிஷ் அரசாங்கம் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்த இந்தியப் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் சமஸ்தானங்களைத் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வைத்திருக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. மறுபுறம், ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்த அறிவாளிகளால் இந்திய அளவிலான தேசிய உணர்வை வளர்க்க முடிந்தது. அந்த அறிவாளிக்கூட்டத்தைச் சேர்ந்த சிலர்தான் 1884ஆம் ஆண்டில் பம்பாயில்கூடி காங்கிரஸ் என்னும் அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான அடிப்படைகளை வகுத்தனர் என்பதை ‘தி ஹிந்து’ , ‘சுதேசமித்ரன்’ ஏடுகளை நிறுவியவரும் தொடக்ககாலக் காங்கிரஸ்காரருமான ஜி.சுப்பிரமணிய ஐயரின் வரலாற்றை எழுதியுள்ள குருமலை சுந்தரம் பிள்ளை கூறியுள்ளார்:
“இதற்கு முன் இந்தியா முழுவதிலுமுள்ள பெரிய மனிதர்களெல்லோரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாமேயன்றி நேரே சந்தித்திருக்க முடியாது. காசி, இராமேஸ்வரம் முதலிய ஷேத்திரங்களுக்கு இந்தியாவிலுள்ள எல்லா இந்துக்களும் வந்து கூடுவது வெகுகாலமாயிருக்கும் வழக்கமாயிருப்பினும், அங்கு கூடுபவர்கள் பெரும்பாலும் தெய்வ பக்தர்களும் சந்நியாஸிகளுமன்றி தேசபக்தர்களல்லர். அன்றியும் ஒவ்வொரு ஸ்தலத்திலும் ஒவ்வொரு மதத்தலைவர்கள் கூடுவார்களேயன்றி எல்லா மதஸ்தர்களும் கூடுவது அரிது . ஏக்தேசமாய்க் கூடும்படி நேர்ந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வருமுன் இங்கிலீஷ் கற்றறிந்திருந்த இந்தியர்கள் தத்தம் சுயபாஷையில் பேச முடிந்திருக்குமேயன்றி அனைவரும் ஒரே பாஷையில் சம்பாஷணை செய்திருக்க முடியாது. சம்பாஷணையில்லாவிடத்து அநுதாபமும் ஒருதாய் மக்களென்ற சகோதர பாவமும் உண்டாதல் அரிது. ஆதலால் ரிப்பன் பிரபு இந்தியா விட்டு நீங்கிய அப்புண்ணிய வருஷத்தில் இங்கிலீஷ் கற்றவர்களும் தேசாபிமானமுள்ளவர்களும் பல்வேறு மதத்தவரும் ஆகிய இந்தியப் பெரிய மனிதர்கள் கூடும்படியான சந்தர்ப்பம் மிகவும் அபூர்வமான சந்தர்ப்பமேயாகும். இந்த சந்தர்ப்பமே இப்போது இந்தியா முழுமையையும் தன்வயப்படுத்தியாளுகின்ற இந்தியன் நேஷனல் காங்கிரஸ் என்னும் மகாசபைக்கு கருப்போற்பத்திச் செய்த மகாசந்தர்ப்பமாகும்”

அதற்கு முன்பே வங்காளத்தைச் சேர்ந்த கேசவ சென் போன்றோர், வங்காளத்துக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தேசிய உணர்வு கொண்டிருந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் செய்திருந்த போதிலும், அனைத்திந்திய தேசியம் என்பதற்கு அடிப்படையிட்டது காங்கிரஸ்தான். எனினும், உலகின் பலவேறு நாடுகளில் இருந்த, இருந்துவருகிற தேசியவாதிகள் தங்கள் தேசத்திற்கும் தேசியத்துக்கும் நீண்ட நெடுங்கால வரலாறு உள்ளதாக உரிமை கொண்டாடுவதுபோலவே, நினைவுக்கு எட்டாத பழங்காலத்திலிருந்தே இந்தியா என்கிற தேசமும் இந்திய தேசிய உணர்வும் இருந்தது என்ற கருத்து இந்திய தேசியவாதிகள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் வகுப்புவாதத்தை விரும்பாத, வகுப்புவாதத்தை ஊக்குவித்த இரு தரப்பாரிடமும் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இந்த இருவகையான தேசியவாதிகளும் இருந்தனர்.
ஓ… தியாகிகளே…
இந்தப் பின்னணியில்தான் வி.டி.சாவர்க்கர் எழுதிய ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1857’ ( India’s First War of Independence of 1857) என்னும் நூலைக் காணவேண்டும்.சிப்பாய் கிளர்ச்சியின் 51ஆம் ஆண்டு நிறைவையொட்டி மராத்தி மொழியில் அவர் எழுதிய ‘ஓ, தியாகிகளே’ என்னும் நீண்ட கட்டுரையின் சுருக்கமான வடிவம் ஏற்கனவே 1907இல் மராத்தி நாளேடான ’விஹாரி’ என்னும் ஏட்டில் வெளிவந்திருந்தது. இந்த நீண்ட கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் 1909இல் இங்கிலாந்தில் அச்சிடப்பட்டது. ஆனால், அந்த நூலின் முதல் அத்தியாயம் மட்டுமே இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குக் கிடைத்திருந்த போதிலும், அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிடும் என்றஞ்சி , அந்த நூல் இந்தியாவிற்கு வராமல் தடை செய்துவிட்டனர்.
அந்த ஆங்கில நூலில், அதன் ஆசிரியர் பெயர் ‘ஓர் இந்திய தேசபக்தன்’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. சாவர்க்கார் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டதால், அப்போது இங்கிலாந்தில் இருந்த அவர், அந்தப் புத்தகத்தைத் தடை செய்வது பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்டப்படி சரியானதுதான் என்றாலும், அது நியாயமானது அல்ல என்றும், தமக்கும் அந்தப் புத்தகத்துக்கும் சம்பந்தமில்லை என்றும், தம்மிடம் அரசாங்கம் விளக்கம் கேட்காமலேயே தம் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது தவறு என்றும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.

பிரிட்டிஷாரின் தடையுத்தரவை மீறி, அந்தப் புத்தகம் இந்தியாவின் பல பாகங்களில் படிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்த இந்திய தேசியவாதிகள் மட்டுமின்றி இந்தியாவில் செயல்பட்டுகொண்டிருந்த பகத் சிங், சுபாஷ் போஸ் போன்றவர்களாலும் அந்தப் புத்தகம் படிக்கப்பட்டும் அதன் பிரதிகள் விநியோகிக்கப்பட்டும் வந்ததால் அந்த நூலுக்குக் கூடுதலான கீர்த்தி கிடைத்தது.
இங்கிலாந்தில் நடந்த விவாதம்
1848 ஆம் ஆண்டு நிகழ்வு சிப்பாய் கலகமா, தேசியக் கிளர்ச்சியா என்ற விவாதம் பிரிட்டனிலும்கூட நடந்தது. கார்ல் மார்க்ஸால் மாய்மாலவாதி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவரும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற அவைத் தலைவராக இருந்தவருமான டிஸ்ரேலி அதை ‘தேசியக் கிளர்ச்சி’ (National Revolt) என்றே குறிப்பிட்டார். மார்க்ஸும்கூட அதை ‘இந்தியக் கிளர்ச்சி’ என்று குறிப்பிடுகிறார். ஆனால் பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகளும் வரலாற்றாய்வாளர்களும் கொண்டிருந்த கருத்து என்னவென்றால், சிப்பாய்களும் அவர்களை ஆதரித்த சுதேசி மன்னர்களும் அற்பத்தனமானவர்கள், சுயநலமிகள், அறிவற்றவர்கள், என்பதுதான். இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில், சிப்பாய் கலகம் பற்றி பிரிட்டிஷ் அதிகாரிகளும் வரலாற்றாசிரியர்களும் எழுதிய நூல்களைப் படித்து, அவர்கள் அதைப் பற்றி எழுதியவற்றை மறுதலிக்கும் வகையில், அந்த நூல்களிலுள்ள விவரங்களைப் பயன்படுத்தியே சாவர்க்கரால் எழுதப்பட்டுள்ள நூலில்தான் அந்த எழுச்சி இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.
சாவர்க்கர் சொல்லும் காரணிகள்
அதே போலவே ‘சிப்பாய் கலகம்’ தோன்றியதற்கான காரணிகள் என்று பிரிட்டிஷார் தரப்பில் சொல்லப்பட்டவற்றை (துப்பாக்கி முனைகளிலும் குண்டுகளிலும் பசு,பன்றிக் கொழுப்புகளைத் தடவியதால் இந்திய சிப்பாய்களுக்கு ஏற்பட்ட கோபம் இந்தியாவின் கடைசி மொகலாய மன்னரிடமிருந்த கடைசி ஆட்சிப் பகுதியான ஆவதை கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியமை) ’இரண்டாம்பட்சக் காரணிகள்’ என்றும், அந்தப் புரட்சிக்கு மூலகாரணமாக இருந்தது ‘ஸ்வதர்மம்’’, ‘ஸ்வராஜ்யம்’ ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்ச்சிதான் என்று தமது நூலின் முதல் பாகத்தின் முதல் அத்தியாயத்திலேயே அறுதியிடுகிறார். எனினும், அந்த இரண்டாம் பட்சக் காரணிகளை விளக்குவதற்கு ஏராளமான பக்கங்களை ஒதுக்கியுள்ளார் இந்த நூலில்.
1858ஆம் ஆண்டு ‘சுதந்திரப் போர்’ இந்தியாவின் கடந்த காலப் போர் மரபின் நவீனப் புரட்சிகர வடிவம் என்றும், குவாலியர் அரசர் ஸிந்தியா, நேபாள இந்து மன்னர், காஷ்மீர் இந்து மன்னர் போன்ற பிரிட்டிஷ் விசுவாசிகள் இழைத்த துரோகம்தான் அந்த சுதந்திரப் போர் தோல்வியடைந்ததற்கான காரணம் என்றும் கூறுகிறார்.
அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சியில் நிகழ்ந்ததைப் போலவே, இந்தியாவிலும் படித்த, அறிவொளி பெற்ற இந்தியர்கள் சுதந்திர உணர்வுடன் தங்களை ஒட்டுமொத்தமாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறும் சாவர்க்கர், அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சியில் ஈடுபட்டவர்கள் மக்களின் மத உணர்வையோ நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே இருந்து வந்த தேசிய உணர்வையோ கொண்டிருக்கவில்லை என்பதைச் சொல்வதில்லை.
அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளைவிட மேம்பட்டதாகவும், புதிய சமூக அமைப்பை உருவாக்கக்கூடியதாகவும் இந்தியப் புரட்சி அமைய வேண்டும் என்று கூறும் அவர், அதே மூச்சில் கிழக்கு நாடுகளில் தோன்றிய புரட்சிகள் எல்லாம் மதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்கிறார். சாதி அமைப்பில் சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று கூறுகிறார்.
‘இராமராஜ்யத்தை’ உருவாக்குவதற்காக நீண்டகாலமாகக் காத்துக் கொண்டிருந்த போருக்கு இராவணன் சீதையைக் கடத்திய சம்பவம் எப்படி ஓர் இரண்டாம் பட்சக் காரணியாக இருந்ததோ, அது போன்றவைதான் மேற்சொன்ன ‘இரண்டாம்பட்சக் காரணிகள்’ என்றும் ‘இராமராஜ்யம்’ என்பது ‘தர்ம ராஜ்யம்’ (அறம்சார்ந்த அரசு) என்றும் கூறுகிறார். இராவணனை வெற்றி கொண்ட பிறகு இராமராஜ்யத்தை நிறுவி பல நூற்றாண்டுகள் அதை இராமன் ஆண்டு வந்ததற்கான காரணம், அவன் ‘ஸ்வதர்மம்’, ‘ஸ்வராஜ்யா’ ஆகிய இரண்டு நெறிகளையும் பற்றியொழுகியதும், அவனே தர்மத்தின் உருப்பிழம்பாக இருந்ததும்தான்.
அகண்ட பாரதம்
1757இல் பிளாஸி யுத்தத்தில் வெற்றி பெற்றதிலிருந்து தொடங்கி, 1848 வரை பிரிட்டிஷார் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, சிலோன் ஆகியவை உள்ளடங்கிய நிலப்பரப்பைத் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். இந்தப் பகுதிகள் முழுவதையும் அடங்கிய நிலப்பரப்புதான் ஒரு காலத்தில் ‘பிரிட்டிஷ் இந்தியா’ என்ற வரைபடமாக ஆங்கிலேயரால் உலகப் படத்தில் காட்டப்பட்டு வந்தது. ஆனால், பிரிட்டிஷார் வெற்றிகொண்ட நிலப்பரப்பை, நவீன காலத்துக்கு முன்பே இருந்துவந்த ‘அகண்ட பாரதம்’ என்றும் ‘பாரதமாதா’ வின் வரைபடக் காட்சி என்றும் வாதிடுகிறார் சாவர்க்கர். வேதகால ஆரியர்களின் தாக்கத்தினால்தான் இந்திய நாகரிகம் உருவாயிற்று என்பது அவர் கருத்து.
சாவர்க்கர்-மார்க்ஸ் பார்வைகள்
இந்திய சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றியும் அதை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷார் மேற்கொண்ட இராணுவ முயற்சிகள் பற்றியுமான விவரங்கள், வி.டி,சாவர்க்கரின் நூலை ஒப்பிடுகையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகளில் நிறையவே உள்ளன. எனினும் மார்க்ஸ் இந்தியாவை நவீன காலத்துக்கு முன்பே இருந்த தேசம் என்று கூறவில்லை. மாறாக, இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முக, பன்மொழித் தன்மையை மார்க்ஸ் அறிந்திருந்தார் என்று கூறலாம். “தீர்க்க முடியாத முரண்பாடுகள், இனங்கள், பழங்குடி மக்கள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, (ஆங்கிலேயர்களால்) உருவாக்கப்பட்ட பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்” என்று ‘நியூயார்க் ட்ரிப்யூனில்’ 1857 ஜூலை 15இல் வெளிவந்த ‘இந்திய இராணுவத்தில் கிளர்ச்சி’ (The Revolt in the Indian Army) என்ற கட்டுரையில் கூறுகிறார்.
பிரிட்டிஷாருக்கும் இந்தியர்களுக்கும் இருந்த கலாச்சார வேறுபாடுதான் அந்த சுதந்திரப் போருக்கான காரணம் என்று கூறும் சாவர்க்கர், அரசியலையும் மதத்தையும் தனித்தனியாகப் பிரித்து வைத்த பிரிட்டிஷாரின் செய்கை இந்து மரபுக்கு வெறுப்பை உண்டாக்கக்கூடியது என்றும் ‘ஸ்வதர்மமும்’ ‘ஸ்வராஜ்ய’மும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்று கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும், ‘ஸ்வதர்மா’ என்பது ’ பரலோகத்தில் தரப்படும் பாதுகாப்பு என்றும்’ ’ஸ்வராஜ்யா’ என்பது இகலோக அதிகாரத்தின் வாள் என்றும் கூறுகிறார்.

ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் ‘உடன்கட்டை ஏறுதல்’, ‘ பெண் குழந்தைகளைக் கொல்லுதல்’ ஆகியவற்றைத் தடை செய்தும், விதவைகள் மறுமணம் செய்து கொள்வதற்கு ஒப்புதல் அளித்தும் கிழக்கிந்தியக் கம்பெனி பிறப்பித்த ஆணைகள் அறவியல் சார்ந்தவையல்ல என்றும், மாறாக இந்திய மதங்களை (இந்து மதம், மொகமதிய மதம்) ஒழித்துக்கட்டுவதும், அப்படி ஒழித்துக்கட்டுவதன் மூலம் இந்திய தேசிய உணர்வுக்குக் குழிதோண்டுவதும், அந்த மதங்களின் இடத்தில் கிறிஸ்தவ மதத்தைக் கொண்டுவருவதற்குமான நடவடிக்கைகளே என்று சாடும் சாவர்க்கர், இந்த ஒடுக்குகுறை நடவடிக்கைகள் ஒளரங்கசீப்பின் நடவடிக்கைகளை ஒத்திருப்பதால், இன்று நமக்கு சிவாஜிகளும் குரு கோவிந்த் சிங்கும் தேவைப்படுகின்றனர் என்கிறார்.
தீக்குச்சியான சுவீகார தடைச் சட்டம்
பிரிட்டிஷார் அமைத்த ரயில்பாதைகள் சாதி ஒழிப்புக்கு வழிவகுக்கும் என்று மார்க்ஸ் கருதியதற்கு மாறாக, சாவர்க்கரோ இந்துக்களின் சாதி உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இரயில் பாதைகளும் இரயில் பெட்டிகளும் கட்டப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். ‘உடன்கட்டை ஏறும் வழக்கத்தை’ பிரிட்டிஷார் தடை செய்தது, மக்களின் விருப்பத்துக்கு எதிரான செயல் என்று கூறும் சாவர்க்கர், இது போன்ற சட்டங்கள் சிலை வழிபாட்டைத் தடை செய்வதிலும்கூட போய் முடியலாம் என்றும், மத நூல்களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் சமூகப் பழக்கவழக்கங்கள், அனுஷ்டானங்கள் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மதங்களைச் சேர்ந்த, தக்க அதிகாரம் கொண்ட தனிநபர்களுக்கும் அல்லது நிறுவனங்களுக்கும்தான் அந்த மாற்றத்தைச் செய்யும் உரிமை இருக்கின்றது, அவற்றைப் பின்பற்றுபவர்களின் ஊடாகத்தான் அதைச் செய்ய முடியும், வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை என்று கூறுகிறார். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தத்து எடுத்துக் கொள்வதை இந்துக்கள் உன்னதமான விஷயமாகக் கருதுகிறார்கள் என்றும் தர்ம சாஸ்திரங்கள் விதிக்கும் புனித ஆணைகளில் அதுவுமொன்று என்றும் கூறும் அவர், இந்திய சுதந்திரப் போர் என்னும் வெடிமருந்தை வெடிக்கச் செய்வதற்கான தீக்குச்சியாகப் பயன்பட்டதுதான் டல்ஹெளசி கொண்டுவந்த சுவீகாரத் தடைச் சட்டம் என்கிறார்.
இரகசிய சங்கங்கள்
மொகலாயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட சிவாஜி, ஐக்கிய இத்தாலியை உருவாக்குவதற்கான போராட்டத்தில் முக்கியப் பாத்திரம் வகித்த மாஜினி ஆகியோராலும் ஐரோப்பியப் புரட்சியாளர்களாலும் உருவாக்கப்பட்ட ‘இரகசிய சிறு அமைப்புகள்’ (secret cells), இந்தியாவில் தங்கள் படைபலத்தையும் சுதேசிக்கூட்டாளிகளையும் கொண்டிருக்கும் பிரிட்டிஷாரை எதிர்த்து முறியடிப்பதற்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தும் சாவர்க்கர், இந்திய சிப்பாய்களும் அவர்களுக்குத் தலைமை தாங்கியவர்களுக்கும் இருந்த இத்தகைய இரகசிய அமைப்புகளின் திறமையைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட சித்திரத்தை வழங்குகிறார். (’இரகசிய சங்கங்’களில் சாவர்க்கருக்குக் கடைசிவரை ஆர்வம் இருந்தது வரலாறு.)
இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே ரத்தம்
இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இருசாராரையும் அந்த சுதந்திரப் போரில் வழிநடத்திச் சென்ற அடிப்படையான நெறிகள் ‘ஸ்வதர்மா’வும் ‘ஸ்வராஜ்யா’வும் என்றும் இந்து மதம், இஸ்லாம் ஆகிய இரண்டும் இந்தியாவின் மதங்கள் என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே இரத்தம்தான் இருக்கிறது என்றும், சுதந்திரம் என்னும் மிக உன்னதமான இலட்சியத்தின் பொருட்டும், தேசம் மரித்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்திய மக்கள் சாதி, மதம், வர்க்க, மொழி வேறுபாடுகளைக் கடந்து , தாய் (பாரத மாதா) ஒடுக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாமல் ஒன்றிணைந்து போராடினர் என்றும் கூறுகிறார்.
அதே வேளை , முகமது கஜினி இந்தியா மீது படையெடுத்து வந்த பிறகு, இந்தியாவில் நடந்த சண்டைகள் யாவும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த சண்டைகளே என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் கூறுகிறார். இந்து மன்னர்களுக்கிடையிலும் முஸ்லிம் மன்னர்களுக்கிடையிலும் நாடு பிடிப்பதற்காக நடந்த சண்டைகளை அவர் குறிப்பிடுவதேயில்லை. கிளர்ச்சியாளர்கள் மீரத்திலிருந்து புறப்பட்டு டெல்லியைக் கைப்பற்றிய ஐந்து நாட்களின்போது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்து வந்த இடைவிடாத சண்டைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அந்த நாட்களில் ” இந்துக்களும் முஸ்லிம்களும் பகைவர்களல்லர், வெற்றியாளர்களோ, வெற்றி கொள்ளப்பட்டவர்களோ அல்லர், ஆனால் அவர்கள் இருவரும் சகோதரர்கள்!” என்று பிரகடனம் செய்யப்பட்டதாகவும் கூறுகிறார். “சிவாஜி, பிரதாப் சிங், சத்ரசால், பிரதாபாதித்யா, குரு கோவிந்த் சிங், மகாதாஜி ஸிந்தியா ஆகியோரால் கடந்தகாலத்தில் மொகலாயர்களின் நுகத்தடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பாரத மாதா” அந்த ஐந்து நாட்களின்போது “இனிமேல் நீங்கள் (இந்துக்களும் முஸ்லிம்களும் – எஸ்.வி.ஆர்) சரிசமமானவர்கள், சகோதரர்கள், உங்கள் இருவருக்கும் சரிசமமாக நான்தான் தாய் என்ற புனிதமான மந்திரத்தை ஓதியதாக” சொல்கிறார். மேலும், பண்டைய ஆரியர்களின் காலத்திலிருந்து தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் அதிகாரம் அந்த ஐந்து நாட்களில் மீண்டும் எழுந்ததாகக் குதூகலிக்கிறார். (105)
அந்த சுதந்திரப் போரை நடத்தியவர்களும் அதற்கு ஆதரவளித்தவர்களும் தத்தம் மதங்களை உயிரினும் மேலானதாகக் கருதியவர்கள் என்று கூறும் அவர், அதற்கு ஆதாரமாக டெல்லியில் மொகலாய மன்னராக மீண்டும் முடிசூட்டப்பட்ட பகதூர் ஷா வெளியிட்ட பிரகடனத்தைக் குறிப்பிடுகிறார்: ” கடவுள் நமக்கு செல்வம், நிலம், அதிகாரம் ஆகியவற்றை எதற்காகக் கொடுத்தார்? தனிப்பட்ட மனிதர்களின் சந்தோசத்துக்காக அல்ல மாறாக நமது மதத்தைக் காப்பாற்றும் புனிதச் செயலுக்காக”.
பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டலைப் பற்றிப் பேசுகையில் சாவர்க்கர் பெரிதும் கவனம் குவிப்பது, மன்னர்கள், ஜமீந்தார்கள், நவாப்புகள், தாலுக்தாரர்கள் ஆகியோரின் உடைமைகள் பிரிட்டிஷாரால் அபகரிப்பட்டதன் மீதுதான்.
முஸ்லிம் மன்னர்களைப் புகழ்ந்த சாவர்க்கர்
அந்த சுதந்திரப் போரில் பங்கேற்ற கான் பகதூர் கான், மெளல்வி அஹ்மது, அலி நாக்கி கான், அஸிமுல்லா போன்ற முஸ்லிம்களைப் புகழ்ந்தும், பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்த இந்து மன்னர்களை இகழ்ந்தும் எழுதும் சாவர்க்கர், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே இரத்தத்தைக் கொண்டவர்கள், இந்து மதமும், மொகலாய மதமும்தான் இந்தியாவின் மதங்கள் என்றெல்லாம் கூறினாலும், முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ‘ராமராஜ்யம்’, ‘பாரத மாதா’, ‘ஆரிய நாகரிகம்’ போன்ற சொல்லாடல்களை அவர் கைவிடுவதில்லை. அதுமட்டுமல்ல, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றுக்கும் – அவரைப் பொறுத்தவரை சீரிய எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்கள் – நானா சாகிப் போன்ற மராத்திய வீரர்கள்தான்.
கிளர்ச்சிப் படைகள் மொகலாய வம்சத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷாவை மீண்டும் அரியணையில் ஏற்றியதைப் பற்றிக் குறிப்பிடுகையில், மொகலாய வம்சம் இந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல, பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று என்றும், வெளிநாட்டுத் துணிச்சல்காரர்களாலும் உள்நாட்டு சுயநலமிகளாலும் சேர்ந்து உருவாக்கப்பட்டதே அது என்றும், இப்போது பகதூர் ஷா ஏறிய அரியணை அதுவல்ல என்றும் கூறினார். முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இருந்த நீண்டகாலப் பகைமை இந்த சுதந்திரப் போரின் காரணமாக மறைந்தொழிந்ததது என்றும், அந்த இரு மதத்தினருக்கும் உள்ள சகோதரத்துவத்தின் குறியீடாகவே பகதூர் ஷா அரியணை ஏற்றப்பட்டார் என்றாலும், அது தாற்காலிக ஏற்பாடுதான் என்று திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறார் சாவர்க்கர்!
அந்த ‘சுதந்திரப் போர்’ தோல்வியடைந்ததற்கான காரணங்களில் ஒன்று, கிளர்ச்சியாளர்களை ஒப்பிடுகையில் பிரிட்டிஷாரிடம் பன்மடங்கு கூடுதலான இராணுவ வலிமை இருந்தது என்றும், அது தற்காலிகமான தோல்வியே என்றும், இந்திய தேசியம் என்னும் எரிமலை மீண்டும் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திலிருந்த இந்து, முஸ்லிம் சிப்பாய்களுக்குக் கொடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பன்றி, பசுமாட்டுக் கொழுப்புகள் தடவப்பட்டிருந்தது அவர்களது மத உணர்ச்சியைப் புண்படுத்தியதால் அது அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்தெழுந்ததற்கான ஒரு இரண்டாம் பட்சக் காரணியாக அமைந்தது என்பதை விரிவாக எடுத்துரைக்கும் சாவர்க்கர், அதே துப்பாக்கிகளையும் குண்டுகளையும்தானே கிளர்ச்சியாளர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் பயன்படுத்தினர் என்று ஒரு ஆங்கிலேய ஆய்வாளர் கூறியதை அடிக்குறிப்பொன்றாகத் தம் நூலில் சேர்த்திருக்கிறாரேயன்றி அதற்கான மறுப்பு எதனையும் சொல்வதில்லை.
தீண்டப்படாதோரும் பிரிட்டிஷ் பேரரசும்
‘தீண்டப்படாதோரும் பிரிட்டிஷ் பேரரசும்’ என்னும் கட்டுரையில் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார், “பிளாசிப் போரில் கிளைவுடன் சேர்ந்து போரிட்டவர்கள் துசாத்துகள் இந்த துசாத்துகள் தீண்டப்படாதவர்கள். கோரேகெளன் போரில் பங்கு கொண்டு சமர் புரிந்தவர்கள் மகர்கள், இந்த மகர்கள் தீண்டப்படாதவர்கள். இவ்வாறு முதல் போரிலும் கடைசிப் போரிலும் பிரிட்டிஷார் பக்கம் சேர்ந்து போரிட்டு, அவர்கள் இந்தியாவை வெற்றிகொள்ள வைத்தவர்கள் தீண்டப்படாதவர்களே…இந்தியாவை வெற்றி கொள்ள பிரிட்டிஷாருக்கு தீண்டப்படாதவர்கள் உதவியதோடு மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்து நிற்கவும் துணைபுரிந்தனர். 1857ஆம் வருடக் கலகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்ட மேற்கொண்ட முயற்சியேயாகும். பிரிட்டிஷாரை விரட்டியடித்துவிட்டு இந்தியாவை அவர்களிடமிருந்து மீட்கும் முயற்சியே அது. பம்பாய் படையும் சென்னைப் படையும் பிரிட்டிஷாரிடம் விசுவாசமக இருந்தன. அவற்றின் உதவியைக் கொண்டே கலகம் ஒடுக்கப்பட்டது. பம்பாய் படை, சென்னைப் படை ஆகியவற்றின் இயைபு என்ன? பம்பாயைச் சேர்ந்த மகர்கள், சென்னையைச் சேர்ந்த பறையர்கள் போன்ற தீண்டப்படாத மக்களைக் கொண்டே இந்த இரு படைகளும் அமைக்கப்பட்டிருந்தன….”

அம்பேத்கர் இங்கு முக்கிய கருத்தொன்றை – மார்க்ஸாலும் ஏங்கெல்ஸாலும்கூட கவனிக்க முடியாமல் போன விஷயமொன்றை – சொல்கின்றார்: “தீண்டப்படாதவர்கள் இவ்வாறு பிரிட்டிஷாருடன் சேர்ந்து கொண்டது பச்சைத் துரோகம் என்று கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். துரோகமோ, துரோகமில்லையோ தீண்டப்படாதவர்களின் இந்த செயல் முற்றிலும் இயல்பானதே. நாட்டின் ஒரு பகுதியினர் படையெடுப்பாளரிடம் அனுதாபம் காட்டிய நிகழ்ச்சிகள் வரலாற்றின் எத்தனையோ உண்டு. தங்கள் நாட்டவரின் கொடிய ஒடுக்குமுறைகளிலிருந்து புதிதாக வருபவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற அவர்களது நம்பிக்கையே இதற்குக் காரணம்”.
இந்த வாசகங்களையும்கூட ’ஓர் இந்தியனின் நோக்குநிலையிலிருந்து’ இன்னொரு இந்தியனால் எழுதப்பட்டவை என்று அமித் ஷா ஏற்றுக் கொள்வாரா?
ஆனால் 1870ஆம் ஆண்டிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களை விலக்கிவிட்டு, சாதி இந்துக்களை மட்டுமே தங்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளும் முடிவை பிரிட்டிஷார் மேற்கொண்டதையும் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். உண்மையில், 1857ஆம் ஆண்டு ‘சுதந்திரப் போர்’ தோல்வியடைந்தாலும் சாதி இந்துக்களுக்கு, குறிப்பாக சாதி அமைப்பைப் பேணிப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு ஒரு நன்மையைக் கொண்டு வந்தது. அதாவது விக்டோரியா மகாராணி விடுத்த பிரகடனம், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் மத விஷயங்களில் தலையிடாது என்ற உறுதி மொழியைத் தந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கட்சியிலும் அதற்கு வெளியிலும் இருந்த சனாதனவாதிகள் தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களின் வயதை 12இலிருந்து 14ஆக உயர்த்தும் சட்டம், தாழ்த்தப்பட்டோர் கோவிலில் நுழைய அனுமதிக்கும் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து வந்தது தனி வரலாறு.
சாவர்க்கரை மாற்றிய 14 ஆண்டுகள்
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நூலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் போற்றிப் புகழும் (இங்கும்கூட அவர் மறைமுகமாக ஆரிய இந்து மேன்மையை மறைமுகமாக வலியுறுத்திக்கொண்டேதான் இருந்திருக்கிறார்) , இரு மதத்தினருக்கும் ஒரே இரத்தம்தான் உள்ளது, இந்து மதம் , மொகலாய மதம் ஆகிய இரண்டுமே இந்திய மதங்கள்தான் என்று வாதிடும் சாவர்க்கரிடம் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வெளியிட்ட இந்துத்துவா என்னும் நூலில் காணலாம். இந்த 14 ஆண்டுக் கால இடைவெளியில் நிகழ்ந்தவை என்ன ?
(தொடர்ச்சி நாளைய கட்டுரையில்)
கட்டுரையாளர் குறிப்பு:

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.