பேராசிரியர் சமன்லால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர், பேராசிரியர், ஜேஎன்யு ஆசிரியர் சங்கத் தலைவர், தற்போது இந்திய மொழிகள் துறையை வழிநடத்துபவர், இந்திய வரலாற்றாய்வாளர், உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கலைகங்களில் விரிவுரையாளர், இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு பகத் சிங் வழ்வும் பணியும் குறித்து 15க்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியவர், பஞ்சாபி, இந்தி, ஆங்கில மொழி வல்லனுனர், பஞ்சாப் – இந்தி மொழிகளுக்கு இடையே பல இலக்கியங்களை மொழி பெயர்த்தவர், இதற்காக இந்தி மொழி இயக்குநரகம், பஞ்சாப் அரசு ஆகியவற்றிடம் இருந்து விருதுகள் பெற்றவர், இந்திய வரலாற்றாய்வு மையத்தின் விருது பெற்றவர், சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தற்போது உலகம் மதிக்கும் இந்திய பல்கைக்கழகம் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மீது மோடி அரசு மேற்கொண்டுவரும் தாக்குதல்களால் மனம் வெதும்பி மத்திய அரசின் இந்தி இயக்குநகரம் அளித்த விருதினையும் விருதுத்தொகையையும் திருப்பி அளித்தார். ஆனால் மதிக்கத் தெரியாத இயக்குநர் அலட்சியப்படுத்தினார். அதனால் தொகைக்கான காசோலை, பட்டயம் முதலியவற்றை தபால் மூலம் இயக்குரகத்துக்கு அனுப்பியதோடு ஒரு வேதனைக் கடிதத்தினை இயக்குனருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளார்.வலி மிக்க வரலாற்றுச்சிறப்புமிக்க அக்கடிதத்தின் முக்கியப் பகுதி வருமாறு:
பெறுநர்
இயக்குநரகம்
மத்திய இந்தி இயக்குநரகம்
சாஸ்திரிபவன்
புதுடில்லி
மத்திய இந்தி இயக்குநரகம் யார் தலைமையில் இயங்குகிறது என்பதே இந்நாட்களில் தெரியாத ஒன்றாக இருப்பதால் இந்தக் கடிதத்தை பெறுநர் பெயர் குறிப்பிடாமல் இயக்குநரகம் என்றே குறிப்பிடுகிறேன் .
நான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியராக மட்டுமின்றி JNUTA-ன் (ஆசிரியர் சங்கம்) தலைவராகவும் JNU ன் மாணவனாக 1977-87ல் என் முனைவர் படிப்பையும் அங்கே முடித்துள்ளேன் . அந்த வகையில் இயற்கையாகவே கடந்த சில நாட்களாக நான் பயின்ற அப்பல்கலைகக் கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் விஷயங்கள் என்னை மிகுந்த மன வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளன.
ரோஹித் வெமூலாவிற்கு ஆதரவான போராட்டத்தின் போதும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் போராட்டத்தின் போதும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாகவே இருந்திருக்கின்றன .UGC-ஐ கைப்பறுவோம் ,ரோகித்திற்கு ஆதவராக நிற்போம் என்ற முழக்கங்களை முன் வைத்து JNU மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரையும் அவர்தம் அரசாங்கத்தையும் பதற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. இப்போராட்டங்கள் அம்மாணவர்கள் மீது அரசு வஞ்சம் கொள்ளவும் காரணமாகியிருக்கிறது. என்றாலும் முன்னாள் துணை வேந்தர் தம்முடைய பதவிக்காலம் வரை போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கவில்லை . அப்போது போராட்டங்கள் நடைபெற்ற போதும் இவர்களது தேச துரோக முழக்கத்தை முன்னிருத்திக் கூட உள்நுழைய முடியவில்லை . துணைவேந்தரின் இந்த ஜனநாயகப்பூர்வ நிர்வாகத்தின் காரணமாகத்தான் அவரோடு மாணவர்களும் ஆசிரியர்களும் துணைநின்றனர் .
ஆனால் அமைச்சர் ஸ்மிருதி ராணி கட்டுக்கடங்கா பழிதீர்க்கும் உணர்வினால் தன்னுடைய தேர்வின் படி ஒரு துணை வேந்தரைப் பதவியிலமர்த்தி அவர் மூலம் தானும் தன் அரசாங்கமும் செய்ய நினைத்ததை சாதித்துள்ளார் . ஆம் ,பதவியேற்ற இரண்டாவது வாரத்திலேயே பல்கலைக்கழக வளாகத்திற்குள் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலான புகாரின் பேரில் போலீசாரை நுழைய அனுமதித்துள்ளார் . பல்கலைக்கழகத்தின் விதிப்படி முதற்கட்ட விசாரணை முடிவதற்கு முன்பே நிர்வாகிகள் யாரும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக துணை வேந்தர் போலீசாரை அனுமதித்ததே விதிமீறல் நடவடிக்கை . இதற்கு எதிராக மூத்த நிர்வாக உறுப்பினர்கள் போராடியதுடன் JNUTA உடன் இணைந்து JNU மாணவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இப்படியொரு சூழ்நிலை ஜதாப்பூர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தபோது அந்த துணைவேந்தர் ‘போலீசாரிடம் தான் எந்தவொரு புகாரும் கொடுக்கவில்லை என்றும் அப்படியிருக்க போலீசார் பல்கலைக்கழகத்தில் நுழைவது சட்டப்படி தவறு என்றும் வாதிட்டு மாணவர்கள் பக்கம் நின்றதோடு சமூக விரோத சக்திகள் பல்கலைக்கழகத்தில் நுழையக்கூடாதென வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களோடு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றார் .
ஆனால் JNU துணைவேந்தரோ அதற்கு நேர்மாறாக ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் போல் அரசாங்கத்தோடு கைகோர்த்துக் கொண்டு ஆயுதங்களுடன் போலீசாரை அனுமதித்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த துணைபோகிறார்.அவர்கள் சொல்கிற வீடியோ ஆதாரமே மதிப்பிழந்த செய்திச் சேனலுடையது ,அதன் பேரில் போலீஸ் உள் நுழைவது பல்கலைக்கழக தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடுவதாகும் . இது பல்கலைக்கழக நிர்வாகத்திற்குள் பேசி முடித்திருக்க வேண்டியது . இதனை தேச துரோகம் என தேசியப் பிரச்சனையாக மாற்றியது மத்திய அரசின் திட்டமிட்ட செயல் . அதற்கு அவர்கள் முதுகெலும்பற்ற துணைவேந்தரைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்நிகழ்வுகள் என் மனசாட்சியைத் துளைத்து மிகுந்த மனபாரத்திற்கு இட்டுச்செல்கின்றன . ஆகவே இதே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் திரு .எம் .எம் .ஜோஷி அவர்களின் கையொப்பமிட்டு இந்தி இயக்குநரகத்தால் கொடுக்கப்பட்ட2001ஆம் ஆண்டிற்கான இந்தி பேசாத பகுதியிலுள்ள இந்தி எழுத்தாளர் விருதைத் திருப்பியளித்துள்ளேன். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமென உலக அளவில் பெயர் பெற்ற ,அறிவுஜீவிகளான நோம் கோம்ஸ்கி ,நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களான ஆரென் பாமுக் ஆகியோரால் பாராட்டப்பட்ட எமது பல்கலைக்கழகத்தை அழிக்க முயலும் உங்கள் அரசின் விருது இனியும் என்னிடம் இருக்கக்கூடாது . ஆகவே போராட்டத்தில் எனது பங்களிப்பாக இந்த விருதைத் திருப்பியளிக்குறேன். விருதின் பகுதியாக வழங்கப்பட்ட பட்டத்தையும் ஐம்பதாயிரம் மதிப்புள்ள காசோலையையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன் . JNU ல் நடக்கும் அரசின் அராஜக நடவடிக்கைகளில் இந்த இந்தி இயக்குநரகத்தின் பங்கு ஏதுமில்லை என்றாலும் உங்கள் அலுவலகம் வழி இந்த விருதை உங்களிடம் திருப்பிக் கொடுக்கிறேன்.
இக் கடிதத்தையும் காசோலையையும் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் . அப்பொழுது தான் அமைச்சகப் பதிவேடுகளில் எனது போராட்டம் பதிவாகும் .
பழிதீர்க்கும் எண்ணம் கொண்ட இந்த அரசுக்கு எதிரான எனது நடவடிக்கையால் எனக்கு விளையவிருக்கும் ஆபத்தை உணர்ந்தே இருக்கிறேன் . துணைவேந்தர்களையே மதிக்காத இந்த அரசாங்கம் எனக்கெதிராக செயல்படும் ,ஆகவே தான் இந்தக் கடிதத்தின் நகல்களை குடியரசுத்தலைவருக்கும்,தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளேன் . இதுகண்டு எனது உயிருக்கு ஆபத்து ஏதும் விளையுமானால் அதற்கு இந்த அரசாங்கமே முழுப்பொறுப்பு .
விருதுகளைத் திருப்பித்தருவது என்பது உலக அளவில் அதிகாரத்தில் இருப்பவர்களால் மதிக்கப்படும் ஒரு போராட்ட வடிவம்தான் . இந்த அரசிடம் அதை எதிர்பார்ப்பதற்கில்லை. இதன் மூலம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மரியாதைக்குறைவான பேச்சுகளுக்கு நான் ஆளாகலாம் . நான் இந்தி பஞ்சாபி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புத்தகங்களை எழுதி இருக்கிறேன் . அவற்றில் சில வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன . பதினைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பகத்சிங் போன்ற புரட்சிகர விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியது . அவர்கள் வழி தேசிய உணர்வு ,தேசபக்தி ஆகியவற்றை அறிகிறேன் . ஆனால் இன்று சுதந்திரத்திற்காக எவ்விதப் பங்குமளிக்காதவர்கள் ,அப்படியான முன்னோர்களைக் கொண்டிராதவர்களின் கட்சி எனது தேசப்பற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறது .
எனது தேசிய உணர்வு பகத்சிங்கின் சுரண்டலற்ற சோசலிச இந்தியாவையும் ,காந்தியின் மதசார்பற்ற இந்தியாவையும் நேருவின் அறிவியல் அறிவும் அணுகுமுறையும் கொண்ட இந்தியாவையும் அம்பேத்கரின் தேச உணர்வான சமூக நீதியையும் சமத்துவத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையையும் ,சுபாஷ் சந்திரபோஸின் சோசலிச இந்தியா என விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் தேசபக்தியையும் அடிப்படையாகக் கொண்டது . ஆகவே நான் RSS கூடாரங்களின் இந்துத்துவ தேசியவாதத்தை அடியோடு மறுக்கிறேன் . ஒருபோதும் கவோல்கர் ,சவார்க்கர் போன்ற சுதந்திரப் போரில் பங்கெடுக்காத ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காக குரல் கொடுக்காத சிறுபான்மையினரை தலித்துகளை பிரித்தாளுகிற அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கிற பிரிவினைவாதிகளை ஏற்பதற்கில்லை . சமீபத்தில் அவர்கள் கூடாரத்தைச் சேர்ந்த பிஜேபி ராஜஸ்தான் சட்ட மன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் தலையை வெட்டி ஜெஎன்யு பல்கலை வாயிலில் போட வேண்டும் என்று பேசியிருகிறார். இன்னொருவன் ராகுலை சுட்டுக் கொல்ல வேண்டும் என பேசியிருக்கிறான் . இவர்கள் பேசுவதற்கும் ஐஎஸ் .ஐஎஸ் தீவிரவாதிகள் கூற்றுகளுக்கும என்ன வேறுபாடு இருக்கிறது . இவர்களின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது .
நான் ராகுல் காந்தியின் அரசியலில் முரண்படலாம் . ஆனால் அவரின் மூதாதையர்களான மோதிலால் நேரு ,ஜவஹர்லால் நேரு ,இந்திராகாந்தி ஆகியோர் இந்தப்போலி தேசப்பற்றாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் சிறையில் வதைபட்டவர்கள் . அவர்களின் இந்து ராஷ்ட்ரம் எனும் தேசியம் பல உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. அவர்கள் தேசியம் மதசார்பின்மைக்கு அறிவியல் உணர்வுக்கும் இடமற்ற மதத்தினை அடிப்படையாக கொண்டது . அந்த உணர்விலிருந்து தான் இவர்கள் மதச்சார்பின்மையை வலியுறுத்திய ஜவஹர்லால் நேருவின் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தையும் அதன் சிறப்புகளை அழித்து, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ,தேசிய புத்தக அறக்கட்டளை போன்றவற்றில் அத்துறை சார் நிபுணத்தும்வமற்ற அமைச்சர்களை நியமித்து அழித்தது போலவே அழிக்க முனைகிறது . இதற்கு விலையாக இந்த அரசாங்கம் என் உயிரைக் கேட்டாலும் ,போலி தேசியவாதிகளால் கொல்லப்படுவேன் என்றாலும் அராஜக மதவாதப்போக்கிற்கு எதிராகத் திரண்டுள்ள JNU மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் கரம் கோர்த்து நிற்கிறேன்.
இப்படிக்கு,
சமன் லால்
2000-2001ஆம் ஆண்டிற்கான இந்தி பேசாத பகுதியிலுள்ள இந்தி எழுத்தாளர் விருது பெற்ற எழுத்தாளர்.
தமிழில் வழக்குறைஞர் த ஜீவலட்சுமி
முழு கடிதத்தை வாசிக்க: http://www.countercurrents.org/lal270216.htm
