இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிப்பது குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதியளித்ததாக நமது அம்மா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் 10 நாட்களைக் கடந்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யும் இச்சட்டம், அண்டை நாடான இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து தங்கியிருக்கும் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட செய்தியில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது, அப்போது குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு. எனவே தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு அதே தான் என்ற கோரிக்கையையும் அமித் ஷாவிடம் முன்வைத்துள்ளார். அதனை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்ட உள் துறை அமைச்சர் அமித் ஷா, இப்பிரச்சினை குறித்து விரைவில் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும், சரியான நேரத்தில் இதற்குரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் முதலமைச்சரிடம் உறுதியளித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அரசியல் காரணங்களுக்காக போராடுகிறார்கள் என்றும், இதற்கு மக்கள் ஆதரவு இல்லை எனவும் முதலமைச்சர், அமித் ஷாவிடம் தெளிவுபடுத்தினார்” எனவும்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுவதாகவும், 23-ம் தேதி திமுக தலைமையிலான எதிர்கட்சிகளின் பேரணியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுப்பதற்கான உரிய பாதுகாப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
