பெண்களுக்கு மாதம் ரூ2,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்- எடப்பாடி வெளியிட்ட அதிமுகவின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்

Published On:

| By Mathi

AIADMK Election Manifesto

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ2,000 வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜனவரி 17-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அதிமுகவின் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்:

  • மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்) சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்குத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் : நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • அனைவருக்கும் வீடு : (அம்மா இல்லம் திட்டம்) ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
  • அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் : மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share