பீகார் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு ரூ10,000 கொடுத்ததால் மட்டுமே பாஜக- ஜேடியூவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வல்லுநராக இருந்த பிரசாந்த் கிஷோர் சொந்த மாநிலத்தில் சொந்த கட்சியை ஜெயிக்க வைக்க முடியவில்லையே என்கிற விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார்.
பீகார் தேர்தல் தோல்வி தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: தேர்தலின் போது நிதிஷ்குமார் அரசு 1.5 கோடி பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது; இந்த வாக்குறுதியை நிதிஷ்குமார் அரசு நிறைவேற்றிவிட்டால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்; பீகாரை விட்டே போய்விடுகிறேன்; அரசியல் என்பதையே மறந்து விடுகிறேன்.
ஜேடியூ 25 தொகுதிகளுக்கு அதிகமாக வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொன்னேன்; நான் இப்போது எந்த பதவியிலும் இல்லையே.. எதை ராஜினாமா செய்வது?
பீகார் தேர்தலில் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் எதிர்காலத்தில் வெற்றி எங்கள் வசமாகும். நான் பீகாரை விட்டு வெளியேற மாட்டேன்; கடந்த 3 ஆண்டுகளாக செய்த பணிகளை போல 2 மடங்கு உழைக்க வேண்டும்.
ஒரு அரசாங்கமே முதல் முறையாக ரூ40,000 கோடி மக்கள் பணத்தை தேர்தலுக்காக செலவிட்டுள்ளது; பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற இதுதான் காரணம்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா ரூ10,000 கொடுத்து 60,000 வாக்குகளை நிதிஷ்குமார் பெற்றுள்ளார். மக்கள் ரூ10,000-க்காக தங்களது வாக்குகளை விற்பனை செய்வார்கள் என நான் நினைக்கவும் இல்லை.
நிதிஷ்குமார் அறிவித்த பெண்களுக்கான ரூ2 லட்சம் நிதி திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்தாவிட்டால் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அப்போது மக்களுடன் அரசு அலுவலகங்களுக்கு செல்வோம்; தேவைப்பட்டால் நிதிஷ்குமாரையும் சந்திப்போம். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
