திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர் ) சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ 1 கோடி நிவாரண உதவியை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மூர்த்தி என்பவரது குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களில் தந்தை மூர்த்தி மற்றும் அவரது மகன்களுக்கிடையே குடும்பத் தகராறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஆகஸ்ட் 5-ந் தேதி, மது போதையிலிருந்த தந்தை மூர்த்தி மற்றும அவரது மகன் தங்கப்பாண்டி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மூர்த்தியை மகன் தங்கப்பாண்டி கடுமையாக தாக்கியதால் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் அளித்தனர். இதனடிப்படையில் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை, மகன் சண்டையை பிரித்து மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி மற்றும் மூர்த்தியின் மற்றொரு மகனான மணிகண்டன் இருவரும் நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை தாக்கினர். அவரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல்.
சம்பவத்தின் போது உடன் இருந்த ஓட்டுநரையும் துரத்திச் சென்றுள்ளார். அவர் தப்பிச் சென்று காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடிமங்கலம் போலீசார் தப்பிச் சென்ற தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
5 தனிப்படை அமைப்பு
தமிழகத்தை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தோட்டத்தின் உரிமையாளரான எம்எல்ஏ மகேந்திரனிடமும் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதல்வர்
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
