ஹாலிவுட் திரைப்படமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்துக்குத் தமிழில் வசனம் எழுதுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. பிராந்திய மொழிகளில் படங்களை டப் செய்து ரிலீஸ் செய்யும் போது அதற்கான வரவேற்பு அதிகம் இருந்து வருகிறது. பொதுவாக டப்பிங் படங்களில் அந்தந்த மொழிக்கு ஏற்ப மாற்றம் செய்கிறோம் என்ற பெயரில் வசனங்களைக் கொச்சையாக பயன்படுத்துவது நடந்து வருகிறது இந்நிலையில் முன்னணி இயக்குநர் ஒருவரை வசனம் எழுத இணைக்கும் போது அதன் தரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் படத்துக்கான விளம்பரமாகவும் அது அமையும் என்றும் கூறப்படுகிறது.
அவெஞ்சர்ஸ் படவரிசையில் நான்காவது பாகமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்துக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுகிறார். இதை டிஸ்னி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மற்ற மொழிப் படங்களிலும் வசனம் எழுத டிஸ்னி நிறுவனம் பலரைத் தொடர்புகொண்டு வருகிறது. தெலுங்கு, இந்தி மொழிகளில் இன்னும் வசனம் எழுத யாரும் ஒப்பந்தமாகவில்லை.
