விமர்சனம்: சத்யா!

Published On:

| By Balaji

மணிக்கொடி

முன்னாள் காதலியின் குழந்தையை மீட்க உதவி செய்யச் செல்லும் இடத்தில் எதிர்பாராமல் நடைபெறும் சம்பவங்களும், கடத்தலின் இரு முனைகளையும் கண்டுபிடிப்பதையும் பல திருப்பங்களுடன் சொல்லும் த்ரில்லர் படம் சத்யா.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ரம்யா நம்பீசனும், சிபிராஜும் காதலிக்க அவரது அப்பா நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் ரம்யா நம்பீசன் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. சிபிராஜும் வேலை காரணமாக நண்பன் யோகி பாபுவுடன் ஆஸ்திரேலியா சென்று விடுகிறார். நான்கு வருடங்கள் கழித்து ரம்யா நம்பீசனிடமிருந்து சிபிக்கு அழைப்பு வர இந்தியாவுக்கு வருகிறார். தன் குழந்தை காணாமல் போன விஷயத்தை சிபியிடம் ரம்யா நம்பீசன் சொல்கிறார். அதை மீட்கும் முயற்சியில் இறங்கும் சிபிராஜ், எந்த மாதிரியான விஷயங்களைக் கண்டுபிடிக்கிறார்… இறுதியில் குழந்தையைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

ADVERTISEMENT

சிபிராஜின் வழக்கமான படங்கள் போல இல்லாமல் சற்று மாறுபட்ட உணர்வைத் தருகிறது சத்யா திரைப்படம். கமல் நடித்த சத்யா திரைப்படத்துக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. படத்தில் சிபிராஜின் பெயர் சத்யா என்பதால் படத்துக்கு அதைத் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

ADVERTISEMENT

திரைக்கதை பல சன்பென்ஸ்களுடன் பரபரப்பாகவே செல்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் விறுவிறுப்பாக இருப்பதால் இரண்டு மணிநேரம் ஒன்பது நிமிடங்கள் செல்வதே தெரியவில்லை. நேர்த்தியாக கையாளப்பட்ட திரைக்கதையே இதற்குக் காரணம்.

ரம்யா நம்பீசன் தனது நடிப்பால் கவர்கிறார். சிபிராஜின் காதலியாக வரும் இடங்களைவிட ஓர் அம்மாவாக தன் குழந்தையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யும்போதும், அதற்காக மெனக்கெடுவதிலும் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்.

ADVERTISEMENT

சிபிராஜ் நடிப்பைப் பொறுத்தவரையில் ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் மீட்டர் மாறாமல் சரியாக செய்திருக்கிறார்.

வரலட்சுமிக்கான காட்சிகள் குறைவு என்றாலும் கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கமாக காமெடி கதாபாத்திரத்தில் தோன்றும் சதீஷ் இந்தப் படத்தில் சற்று மாறுபட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மனதில் பதிகிறார். யோகி பாபு, சிபிராஜின் காமெடி காட்சிகள் ரசிக்கும் விதத்தில் உள்ளன. முக்கியமாக இருவருக்குமிடையேயான வசனங்களும், அவற்றின் டைமிங்கும் நச். வசனம் எழுதியிருக்கும் கார்த்திக் கிருஷ்ணா கவனம் பெறுகிறார். ஆனந்தராஜ் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யதார்த்தமான போலீஸாக வலம் வந்துள்ளார். ரவி வர்மா வில்லனாகத் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.

சைமன் கே.கிங் இசையில் ‘யாரோடும் சொல்லாத’ பாடல் ஏற்கெனவே பல வெர்ஷன்களில் வெளியாகித் தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. படத்திலும் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டு மனதை வருடும்படி இருக்கிறது. சத்யா தீம் மற்றும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

அருண்மணி பழனி ஒளிப்பதிவில் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரையில் கலர்ஃபுல் பயணமாக இருக்கிறது. கெளதம் ராமச்சந்திரனின் படத்தொகுப்பும் படத்தின் திரைக்கதையை நேர்த்தியாகச் சொல்ல உதவியிருக்கின்றன.

சில முக்கியமான காட்சிகளில் வரும் லாஜிக் மீறல்களும், ஒருவர் விடாமல் அனைவரும் துப்பாக்கி வைத்துக்கொண்டு சுற்றுவது போன்ற காட்சிகளும் படம் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் சலிப்பைத் தருகின்றன. என்றாலும், படத்தின் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அந்தக் குறையைப் போக்கிவிடுகிறார். ரம்யா நம்பீசன் நான்கு வருடங்களுக்குப் பிறகு சிபிராஜை அழைக்கும் காரணம் என்ன என்பதற்கான காரணத்துக்கு எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் வைத்துப் படத்தை முடிக்கும் விதம் ரசிக்கும்படி இருக்கிறது.

தெலுங்கில் ‘க்ஷணம்’ என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக்கான இதில் காட்சிகளை மாற்றாமல் அப்படியே எடுத்திருப்பதால் க்ஷணம் பார்த்தவர்களுக்கு இப்படம் புதிதாகத் தெரிய வாய்ப்பில்லை. மற்றவர்களுக்கு இந்த சத்யா வித்தியாசமான த்ரில்லர் அனுபவத்தைக் கொடுப்பான்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share