விபத்தில் இறந்தவரின் நினைவு நாளில் இலவச ஹெல்மெட்!

Published On:

| By admin

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் விபத்தில் இறந்த வாலிபரின் நினைவு நாளில் இலவச ஹெல்மெட்டை வழங்கிய நண்பர்களின் செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் 25 வயது அலெக்ஸ் பாண்டியன். இவர் திசையன்விளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு 2021 மே மாதம் 24ஆம் தேதி அன்று திசையன்விளையில் இருந்து உசிலம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது, நிகழ்ந்த விபத்தில் இறந்தார்.
இந்த நிலையில் அலெக்ஸ் பாண்டியனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று அவருடன் அலுவலகத்தில் பணியாற்றிய நண்பர்கள், திசையன்விளை போலீஸ் நிலையம் முன்பு ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்களை வழங்கினர்.
அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி இலவச ஹெல்மெட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது.

**ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share