லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்குப் பிறகு ஒரு புதிய படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது.
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்குமார் படத்தை இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. தற்போது விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதையில் தான் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவன் பிரதீப் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கமல் ஹாசன் விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளார், அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். விக்னேஷ் சிவனின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.
– கார்த்திக் ராஜா
