விஜயகாந்த் மறைவிற்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனுக்கு குஷ்பு உள்ளிட்டோர் தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் மறைந்த தகவலை சொல்லியிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 28) அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில்.
“தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் விஜய்காந்த் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிர்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!!
அன்பு சகோதரி குஷ்பு, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவாவும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐயகாந்த் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!!,
இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கும் நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…!
அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் நண்பர் சரத்குமாரும், நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் என்றும் எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!

கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…!
வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்..!!
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்திற்கும்,
அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும்,
மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும்
எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!!
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்” என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
