வாடி ராசாத்தி!

Published On:

| By Balaji

தமிழ்த் திரையுலகில் நடிப்புகாக கவனம் பெறும் நடிகைகளின் திரை ஆயுட்காலம் மற்ற நடிகைகளை ஒப்பிடும் போது சற்று அதிகம். திருமணத்திற்கு பின் நடிகைகள் கதாநாயகியாக வலம் வருவது அரிதாகிப்போன பின்பும் கூட தனது முந்தையப் படங்களில் வெளிப்படுத்திய நடிப்புத் திறமையால் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான எதிர்பார்ப்பை தக்கவைத்திருப்பவர்களில் முக்கியமானவர் ஜோதிகா.

திருமணத்திற்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். இது 2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மூலப்படத்தின் இயக்குநரான ரோஷன் ஆண்ட்ரூஸே இந்த படத்தையும் இயக்கியிருந்தார். 2015ம் ஆண்டு வெளியான இந்த படத்தை தொடர்ந்து ஜோதிகா மீண்டும் களமிறங்கும் படம் ‘மகளிர் மட்டும்’.

ADVERTISEMENT

இந்த படத்தை பிரம்மா இயக்கியுள்ளார். இவர் சினிமா சாராத கலைஞர்களைக்கொண்டு இயக்கிய தனது முதல் படமான ‘குற்றம் கடிதல்’ மூலம் கவனம் பெற்றவர். அந்தப் படத்துக்குச் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதற்கடுத்து அவர் தற்போது இயக்கியுள்ள ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் மூலம் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா போன்ற பிரபலங்களுடன் களமிறங்கியுள்ளார். ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்க சமூகத்துக்குள் கட்டுபட்டு அடங்கி அதே இயல்பாகிப்போன பெண்கள் அதை உடைத்துக்கொண்டு வெளியேவருவதை கதைக்களமாக ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் கொண்டுள்ளது என்பதை அதன் ட்ரெய்லரை பார்க்கும்போது உணர முடிகிறது. இந்தத் திரைப்படத்தை 2D என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் கிறிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. இதன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகும் என நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 18) காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரம்மாவும் தனது முகநூல் பக்கத்தில் இதை உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் ரசிகர்கள் ஜோதிகாவை இம்முறையும் ‘வாடி ராசாத்தி’ என வரவேற்கத் தயாராகிவிட்டனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share