வளர்ச்சிப் பாதையில் உள்நாட்டு பரிவர்த்தனை தளங்கள்!

Published On:

| By Balaji

இந்தியாவின் உள்நாட்டு பரிவர்த்தனைத் தளங்களால் மாஸ்டர் கார்டு, விசா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது என்று ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றோடு (நவம்பர் 8) இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதையொட்டி எதிர்க்கட்சிகள் இந்த நாளை கறுப்பு தினமாகவும், பாஜக கறுப்பு பண ஒழிப்பு நாளாகவும் கடைப்பிடித்து வருகின்றன. இதுகுறித்து நவம்பர் 8ஆம் தேதி அருண் ஜேட்லி தனது முகநூல் பதிவில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களான மாஸ்டர் கார்டு, விசா போன்றவற்றின் சந்தை மதிப்பு இரண்டு ஆண்டுகளில் வெகுவாக சரிந்துள்ளது.

ADVERTISEMENT

அதே சமயத்தில் இந்திய நிறுவனங்களான ரூபே மற்றும் யூபிஐ போன்றவற்றின் பரிவர்த்தனை மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இவற்றின் பரிவர்த்தனைகள் 65 விழுக்காடு அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார். யூபிஐ பரிவர்த்தனை தளம் 2016ஆம் ஆண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமான பரிவர்த்தனைகளின் மதிப்பு அக்டோபர் 2016இல் ரூ.50 கோடியாக இருந்தது. செப்டம்பரில் 2018இல் இதன் மூலமான பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.59,800 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உருவாக்கிய பீம் செயலியை தற்போது 1.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலமான பரிவர்த்தனைகள் 2016 டிசம்பரில் ரூ.2 கோடியாக மட்டுமே இருந்தது. 2018 செப்டம்பரில் இதன் மூலமான பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.7,060 கோடியாக அதிகரித்துள்ளது. 2017 ஜூனிலிருந்து யூபிஐ தளங்களின் மூலமான ஒட்டுமொத்த பரிவர்த்தனைகள் 48 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரூபே மூலமான பரிவர்த்தனை பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு ரூ.800 கோடியாக மட்டுமே இருந்தது. செப்டம்பர் 2018இல் ரூபே மூலமான பரிவர்த்தனை ரூ.5,730 கோடியாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share