வடிவேலுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Published On:

| By Balaji

இயக்குநர் சிம்பு தேவன், ஷங்கர் ஆகியோரை ஒருமையில் பேசியதற்காக வடிவேலுவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துவருகிறது.

டிவிட்டரில் பிரே ஃபார் நேசமணி என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு பேட்டியளித்திருந்தார்.

ADVERTISEMENT

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் வடிவேலுவின் திரைத்துறை வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதன்பின் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும் கதாநாயகனாக நடிக்கவே வடிவேலு விருப்பம் தெரிவித்தார். எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே படக்குழுவுக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நின்றுபோனது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில் படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் வடிவேலு அளித்த பேட்டியில் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குநர் நவீன், தயாரிப்பாளர் சிவா, இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவில், “எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன்! ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், ’டைரக்டர் சொதப்பிட்டான்பா’ இது தான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது!

ADVERTISEMENT

ஒரு ஆகச் சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது.

இயக்குநர் சிம்புத்தேவனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை மிகச் சிறந்த மனிதர்! ஷங்கர் அவர்களைப் பற்றி யாரும் சொல்ல அவசியமே இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோருமே இங்கு மக்களை மகிழ்விக்கத்தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே. அன்பை மட்டும் வளர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “ இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் சார் பற்றி அவர் பேசிய விதம் கண்டிக்கதக்கது. இயக்குநர் சிம்புதேவன் ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தன் முதல் படத்தில் மாபெரும் வெற்றிபடத்தை நமக்கு தந்தார். அதன்பிறகும் பல தரமான திரைப்படங்களை நமக்கு தந்துள்ளார். ஒரு இயக்குநரை இவன், அவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை.

புலிகேசி-க்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘எலி’, ‘தெனாலிராமன்’ படங்களின் ரிசல்ட் (அவரோட தலையீடு) தமிழ் திரையுலகம் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குநர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன், “தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல! உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்”என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**

[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)

**

**

[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)

**

**

[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)

**

**

[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)

**

**

[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)

**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share