இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக வங்க தேசம் – இந்திய ஏ அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்க தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இக்பால் 13 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த சவுமியா சர்க்கார் 52 ரன்களும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 58 ரன்கள் சேர்க்கவும், அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய ஏ அணி பேட்டிங்கை தொடங்கியது, தொடக்க வீரர்களாக பன்சால், அபிநவ் முகுந்த் ஆகியோ் களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு பன்சால் உடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு
91 ரன்கள் எடுத்துள்ளது. பன்சால் 40 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.









