தமிழகத்தின் தற்போதைய நிலை மாற வேண்டும் என்றால், லஞ்ச ஊழல் இல்லாத தேர்தல் வர வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக விவசாய அணி ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்றது. அப்போது நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்று பேசத் தொடங்கிய அவர், ஆட்சியே செய்யத் தெரியாதவர்களிடம் இந்த நாடு சென்றது தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்று தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது போன்று வேறு எதுவும் கொடுமை இல்லை என்று குறிப்பிட்டார்.
”விஜயகாந்த் முதல்வரானால், அவர் போடும் முதல் கையெழுத்து , விவசாயம் சார்ந்த கையெழுத்தாகத்தான் இருக்கும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இன்றைய ஆட்சியாளர்கள் கோட்டையில் இருந்துதான் பணியை செய்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்த் முதல்வராகப் பதவியேற்றால் தனது பணியை கிராமத்தில் இருந்துதான் தொடங்குவார்” என்று பிரேமலதா கூறினார்.
விவசாயிகள் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்கள், ஆனால் தன்மானத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்று கூறிய பிரேமலதா, ”மற்ற நாடுகளில் விவசாயிகள் தான் முதலாளிகளாகப் பார்க்கப்படுகிறார்கள் அதுபோன்று, தமிழகத்திலும் தேமுதிக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் முதலாளிகளாக மாற்றப்படுவார்கள் ”என்று குறிப்பிட்டார்.
ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு வந்து கொடுக்கப்படும் என்று கூறுபவர் விஜயகாந்த் என்று சுட்டிக்காட்டிய பிரேமலதா, ”தமிழகத்தில் இருக்கக் கூடிய நதிகள் இணைக்கப்பட வேண்டும் , ஏரி, குளம் என அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்த வேண்டும், தடுப்பணைகள் கட்ட வேண்டும், கடலில் நீர் சென்று சேர்வதைத் தடுக்க வேண்டும்” என்று கூறினார். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் இவற்றைச் செய்யும் என்று கூறிய அவர், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார் .
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்தோறும் குறைதீர்ப்பு நாள் நடைபெறுகிறது. ஆனால் இது வரை என்ன குறை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் . தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ வரப்போவதில்லை நாடாளுமன்ற தேர்தலோடு பொதுத்தேர்தலும் வரப்போகிறது என்பது தான் உண்மை .தமிழகத்தின் தற்போதைய நிலை மாற லஞ்ச ஊழல் இல்லாத தேர்தல் வரவேண்டும், நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறினார்.,”
