ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதல்

Published On:

| By Balaji

ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று, 700க்கும் அதிகமான விசைப்படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே வழக்கமாக தாங்கள் மீன் பிடிக்கும் இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். அவர்கள் கற்களை மீனவர்கள்மீது வீசி எறிந்தனர்.

ADVERTISEMENT

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். அப்போது, இலங்கை கடற்படையினர் அவர்களைத் துரத்தி வந்து கப்பல்களின்மூலம் படகுகளை இடித்தனர். மேலும் 100க்கும் அதிகமான படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களைத் தூக்கி கடலில் வீசினர். 2 படகுகள் மோதி முழுமையாகச் சேதமடைந்தது. இதில், பாம்பனைச் சேர்ந்த ஜெஸ்டின் என்பவரது படகு முழுமையாகச் சேதமானது. அதேபோல, மீனவர் சேசுராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால், படகு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலத்துக்குப்பிறகு கடலுக்குச் சென்ற ஒவ்வொருமுறையும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்வதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், ஒவ்வொருமுறை கடலுக்குச் சென்று திரும்பும்போதும் பெருத்த நஷ்டத்துடனே கரைக்குத் திரும்பநேரிடுவதாகவும் இதனால் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் கவலைப்படுகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share