நடிகர் ரஜினிகாந்த் லைக்கா நிறுவன ஏற்பாட்டில் தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்துகொள்வதாக இருந்து, தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பயணத்தை ரத்து செய்தார்.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்து இளையராஜாவின் இலங்கை விசிட் பற்றிய செய்தி பரபரப்பைக் கிளப்ப இருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் சிறீலங்கா சுகந்திர கட்சி உறுப்பினர் K.T.இராஜசிங்கம் மற்றும்நார்வேயில் வாசிக்கும் கமல் ஆகிய புலம்பெயர் தமிழர் ஆகியோர் ஏற்பாட்டில் வரும் ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் இளையராஜா. அவருடன் பாடகர் மனோ ,சித்திரா, சாதனா சர்க்கம், கார்த்திக் மற்றும் ஹரி சரண் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இலங்கையிலே தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழித்த ராஜபக்சே கட்சியின் முக்கியஸ்தர் நடத்தும் இசை நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளும் தகவல் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ‘’ உலகை எமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இலங்கை இசை நிகழ்வு நடத்துகின்றது. இந் நிகழ்விற்கு நீங்கள்பங்கு பெற கூடாது என்பது உலக தமிழர்களின் வேண்டுகோள்.
நீங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக்கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலாகிறது.எனவே உலகத் தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஜூலை மாதம் என்பது எம் மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும்படைப்பலத் துணையுடன் வந்த எதிரியை எதிர்கொள்ள தம் உயிரையே ஆயுதமாக்கி,உடலை வெடிமருந்தாக்கி மனபலத்தை எமது இனத்தின் கவசமாக்கிய கரும்புலிகள் மாதம்.
எம்மினத்தின் வரலாற்றைப் புதுப்பித்த புனிதர்களின் மாதத்தில் நீங்கள் இசை நிகழ்வு மகிந்த ராஜபக்சவின் சிறீலங்கா சுகந்திர கட்சியினருடன் இணைந்து நடத்துவதை உலகதமிழர்கள் எப்படி ஏற்பது?”” என்று இளையராஜாவுக்கு ஈழத் தமிழர்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளார்களாம்.










