ராகுலுடன் ரோஹித் வெமுலாவின் தாய் நடைபயணம்!

Published On:

| By Monisha

ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரை நடைப்பயணத்தில் ரோஹித் வெமுலாவின் தாய் பங்கேற்றுள்ளார்.

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது முதல் நாள் நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகாவில் தனது நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி தற்போது தெலங்கானாவில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

ராகுலுடன் ராதிகா வெமுலா

இன்று(நவம்பர் 1) 55வது நாள் பயணத்தைத் தெலங்கானா ஷம்ஷாபாத்தில் இன்று காலை தொடங்கினார். இந்த பயணத்தில் ராகுல் காந்தியுடன் ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா கலந்து கொண்டார்.

அவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சிறிதுதூரம் நடந்தார். ஹைதராபாத் பல்கலையில் படித்து வந்த தலித் மாணவனான ரோஹித் வெமுலா கடந்த 2016ஆம்ஆண்டு சாதிய பாகுபாடு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.

அதேசமயம், ரோஹித் வெமுலா தலித் அல்ல; தனிப்பட்ட காரணங்களால் இறந்தார் என்று விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்தது.

அரசியலமைப்பை மீட்க வேண்டும்

ராகுலுடன் நடைப்பயணத்தில் பங்கேற்ற ராதிகா வெமுலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்“பாரத ஜோடா யாத்திரையில் ஒற்றுமையை பரப்ப ராகுலுடன் நடந்தேன். காங்கிரஸ் கட்சி பாஜக,ஆர்எஸ்எஸ் வசமிருந்து அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டும். ரோஹித் வெமுலா மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

தலித் மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தி, அனைவருக்கும் உரிய நீதி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

புதிய தைரியத்தைப் பெற்றன

ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பதிவில், “சமூக பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிரான எனது போராட்டத்தின் அடையாளமாக ரோஹித் வெமுலா இருக்கிறார்.

ரோஹித்தின் அம்மாவைச் சந்தித்ததின் மூலம் பயணத்தின் இலக்கை நோக்கிய படிகள் புதிய தைரியத்தைப் பெற்றன. மேலும் மனதிற்கு புதிய பலத்தை அளித்தன” என்று கூறியுள்ளார்.

யாத்திரையில் நடப்பதைத் தாண்டி பல சுவாரசியமான விஷயங்களும் நடைபெறுகின்றன. ராகுல் காந்தி ஷம்ஷாபாத் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மேளம் வாசிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மோனிஷா

குஜராத் பாலம் விபத்து: விசாரணை நடத்தும் உச்ச நீதிமன்றம்!

வலுக்கிறது மழை: முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share