மோடியின் பட்டம் குறித்த தகவல்களை தரமுடியாது – டெல்லி பல்கலை.

By Balaji

|

Published on 19 Jun 2016, 12:00 AM

கடந்த ஏப்ரல் இறுதியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வித்தகுதி பற்றி அவரது வேட்புமனுத் தாக்கலில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து விமர்சித்திருந்தார். இதுகுறித்து, அவர் மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் அர்ச்சயலுக்கு எழுதியிருந்த கடிதத்திலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து அர்ச்சயலு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுதொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தார். எனவே, பிரதமர் அலுவலகத்தில் மோடியின் கல்வி விவரங்களை அளிக்குமாறு தகவல் ஆணையம் கேட்டது. பின்னர், தகவல் ஆணையம் அளித்த பதிலில், ‘மோடி குஜராத் பல்கலையில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். மோடி குஜராத் பல்கலையில் எம்.ஏ. பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அரசியல் அறிவியலில் 1983ஆம் ஆண்டு 62.3% மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஐரோப்பிய அரசியல், இந்திய அரசியல் பகுப்பாய்வு மற்றும் அரசியல் உளவியல் பாடங்கள் அடங்கிய இரண்டு வருட பட்டப்படிப்பை மோடி படித்துள்ளார். மோடி 1978ஆம் ஆண்டு பி.ஏ முதலாம் ஆண்டில், 400 மதிப்பெண்களுக்கு 237 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது ஆண்டில், 400 மதிப்பெண்களுக்கு 262 மதிப்பெண்களும், மூன்றாம் ஆண்டில், 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மோடி தொலைக்கல்வி இயக்குநரகம் மூலம் படித்துள்ளார். நேரடியாகக் கல்லூரிக்குச் செல்லவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனாலும், இந்த விவகாரம் தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஜுன் 16 அன்று மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ‘சாய் கி சர்சா’ என்ற தலைப்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திக்விஜய் சிங், ‘பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன் என்று கூறினாலோ அல்லது அவரிடம் டீ வாங்கியிருந்தாலோ கண்டிப்பாக அவருக்கு ரூபாய் இரண்டு லட்சம் பரிசு அளிக்கப்படும்’ என்று கிண்டலும் கேலியுமாக விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இரண்டாவது முறையாக பிரதமர் மோடியின் பி.ஏ பட்டம் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டது. ‘ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் குறித்து மாணவர்களுக்கு மட்டுமே தகவல் தர முடியும்’ என்று பல்கலைக்கழகம் பதில் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயின்லால் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தில் ஒரு விண்ணப்பம் அளித்திருந்தார். அதில், மோடி படித்ததாக சொல்லப்படும், 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றவர்கள் ஆங்கிலத்தில் ‘எம்’ (மோடி), ‘என்’ (நரேந்திர) ஆகிய எழுத்துக்களில் பெயர் தொடங்கும் மாணவர்களின் மொத்தப் பட்டியலையும் கேட்டார். ஆனால், குறிப்பிட்ட ‘ரோல் நம்பர்’ இல்லாமல் கேட்பதால் மொத்தப் பட்டியலையும் அளிக்க முடியாது என தகவல் ஆணையம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel