பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பதவியை மீட்பதுதான் இந்தியாவை மீட்பதாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதயங்களை இணைப்போம்; இந்தியாவை மீட்போம் என்ற தலைப்பில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நேற்று மாநாடு நடைபெற்றது. பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இவர்கள் மட்டுமின்றி திமுக கூட்டணியில் இடம்பெறவுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இதயங்களை இணைப்போம்; இந்தியாவை மீட்போம் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினுடைய முழக்கம் மட்டுமல்ல; இதுதான் இன்றைக்கு இந்தியாவின் முழக்கமாக இருக்கிறது. இந்த நாட்டைப் பிரிக்கும் காரியத்தைச் சிலர் செய்துகொண்டு, தங்களைத் தேசபக்தர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதைவிட ஆபத்தாக இந்த நாட்டின் ஆட்சியையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள்” என்று மோடியையும், இந்து அமைப்புகளையும் மறைமுகமாகச் சாடினார்.

மேலும் ”இந்தியாவுக்கு ஆபத்து எதிரிகளால் அல்ல; ஆட்சியில் இருப்பவர்களால் வந்திருக்கிறது, வரப்போகிறது. நரேந்திர மோடியிடமிருந்து பிரதமர் பதவியை மீட்பதே இந்தியாவை மீட்பதற்கான அர்த்தம். நரேந்திர மோடி ஆட்சியிலிருக்கும் வரை இந்திய இதயங்களை இணைக்க முடியாது. அவர் பதவியேற்ற நாள் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைச் சிதைத்து வருகிறார் மோடி.
உச்சநீதிமன்றமா? நீதிபதிகளே மிரளுகிறார்கள். ரிசர்வ் வங்கியா? கவர்னர்களே ஓடுகிறார்கள். சிபிஐயா? அலுவலகத்தையே பூட்டுகிறார்கள். மக்கள் கண்காணிப்பு ஆணையமா? செயல்படக் கூடாது என்கிறார்கள். தகவல் ஆணையமா? தகவல் தரக் கூடாது என்று மிரட்டப்படுகிறார்கள். தேர்தல் ஆணையமா? தேர்தலை நடத்தக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். நாடாளுமன்ற விவாதமா மோடி வரவே மாட்டார். இப்படியொரு பிரதமரை இந்தியா பார்த்ததே கிடையாது” என்றார்.
திமுகவை இந்துக்களின் விரோதி என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடியாக, பாஜகதான் இந்துக்களின் எதிரி என்று ஸ்டாலின் விமர்சித்தார். “முஸ்லிம்கள் மாநாட்டில் மோடியை விமர்சிப்பதால் தன்னை இந்து விரோதி என்றுகூட சொல்லுவார்கள். பாஜகவை எதிர்ப்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது வேறு. பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல. உண்மையில் பாஜகவினர்தான் இந்து மதத்துக்கும், இந்திய நாட்டுக்கும் எதிரிகள். அவர்கள்தான் அரசியலில் மதத்தை இந்து மதத்துக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நீட் தேர்வு, கல்விக் கடன் குறைப்பு, விவசாயிகள் போராட்டம் என உரை முழுக்க மாநில அரசை விட மத்திய அரசையும், பிரதமர் மோடியையுமே மு.க.ஸ்டாலின் அதிகமாக விமர்சித்தார். மோடி அரசை வீழ்த்த நாடு முழுவதும் மாநிலக் கட்சிகள் தயாராகி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.,”
