�இன்று விவசாயிகள் பெரும்பாலும் பயிர்களுக்கு யூரியா, காம்ப்ளக்ஸ் போன்ற ரசாயன உரங்களையே பயன்படுத்துகின்றனர். பயிர்களுக்கு இடப்படும் யூரியா உரம் இரண்டு ஆண்டுகளாக விலை உயர்வையும் அதேநேரத்தில், போதுமான அளவு விவசாயிகளுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் சிரமப்பட்டனர். இதனால், மத்திய அரசு யூரியா உரம் போதுமான அளவு குறைந்தவிலைக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஒடிசா மாநிலம், பெர்காம்பூர் நகரில் நேற்று நடந்தது. இதில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அர், “மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளுக்கு யூரியாவின் விலையை உயர்த்துவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதேநேரத்தில், அனைத்து வகை உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேம்பு பூசப்பட்ட யூரியாவைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தவகை யூரியாவுக்கு முதலீடு குறைவு. அதுமட்டுமில்லாமல், அதிக விளைச்சலும் கிடைக்கிறது” என்று கூறினார்.�,