முந்தும் சேட்டன் தோழர்கள், விழிபிதுங்கும் காங்கிரஸ்-நன்னன் சொல்லன்

Published On:

| By Balaji

வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சாதகமான தகவல்களைக் கூறுவதால் உள்கட்சிப் பூசல்களை மறந்து மகிழ்ச்சியில் உள்ளனர் கேரளத்து சிபிஎம் சேட்டன் தோழர்கள். மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் இறங்குகிறார்கள் இடது ஜனநாயக முன்னணி தோழர்கள்.

ஐக்கிய ஜனநாயக முன்னணியைப் பொருத்தவரை முக்கியக் கட்சி காங்கிரஸ் ஆகும். ஆனால், வேட்பாளர்களை அறிவிப்பது அங்கு இழுபறியாக இருக்க, கூட்டணியின் சின்னக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமக்கு ஒதுக்கப்பட்ட 24 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

ADVERTISEMENT

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கியக் கோஷ்டிகளான முதல்வர் உம்மன் சாண்டி, கட்சியின் மாநிலத் தலைவர் வி.எம்.சுதீரன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுக்கு அதிக இடம் பெறுவதில் போட்டாபோட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, முதல்வர் உம்மன் சாண்டி தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் பெரும்பாலானோருக்கு மீண்டும் சீட் கேட்டுள்ளார். இதற்காக, முன்னாள் எதிரியும் உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதாலாவை இப்போது தமக்குப் பக்கபலமாக இழுத்துவைத்துள்ளார். எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்ற கணக்கில் சென்னிதாலா சாண்டிக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

ADVERTISEMENT

ஆனால், சுதீரன் வேறு கணக்குப் போடுகிறார். ஏற்கனவே சாண்டி அரசு ஊழல், ஊழல்களால் தாக்கப்பட்டு பலவீனமாக உள்ளதைக் காட்டி, கட்சியில் தல மட்டத்தில் பலமாக உள்ள தலைவர்களுக்கே சீட் தரவேண்டும் என்று வாதிடுகிறார். இதற்கு பஞ்சாயத்து செய்ய மல்லிகார்ஜுன கார்ஹே திருவனந்தபுரம் வந்து கோஷ்டிகளிடம் பேசிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து 28ம் தேதியன்று காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்துக் கோஷ்டிகளின் தலைவர்களும் மேலிட அழைப்பின்பேரில் டில்லி சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று சோனியா காந்தி தலைமையிலான கட்சியின் மத்திய தேர்தல் குழு மீண்டும் கேரள தலைவர்களை சந்தித்துப் பேசுகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை சோனியா காந்தி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இடது முன்னணி வேட்பாளர்கள் பட்டியலைப் பொருத்தவரை, சிபிஎம் கட்சியின் எலியும் பூனையுமான வி.எஸ்.அச்சுதானந்தன், பினரயி விஜயன் இருவருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பினரயி விஜயன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் களத்தில் குதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் பழுத்த தலைவரும், நான்காவது முறையாக சட்டசபைக்குப் போட்டியிடுபவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் வெற்றிபெற்றால் முதல்வராவதைத் தடுப்பதற்காகவே விஜயன் கோதாவில் இறங்குவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அதோடு, இப் பட்டியலில் சினிமா நட்சத்திரங்கள் முகேஷ், ஊடகவியலாளர்கள் நிகேஷ் குமார், வீணா ஜார்ஜ், ஊடக விமர்சகர் செபஸ்டியன் பால் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். முகேஷ், ஜார்ஜ் இருவரும் சிபிஎம் சார்பில் போட்டியிடுகிறார்கள். இவர்களில் நடிகர் முகேஷ் பழம்பெரும் சிபிஎம் தலைவர் ஓ.மாதவனின் மகன் என்பதும், குமார் கட்சியை உடைத்து தனிக்கட்சி தொடங்கிய எம்.வி.ராகவனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல, அண்மையில் கடும் சர்ச்சைக்குள்ளான நடிகை லலிதாவுக்கு வடக்கன்சேரியில் நிற்க சிபிஎம் சீட் தந்தது. ஆனால், அவர் தேர்தலில் நிற்பதற்கு கட்சிக்குள் பகிரங்க எதிர்ப்புக் கிளம்பி போஸ்டர் யுத்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து, லலிதாவே தமக்கு சீட் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

இன்னும், வீணா ஜார்ஜ், நிகேஷ் குமார், கங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த கேரள காங்கிரஸ் எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பி. சி.ஜார்ஜ் ஆகியோருக்கு சீட் வழங்கியதற்கும் சிபிஎம் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது.

இதுமட்டுமில்லாமல், எதிரிகளைக் கொன்று பழிதீர்த்த வரலாறும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு என்று பகிரங்கமாகப் பேசிய சிபிஎம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.மணிக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைப் பொறுத்தவரை காங்கிரஸ், சி.பி.எம். தலைமையிலான கூட்டணிகள்தான் மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. ஆனாலும் சந்து கேப்பில் பாஜக-வும் மூன்றாவது சக்தியாக பலம்பெற முயற்சிக்கிறது. இதற்காக, தேசிய ஜனநாயக முன்னணியை அமைத்து கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்ரீசாந்த் உட்பட பலரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

கேரளாவில் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, தவிர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவை களத்தில் உள்ளன.

இடது ஜனநாயக முன்னணியில் சிபிஎம் (92), சிபிஐ (27), மதச்சார்பற்ற ஜனதா தளம் (5), தேசியவாத காங்கிரஸ் (4) ஜனாதிபத்திய கேரள காங்கிரஸ் (4), இந்திய தேசிய லீக் (3) உள்ளிட்ட 12 கட்சிகள் உள்ளன. கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடைப்புக்குறிக்குள் உள்ளன.

ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் (90), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (24) , கேரள காங்கிரஸ் (மணி) (15), ஐக்கிய ஜனதா தளம் (5), புரட்சி சோசலிஸ்ட் கட்சி (4) உள்ளிட்ட 8 கட்சிகள் உள்ளன. கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடைப்புக்குறிக்குள் உள்ளன.

தேசிய ஜனநாயக முன்னணியில் பாஜக (92), பாரத் தர்ம ஜன சேனா (37), கேரள காங்கிரஸ்-தாமஸ் (1) ஆகிய கட்சிகள் உள்ளன. கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடைப்புக்குறிக்குள் உள்ளன.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளைப் பொருத்தவரை இடது ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக உள்ளன. பிப்ரவரியில் சி-ஃபோர் ஆசியாநெட்டுடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் 85 இடங்களும், மார்ச் மாதம் இந்தியா டிவி-சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் 89 இடங்களும், இடதுகளுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.

இழுபறி இல்லாமல் ஆட்சி அமைக்கலாம் என்று உட்கட்சிப் பூசலை மறந்து தோழர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் ஊழல் புகார்களாலும், கோஷ்டிப் பூசல்களாலும் நெருக்கடியில் உள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share