முந்திய அப்பாவு, பிந்திய இன்பதுரை: கோர்ட் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

Published On:

| By Balaji

ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் இன்பதுரை தொடர்வாரா அல்லது திமுகவின் அப்பாவு புதிய எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்பாரா என்பதை தீர்மானிக்கும் மறுவாக்கு எண்ணிக்கை இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது.

இதற்காக தபால் வாக்குப் பெட்டி மற்றும் 34 வாக்குப் பதிவு இயந்திரங்கள் நெல்லையிலிருந்து அரசு வாகனங்கள் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டு, இன்று காலை அவை உயர் நீதிமன்றத்துக்கு வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டன. மறுவாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக இன்பதுரை, அப்பாவு இருவரும் உயர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

வாக்கு எண்ணும் பணிகளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் 24 பேர் ஈடுபட்டுள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஊழல் கண்காணிப்புப் பதிவாளர் சாய் சரவணன் நியமனம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இன்பதுரை, அப்பாவு மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

2016 வாக்கு எண்ணிக்கையின்போது ராதாபுரம் தொகுதியில் 262 தபால் வாக்குகள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற்று பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கெஜட் பதிவு பெற்ற அதிகாரி இல்லை என்று இன்பதுரை தரப்பு வைத்த வாதத்தை ஏற்று 262 தபால் வாக்குகளையும் செல்லாத வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கெஜட் அதிகாரிகள்தான், அவர்களும் சான்றொப்பம் அளிக்கலாம் என்று தெரிவித்தது.

இதனையடுத்து, இன்றைய மறுவாக்கு எண்ணிக்கையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 262 தபால் வாக்குகளும் எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், சுமார் 230 வாக்குகள் வரை திமுக வேட்பாளர் அப்பாவுக்கே விழுந்துள்ளது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

2016 தேர்தலில் இன்பதுரையின் வெற்றிக்கான வாக்குகளின் வித்தியாசம் 49 தான் என்பதால், தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியவுடனேயே இன்பதுரை ஆதரவாளர்கள் உதட்டைப் பிதுக்க ஆரம்பித்துவிட்டனர். எப்படியும் உச்ச நீதிமன்றத்தில் சென்று தடைபெற்று விடலாம் என்று நினைத்தோம், இப்படி ஆகிவிட்டதே என்று அவர்கள் புலம்புகின்றனர்.

இதனைத் தொடர்ந்து 19,20,21 சுற்றுகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share