110-வது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்குமிடையே சட்டசபையில் வாக்குவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக-வின் முன்னாள் கல்வி அமைச்சரும், எம்.எல்.ஏ.-வுமான பொன்முடி கல்வித்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி ரூ.4,503 கோடியைப் பெறுவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி கேட்டார்.
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறுகையில், மத்திய அரசு இதுவரை ஒட்டுமொத்தமாகத் தமிழகத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி தரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வற்புறுத்தி உள்ளோம். விரைவில் கிடைக்கும் என்று தெரிய வருகிறது என்றார்.
அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. பொன்முடி பேசுகையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்களைப் பரிந்துரை செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் முதலமைச்சரோ, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதற்கு என்ன அர்த்தம் ? என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் அதற்குப் பதில் தெரிவிக்கையில், பரிந்துரை செய்யப்பட்ட 5 இடங்களில் செங்கிப்பட்டியில்தான் மத்திய அரசு குறிப்பிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதாக மத்தியக்குழு தெரிவித்துள்ளது. அதனால்தான், தமிழ்நாட்டில் எங்கேயாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார் என்றார்.
அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தங்கள் பகுதியில் எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. வாய்ப்புள்ள இடத்தில் அமைக்கப்படும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் என்ன ஆனது என்று அவர் ஏற்கனவே கேட்டிருந்தார். அதற்கான பதிலை தெரிவிப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், 315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. இதில் 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் நிலுவையில் இருக்கின்றன.
2016-17ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் 175 அறிவிப்புகளை வெளியிட்டார். 167 அரசாணைகள் வெளியிடப்பட்டபோது, அந்தப் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு, அதில் 20 பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், 147 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 8 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 அறிவிப்பிற்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்று கூறினார்.
முதல்வரின் பதிலுக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எழுந்து 110-வது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார். அதையடுத்து, 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதற்கு விளக்கம் அளிக்கத் தயார் என்று முதல்வர் தெரிவித்தார்.
திட்ட விவரங்கள் குறித்த தகவலைக் கொடுத்தால்தானே நாங்கள் கேள்வி கேட்க முடியும் என்று தொடர்ந்து ஸ்டாலின் கூறியதற்கு, அனைத்து, விவரங்களையும் 110-வது விதியின் கீழ் அறிவித்துள்ளோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறியபோது, மு.க. ஸ்டாலினுக்கும், அவருக்கும் இதுகுறித்து நேரிடையாக வாக்குவாதம் நடைபெற்றது. அதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தன்னிடம் இருந்த விவரங்களைச் சட்டசபை செயலாளர் மூலம் ஸ்டாலினுக்கு கொடுத்தார். அதன் பின்னர், மீண்டும் விளக்கம் கேட்பதற்காக ஸ்டாலின் எழுந்தபோது, சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை.
திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நீட் நுழைவுத்தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டதே? அதன் நிலைமை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து மாநில அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறிய முன்னாள் முதல்வர் அம்மாவின் கொள்கையில் தெளிவாக உள்ளோம். இதற்காக 2 மசோதா நிறைவேற்றினோம். அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை மத்திய அரசு மசோதாக்களை ஜனாதிபதியிடம் அனுப்பவில்லை. அந்த மசோதாக்கள் மத்திய உள்துறை சட்டப் பிரிவில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 முறை பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். வருகிற 26ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வர உள்ளது.
நீட் நுழைவுத் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக விகிதாச்சார உள் ஒதுக்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.
அமைச்சரின் பதிலுக்கு, திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் எழுந்து, ஆபரேஷன் சக்சஸ். பேசன்ட் டெத் என்று கூறுவது போல் உங்கள் பதில் உள்ளது. ஏன் கால தாமதம் செய்கிறீர்கள். பேசாமல், டெல்லியில் போய் உட்கார்ந்து கேட்க வேண்டாமா என்று கோபமாக பேசினார். அதற்கு அமைச்சர் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கூறுகையில், திமுக. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது என்ன செய்தீர்கள். காவிரி ஆணையம் அமைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நீட் பிரச்னைக்கு காரணமே காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு தான் என்றனர். இவ்வாறாக இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.