இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் முதல் டெஸ்டில் பங்கேற்ற வீரர்களே இந்த ஆட்டத்திலும் தொடர்கின்றனர். காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் ஷர்மா இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்கியுள்ளது. அந்தவகையில் அஸ்வினுக்குப் பதிலாக உமேஷ் யாதவ்வும், ரோஹித்துக்குப் பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் சேர்ந்துள்ளனர்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கினர். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு எதிர்பார்த்ததைப் போல சிறப்பாக அமையவில்லை. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய மார்கஸ் ஹாரிஸ் – ஆரோன் பிஞ்ச் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்தது. இந்த ஜோடியைப் பிரிக்கமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

ஆரோன் பிஞ்ச் 50 ரன்கள் எடுத்த போது பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த முதல் விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணி 35 ஓவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் உஸ்மான் கவாஜா 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மற்றொரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய மார்கஸ் ஹாரிஸ் 70 ரன்கள் எடுத்திருந்த போது ஹனுமா விஹாரி பந்தில் ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளை வரை அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் இஷாந்த் ஷர்மாவிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அந்த அணி 148 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. துவக்கத்தில் விக்கெட் வீழ்த்தத் தடுமாறிய இந்திய அணி, அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி வலுவான நிலையில் தொடர்ந்து பந்துவீசி வருகிறது.









