மாணவர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் துணை வேந்தர் ஒருவர் பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸிபூரில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பூர்வாஞ்சல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜா ராம் யாதவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நீங்கள் இந்த பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தால் என்னிடம் அழுதுகொண்டு வராதீர்கள். நீங்கள் ஒரு சண்டையில் சிக்கிக்கொண்டால் அடித்துவிடுங்கள். முடிந்தால் கொலை செய்துவிடுங்கள். அதை நாங்கள் பின்னர் கவனித்துக்கொள்கிறோம்” என்று கூறினார். அன்றைய தினம், உ.பி. காவல் துறை தலைமைக் காவலர் சுரேஷ் வட்ஸ் கற்களால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
துணை வேந்தரின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பும், கண்டனங்களும் எழுந்துள்ளன. ராஜா ராம் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரப் பிரதேச அமைச்சர் சித்தார்த் நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். “அவர் பேசியது மிகவும் தவறு. அவர் அத்தகைய கருத்துகளை தெரிவிக்கக்கூடாது. மாணவர்களுக்கு அமைதி வழியை கற்றுத்தர வேண்டும், ஆனால் அவர் குண்டர்கள் ராஜ்ஜியத்தை செய்கிறார். இத்தகைய மனநிலை உள்ள ஒரு துணை வேந்தர் அப்பொறுப்பில் இருக்கவே தகுதியற்றவர். அவர் மீது துணை முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “சண்டையிடுங்கள், கொலை செய்யுங்கள், இப்பல்கலைக்கழக துணைவேந்தர் அதை கவனித்துக்கொள்வார். இதைத்தான் இந்நாட்களில் கல்வியாக கற்றுத் தருகிறார்கள். அவரது பேச்சுக்கு அனைவரும் கைத்தட்டியது வியப்பூட்டுவதாக இல்லை” என தெரிவித்துள்ளார்.,