தேசிய கொடியை அவமதித்ததாக மாஃபா பாண்டியராஜன் மீது பதிவு செய்த வழக்கை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 3) ரத்து செய்தது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஜெயலலிதா அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜெயலலிதாவின் உருவ பொம்மை மீது இந்திய தேசிய கொடியை போர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து இந்திய தண்டனை சட்டம், தேசிய சின்னங்களை அவமதித்தல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர்கள் தரப்பில், இந்த வழக்கில் எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகவில்லை. சட்ட விதிகளை பின்பற்றி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, வாக்காளர்களின் அனுதாபத்தை பெறும் நோக்கில் ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக கருத முடியாது. இதில் விதிகளை முறையாக பின்பற்றாமல் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து மூன்று பேர் மீதுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மோனிஷா
