தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நேற்று (ஜனவரி 27) மாலை முதல் இரவு வரை இருந்து பல அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுபற்றி இன்று காலை வெளியான [டிஜிட்டல் திண்ணை](https://minnambalam.com/k/2020/01/28/94)பகுதியில் செய்தி வெளியிட்டுள்ளோம். முதல்வர் நடத்திய ஆலோசனை பற்றி மேலும் சில தகவல்களும் கிடைத்துள்ளன.
இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் பேசியபோது,
“அமைச்சர்களுக்கு இதுவரை பல முறை வாய்க்கட்டு போட்டும் யாரும் கட்டுப் பட மறுக்கிறார்களே என்று எடப்பாடி பழனிசாமிக்கு வருத்தம் அதிகமாக இருக்கிறது. அதுபற்றி நேற்று அமைச்சர்களிடம் வெளிப்படையாக பேசியவர் முக்கியமாக இன்னொரு விஷயம் பற்றியும் விவாதித்திருக்கிறார்.
அதாவது உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30ஆம் தேதி மறைமுகத் தேர்தல் மீண்டும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1 மாவட்ட ஊராட்சித் தலைவர், 1 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் (சிவகங்கை), 26 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் என மொத்தம் 335 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இவை எங்கெங்கு வருகிறதோ அந்த மாவட்ட அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், ‘துணைத் தலைவர் பதவிய சாதாரணமா நினைச்சுட வேணாம். தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றிய இடத்தில் நாம துணைத் தலைவர் பதவியவாது கைப்பத்தணும். அப்பதான் அவங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதனால மறைமுகத் தேர்தல்ல அதிமுக ஜெயிக்கறதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யுங்க ‘ என்று உத்தரவிட்டிருக்கிறார். மீடியாக்கள்ல பேசுறதைக் குறைச்சுட்டு மாவட்டங்கள் வேலையப் பாருங்க. இன்னும் ரெண்டு மாசத்துல நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் வருது. உங்களுக்காகத்தான் அதை தள்ளி வச்சிருக்கோம். அதனால ஒழுங்கா வேலையப் பாருங்க” என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
