மருந்தாளுநர் பணியிடங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Balaji

மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் பி.பார்ம் படித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று, தமிழகத்தில் அரசு மருந்தாளுநர் பணி தேர்வு தொடர்பாக மருத்துவப் பணிகள் இயக்குனர் அறிவிப்பொன்றை வெளியிட்டார். இத்தேர்வுக்கு பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பி.பார்ம் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருந்தாளுநர் பணிகளுக்கு பி.பார்ம் குறைந்தபட்ச கல்வித்தகுதி எனவும், துணை மருத்துவப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கும், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை மார்ச் 21ஆம் தேதியுடன் முடிந்து விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பி.பார்ம் பட்டதாரிகளையும் விண்ணப்பிக்க அனுமதித்தால் தேர்வு நடைமுறைகள் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அரசுத் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்போரின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது எனக் கூறினர். அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்குமாறு உத்தரவிட்டனர். ஆன்லைன் விண்ணப்ப வசதியை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு, மருத்துவப் பணிகள் தேர்வு வாரிய இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று அறிவுறுத்திய நீதிபதிகள், பிரதான வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share