ADVERTISEMENT

மதுரை: மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை!

Published On:

| By Balaji

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 15ஆம் தேதியும், மீனாட்சியம்மன் திக் விஜயம் 16ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 17ஆம் தேதியும் நடக்கிறது. இத்திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆனால் தேரோட்டம் நடைபெறும் தினத்தன்று மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சித்திரை தேரோட்டத்துக்குப் பல மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் மதுரைக்கு வருவார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரையில் தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மதுரையில் மக்களவைத் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 18ஆம் தேதி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் குவிய உள்ளதால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பிலும் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம், தேர்தலை தள்ளி வைக்கக் கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் நடராஜன், ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் புகார்கள் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன, 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும். தேர்தல் விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றால் 1950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்பதால் கூடுதல் ராணுவத்தை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது என்றார்.

திருவிழாவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் விடுமுறை தொடர்பான விவரங்களை மட்டும்தான் கேட்டது. அதற்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை என்று தெரிவித்தோம் என்று குறிப்பிட்டார்.

ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஆட்சியர் வேண்டுமானால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கத் தயார் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share