மதுரையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தும் நிலையில், வழி எங்கும் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை இன்று (பிப்ரவரி 21) தொடங்கினார். கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் வாழ்த்துப் பெற்ற அவர், பின்னர் கலாம் படித்த பள்ளிக்குச் செல்லப் புறப்பட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளியில் இருந்தபடி பள்ளியைப் பார்த்துச் சென்றார். பின்னர், மீனவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் தனித்தனியாக உரையாடிய அவர், பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

**சினிமா நட்சத்திரம் அல்ல, விளக்கு**
இதையடுத்து, ராமநாதபுரத்தில் பேசிய அவர், “இனி நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை ஏற்றிவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்து சற்று தயங்கினேன். யாருக்கும் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அச்சம் நிலவியது. ஆனால் மேடையில் ஏறிய பின்னர் இப்படி ஒரு வாய்ப்பை நழுவவிடக் கூடாது என உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்குத் தனது காரிலேயே அவர் பயணம் செய்தார். திருப்புவனத்தில் பேசும்போது “திருப்புவனம் எப்போதுமே வளமான ஊர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர். இந்த ஊருக்கும், இங்கே இருக்கும் இளைஞர்களுக்கும் முக்கியமான திட்டம் வைத்திருக்கிறேன். அதை இங்குச் சொல்லவில்லை.ஒத்தக்கடை கூட்டத்தில் அறிவிக்கிறேன் அங்கே வாருங்கள்,” என்றார். இதேபோல், ஆங்காங்கே காரை நிறுத்தி மக்களிடம் சில வார்த்தைகளைப் பேசிய அவர், நேரம் போதாமையால் அதிகம் பேச முடியவில்லை என்றும் அடுத்த முறை விரிவாகக் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
**வந்தார் கெஜ்ரிவால்**
இதற்கிடையே, கமலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் மதுரை வந்தார். டெல்லி முதல்வர் என்பதால் அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவரை வரவேற்றார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய கெஜ்ரிவாலோடு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார் கமல். அதேநேரம் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அனைவரும் காணும் வகையில் எல்.சி.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காலை முதலே அவர் ரசிகர்கள் மதுரையை நோக்கி வந்தபடி இருந்தனர். பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் மட்டுமல்லாது தனியார் பாதுகாவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, மதுரை முழுவதும் ‘நம்மவர்’ என்ற பெயரில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசனின் பிரஸ் மீட்டில் கூட ‘நம்மவர்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

**புறப்பட்டார் கமல்ஹாசன்**
விருந்தினர் மாளிகையில் இருந்து ஒத்தகடையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு இன்று மாலை 6.35-க்குப் புறப்பட்டார் கமல்ஹாசன். முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க, அதன் பின்னர் கமல் நற்பணி இயகக்த்தினர் டூவீலர்களில் அணிவகுக்க மதுரையை உலுக்கியது.
கமல் ஏற்றி வைப்பதற்காக 40 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் ஒத்தகடை மேடை அருகே அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் வெள்ளத்துக்குள் நுழைந்து மேடையை அடைந்த பிறகு, கூட்டம் தொடங்கி ஆதரவு அமைப்புகளின் நிர்வாகிகள் பேசி, அதன் பின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உரையாற்றி, கேரள முதல்வர் பினராயி விஜயனின் வாழ்த்து செய்தியும் வாசிக்கப்படுகிறது.
அதன் பிறகே கமல் மேடையேறுகிறார். அதுவரை மதுரை மட்டுமல்ல அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
