திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கடைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியதையடுத்து, 53 கடைகளுக்கு சீல் வைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2ஆம் தேதியன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராய மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மண்டபத்தின் மேற்கூரைகள் இடிந்து, கடைகளும் எரிந்து சாம்பலாகின. மேலும் கோயில்களுக்குள் வைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கோயிலுக்குள் இருக்கும் கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டது. அதையடுத்து, விபத்து நடந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்திலிருந்த கடைகள் அகற்றப்பட்டன.
மதுரையைத் தொடர்ந்து திருச்சியில் பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம், சமயபுரம், திருப்பட்டூர், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை ஒருசில நாட்களில் அகற்ற வேண்டும் என்று அறநிலையத் துறை கெடு விதித்தது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் 21 கோபுரங்கள், 16 கால் மண்டபம், 4 கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த 20 கடைகளையும், மலைக்கோட்டையிலுள்ள 50 கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று இரவு (பிப்ரவரி 16) உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட கடைகளுக்கும், முன்னதாகவே அகற்றப்பட்ட கடைகளுக்கும் சீல் வைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸில், இந்த இடம் திருக்கோயில் பராமரிப்பில் உள்ளது என வாசகம் அடங்கியுள்ளது. இதேபோல திருச்சியில் உள்ள மற்ற கோயில்களில் உள்ள கடைகளுக்கும் விரைவில் சீல் வைக்கப்படும் என இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
