மணல் குவாரிக்கு ரூ. 1.97 கோடி அபராதம்!

Published On:

| By Balaji

சட்டவிரோதமாகச் செயல்பட்ட மணல் குவாரிக்கு ரூ.1.97 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திகைராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா முத்தூர் கிராமத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மணல் குவாரி அமைக்க அனுமதி பெற்று மணல் அள்ளப்படுகிறது. அங்கு மணல் குவாரிக்கு அனுமதி பெற்று, அருகிலுள்ள கிராமங்களிலுள்ள பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான லோடு மணல் அள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “முத்தூர் கிராம மணல் குவாரியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவது குறித்து கண்டிக்கப்பட்டு, குவாரி உரிமையாளருக்கு 1 கோடியே 97 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால், மணல் குவாரி தொடர்ந்து முறைகேடாகச் செயல்படுவதாகக் கூறி மனுதாரர் தரப்பில் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share